காஷ்மீரில் மே முதல் வாரம் போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்,
இதில் அந்தந்த மாநில அரசுகள் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்து உள்ளன. ஆனால், உத்தரப்பிரதேச சாமியார் அரசு, வீரர்களின் ஜாதி பார்த்து, அதாவது வருணாசிரம நிலைப்படி நிவாரணம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சாமியார் முதல்வர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது:
'உத்தரப்பிரதேசம் காஜிப்பூரைச் சேர்ந்த வீரர் அசுவினி யாதவ் வீரமரணம் அடைந்து விட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன். அரசு அவர்களுக்கான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளது' என்று எழுதியுள்ளார்.
அதேபோல், வீரமரணமடைந்த மற்றொரு வீரரான அசுதோஷ் சர்மா என்ற பார்ப்பன வீரரின் குடும்பத்தினர் குறித்து அடுத்த சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது,
'காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி மரண மடைந்த புலந்த்சகரைச் சேர்ந்த அசுதோஷ் சர்மாவின் குடும்பத்திற்கு அரசு ரூ.50 லட்சம் நிதியாக வழங்குகிறது. மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், மேலும் அவர் பிறந்த கிராமத்தில் அவருக்கான மார்பளவு சிலை எழுப்பவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது' என்று எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுதிர்யாதவ் அந்தப் பதிவினை சுட்டிக்காட்டி 'ராணுவ வீரர்களின் மரணத்தில் கூட ஜாதியப் பார்வையா?' என்று அரசை கண்டித்துள்ளார்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது? பாரதீய ஜனதா கட்சியின் - ஆர்.எஸ்.எஸ். கொள்கை இதுதான் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
இராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு, இப்படி பார்ப்பன ஆதிக்கக் கண் கொண்டே எதையும் பார்க்கும் போக்கைத்தான் இது காட்டுகிறது.
சூத்திர சம்பூகன் தவமிருந்தான் என்பதற்காகத்தானே இராமன், சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றான்.
அரசுத் தொலைக்காட்சிகளில் இராமாயணம் - மகா பாரதம் போன்ற இதிகாசங்களை மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்புவதும், இந்த வருணாசிரம - ஜாதிய வாத எண்ணத்தை ஊட்டுவதற்காகத்தான்.
இதனைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சொந்த மாநிலத்தில் மரணமடைந்தவர் இருவரில், ஒருவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் பார்ப்பனர் என்கிறபோது, பிற்படுத்தப் பட்டவர் மரணத்தை ஒரு பார்வையில் அணுகுவதும், பார்ப்பனர் என்றால் வேறு பார்வையில் அணுகுவதும் சரியா? அதுவும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் சட்டப்படியாக அதனை மதிப்பீடு செய்ய வேண்டுமே தவிர - தான் சார்ந்திருக்கும் உயர்ஜாதி வருணக் கண்ணோட்டத்தோடு நடந்து கொள்வது சட்டப்படி தவறாகும். இந்தப் போக்கை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டால் அவர் நிலை என்னாகும்?
குறிப்பாக உ.பி.யில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தலைவர்கள் இந்தப் பிரச்சினையை சாதாரணமாகக் கருதாமல் மக்கள் பிரச்சினையாக்கி, பா.ஜ.க. பாசிசத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
வெளி மாநிலங்களில் உள்ள சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் பா.ஜ.க.வின் இந்தப் போக்கை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
No comments:
Post a Comment