அண்ணா பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிப்பதா:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 21, 2019

அண்ணா பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிப்பதா:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.21, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆக்கிர மிக்கும் நோக்கத்தை தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியை நேரடி யாக மாநில அரசுக்கு வழங்கி-கல்வி யின் தரத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசு உதவ வேண்டும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: புகழ்பெற்ற 'அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை' முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருப்பது, உடனடியாக வெளி உலகத்திற்கு தெரியாத உள் நோக்கம் கொண்ட ஒரு அறிவிப்பாக தெரிகிறது. அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தைக் கூறுபோட நினைக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள் கிறேன். அண்ணா பல்கலைக்கழகத் திற்கு 'சிறப்பு தகுதி தருகிறோம்' என்று ஒரு சலுகையைக் காட்டி தமிழகத்திலுள்ள முக்கியமானதொரு பல்கலைக்கழகத்தை-அதிலும் குறிப்பாக அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தை தன் வசமாக்கிக் கொள்ள மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு செயல்படுகிறது.


இதன்மூலம் அந்தப் பல்கலைக் கழகம் மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்காது.  'ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் அது செயல்படும்' என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்த பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத் தையும் மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை மொத்தமாக கைப் பற்றிக் கொள்வதற்கு, பின் வழியாக பயன்படுத்தப்படும் அஸ்திரம்தான் இந்தச் சிறப்பு தகுதி. சிறப்பு தகுதி அளிக்கும் நடைமுறைகள் குறித்து வரைவு விதிகள் வெளியிட்டு, பெயரள வுக்கு ஒரு கருத்துக் கேட்பு வைபவத்தை, புதிய கல்விக் கொள்கையில் கடைப் பிடித்த அதே தந்திரத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு இதிலும் கடைப்பிடிக் கிறது. இந்த 'வரைவு விதிகள்' அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளில் கூட வெளியிடப்பட வில்லை; போதிய  கால அவகாசமும் அளிக்கப் படவில்லை.


மத்திய பாஜக அரசுதான் இப்படி அவசரப்படுகிறது என்றால், இங் குள்ள 'எடுபிடி' அதிமுக அரசோ அதைவிட அவசரம் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு தகுதி அளிப்பதால் '69 சதவீத இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுமா?' என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இது வரை வரவில்லை. முதல்வர் எடப் பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி விவாதித்து “இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று பேட்டி அளித்திருந்தாலும், மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயங் களில் இதுவரை முதலமைச்சர் தெரிந்தே சொல்லி வந்த பொய்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதை நம்ப முடியவில்லை. மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு விதி களிலும், அரசு பல்கலைக் கழகத் திற்குச் சிறப்பு தகுதி அளித்தால் “இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப் பிடிக்கப்படும்” என்று எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.


'சிறப்பு தகுதி' என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள உள்ளூர் மாண வர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு குறையாமல் வெளி நாட்டு மாணவர்களைச் சேர்க்கலாம்; வெளிநாட்டு பல்கலைக்கழகங் களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள் ளலாம் என்பது போன்ற பல்வேறு விஷயங்களும் மாநில அரசின் உத்தரவு இல்லாமல் அல்லது மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்படும் என்பதை இந்த வரைவு விதிகள் தெளிவுபடுத்துகின்றன.


நீட் தேர்வு, ஜிஎஸ்டி, குடியுரிமை திருத்தச் சட்டம் என, மாநில உரி மைகள் பலவற்றிலும் மத்திய பாஜ அரசும், அதிமுக அரசும் இணைந்து போட்ட நாடகத்தை, இந்தச் சிறப்பு அந்தஸ்து விவகாரத்திலும் மீண்டும் கைகோர்த்து அரங்கேற்றி வரு கின்றன. ஆகவே அதிமுக அரசு நியமித்துள்ள இந்த அய்ந்து அமைச் சர்கள் குழுவில் திமுகவுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.


இந்நிலையில் அண்ணா பல் கலைக் கழகத்தின் அருமை பெரு மைகளை உணர்ந்துள்ள துணை வேந்தர்கள், முன்னாள் துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் தலைமையில் ஒரு குழுவினை நியமித்து - அதில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியையும் இடம்பெறச் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும் சிறப்பு தகுதி மாநில உரிமைகளை பாதுகாக்குமா, உயர் கல்வியின் தரத்தை உயர்த்துமா, தமிழகத்தின் இடஒதுக்கீடு கொள் கையை நிலைநாட்டுமா என்பன போன்ற மிக முக்கிய அம்சங்கள் குறித்து மக்களிடமும் அனைத்துப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் ஒரு கருத்துகேட்புக் கூட்டத்தை நடத்திட வேண்டும்.


அந்த அறிக்கையினை தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் வைத்து விவாதித்து, அறிஞர் அண்ணா பெயரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - தமிழர்களின் அடையாளமாக உள்ள பல்கலைக் கழகம், தமிழக அரசின் கட்டுப் பாட்டிலேயே தொடர்ந்து செயல் பட்டு, கல்வியின் தரத்தை தொடர்ந்து உயர்த்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். மத்திய பா.ஜ. அரசும், மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களை எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் ஆக்கிரமிப்பு உள்நோக்கத்துடன் செயல்படுவதைத் தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியை நேரடி யாக மாநில அரசுக்கு வழங்கி- கல்வி யின் தரத்தை மேலும் மேம்படுத்திட உதவிட வேண்டும்.


இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment