கடவுளை மற, மனிதனை நினை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

கடவுளை மற, மனிதனை நினை!

கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக மக்கள் மட்டும் வறுமையாலும், போதாமையாலும் அன்றாட வாழ்வுக்கே அல்லல்படுவதாகக் கருதவேண்டாம். "தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்" என்று பெரிதாகப் புகழப்படும் திருப்பதி ஏழுமலையானே கஷ்ட ஜீவனத்தில்தான் இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது பற்றிய தகவல்கள் வருமாறு:


"மார்ச் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்துவந்த  ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களுக்குச் சம்பளம் தர எங்களிடம் பணம் இல்லை. ஆகவே, அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவவேண்டும்" என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் எனப் பல வழிகளில் திருவிழா நாட்களில் நாளொன்றுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரையும், மற்ற நாட்களில் ஒரு கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையும் வருவாய் கிடைத்தது. ஆனால், கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கின் எதிரொலியாக கோயில் நடை அடைக்கப்பட்டது.


கிட்டத்தட்ட 50 நாட்களாகக் கோயில் அடைக்கப்பட்டு இருக் கிறது. இந்நிலையில் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு  ரூ. 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிரந்தரச் செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி செலவிடப்படும். ஆனால், இந்தத் தேவைகளுக்காக ஏற்கெனவே ரூ. 300 கோடி செலவிடப்பட்டுவிட்டது என்றார்.


திருப்பதி கோயில் நிர்வாகத்திடம் 8 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. பல்வேறு வங்கிகளில் ரூ.14,000 கோடி நிரந்தர வைப்புத் தொகையும் இருக்கிறது. ஆனால், இதில் எதையும் எடுக்காமல் செலவுகளைச் சமாளிக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் திட்டமாக இருக்கிறது.  இந்த விவகாரத்தில் அரசின் உதவியை நாங்கள் நாட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


 இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் பார்ப்பனர் அர்ச்சகர் ஒருவர் கூறும் போது, “திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் தரும் உண்டியல் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், இதர அசையா சொத்துக்கள் போன்றவை சிறீவெங்கடாசலபதிக்குக் கொடுக்கப்பட்டதாகும். விதிப்படி ஒருவருக்குக் கொடுத்ததை அவரது அனுமதி இல்லாமல் எடுக்க முடியாது. வெளியில் என்னதான் பலர் திருப்பதி கோயிலுக்குப் பல ஆயிரம் கோடிகள் பணம் உள்ளதே என்று கூறினாலும், அதை எடுக்க கோவில் நிர்வாகத்தினரால் முடியாது. இந்த விவகாரத்தில் அந்தப் பணத்தை யாருமே எடுக்க முடியாது. ஆகவே, ஊரடங்குக் காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை அரசின் உதவி மூலம் தான் நிவர்த்தி செய்து அனைவருக்கும் சம்பளம் தரமுடியும்" என்று கூறினார்.


ரிசர்வ் வங்கி உத்தரவால் யெஸ் வங்கி பிப்ரவரி இறுதி வாரத்தில் திவாலானது என அறிவிக்கப்பட்டது. அதிலுள்ள பணத்தை யாருமே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டில் இந்த வங்கியில் திருப்பதி தேவஸ்தானப் பணம் ரூ.1,600 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. வங்கி திவாலாகும் என்று அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாக திருப்பதி கோவில் நிர்வாகம் இந்தப் பணத்தை எடுத்துவிட்டது. இதற்குக் கோவில் நிர்வாகம் சார்பில் கூறும்போது, ‘‘பகவானுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட பணம் பறிபோகாமல் இருக்க பகவானே எங்குள்ளது என முன்பே எச்சரிக்கை செய்து விட்டார். ஆகையால் பகவானின் பணம் திரும்பவந்துவிட்டது" என்று கூறியிருந்தனர். இந்த ரூ.1,600 கோடி பொருளாதார சரிவு மற்றும் ஊரடங்குக் காரணமாக இதுவரை எந்த வங்கியிலும் டெபாசிட் செய்யப்படாமல் கோயில் நிர்வாகத்தின் கைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஊரடங்கு நிலையால் ஏழுமலையானின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தே - கோயில் என்பது வரவு-செலவு பார்க்குமிடம் என்பது தெளிவாகிவிட்டது.


கல் முதலாளியாகிய இந்தக் கடவுளுக்கு வங்கிகளில் 14,000 கோடி ரூபாய் வைப்பு நிதியாக உள்ளதாம். 8 டன் தங்கம் இருப்பில் உள்ளதாம். இவ்வளவு இருந்தும் பணியாற்றுவோருக்குச் சம்பளமும், நிருவாகச் செலவுக்குப் பணமும் இல்லாமல் தவிப்பாம்.


இருப்பில் உள்ள பணத்தை எடுத்துச் செலவு செய்யக் கூடாதாம். ஏன் செலவு செய்யக் கூடாது என்பதற்கும் விளக்கம் சொன்னால், புரிந்து கொள்ள உதவியாக இருக்குமே!


ஏழுமலையான் அனுமதியின்றி அந்தப் பணத்தை எடுக்கக் கூடாதாம். அனுமதி என்றால் எப்படி? விளக்கம் சொன்னால் நல்லது. தேவஸ்தானக் குழுத் தலைவரை நேரில் கூப்பிட்டு ஏழுமலையான் சொல்ல வேண்டுமா? அவர் என்றாவது பேசியிருக்கிறாரா? என்பன போன்ற கேள்விகள் எழாதா? இப்படி எல்லாம் கேட்டால், ‘அய்யயோ பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறார்களே!‘ என்று ஓலமிட்டுப் பயன் என்ன?


அய்தீகப்படி அவர்கள் ஒன்று சொல்லலாம், ஏழுமலையான்  தனது திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கினானாம். அந்தக் கடனை அடைக்கத்தான் கோயிலில் உண்டியல் வசூலாம்.


‘பிள்ளை விளையாட்டு' என்று வடலூர் இராமலிங்கம் அடிகளார் சொன்னதுதான் எத்துணை உண்மை!


ஒன்றை மட்டும் பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் - இந்தச் சந்தர்ப்பத்தில்.


ஏழுமலையானுக்கே கஷ்டம் வரும், நஷ்டம் வரும். அவரால் அதனைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்கிற போது, பக்தர்களே! உங்கள் கஷ்டத்தை எப்படித் தீர்ப்பார்? எங்கேயிருந்து தீர்ப்பார்?


குடிமக்கள்தான் அரசு உதவியை நாடுகிறார்கள் என்றால், ‘எல்லாம் வல்ல’(?) கடவுளும் அரசையே எதிர்பார்க்கும் நிலை. 'கடவுளை மற, மனிதனை நினை' என்றார் தந்தை பெரியார் - அதனை இதோ நடைமுறையில் பார்க்கிறோம். தேவை விஞ்ஞான மனப் பான்மை - அரசமைப்புச் சட்டம் அதைத்தான் கூறுகிறது. (51-ஏ(எச்)).


இந்த நேரம் தான் கடவுள் நம்பிக்கையைப்பற்றி மறுபரிசீலனை செய்யக் கூடிய பொருத்தமான காலம்!


கோயில் சொத்து என்பது மனிதர்கள் - பக்தியால் கொடுத்ததுதான். அந்த மக்களுக்கு ஒரு கஷ்டம் என்று வரும்போது அந்தச் சொத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட மக்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா?


கருணையே வடிவானவன் கடவுள் என்றால் அப்படித் தானே நடந்து கொள்ள வேண்டும். இதைச் சொன்னால் மனதைப் புண்படுத்துவதாகுமா? மனிதன் கஷ்டப்படுவது அவன் தலை எழுத்து என்பதெல்லாம் கருணையற்ற கூற்றே!


No comments:

Post a Comment