வயதான - நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாத பக்தர்களுக்கு மும்பையில் திருக்கல்யாணமும், பிர மோற்சவ விழாக்களும் ஏற்பாடு செய்து பணம் பார்த்த திருப்பதி நிர்வாகம் இப்போது மானிய விலைக்கு பெருநகரங்களில் லட்டு விற்க ஏற்பாடு செய்துள்ளதாம். 'துக்ளக்' சோ ராமசாமியே ஒரு முறை எழுதினார் - பணமிருந்தால் இனி வீட்டுக்கு வீடுகூட ஏழுமலையான் வருவார் என்றார் கிண்டலாக.
கரோனா வைரஸ் காரணமாக அனைத்துக் கோவில்களும் பூட்டப்பட்டு, பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதியில் இருந்து திருப்பதியிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திருப்பதி பிரசாதமாவது பக்தர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள் என்று பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்களாம்.
இதனைத் தொடர்ந்து மும்பை, சென்னை, பெங்களூரு, அய்தராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திருப்பதி லட்டுகளை மானிய விலைக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவர் யு.வி. சுப்பா ரெட்டி, மூன்று நாட்களுக்குள் எப்போது இந்த இடங்களில் லட்டுகள் கிடைக்கும் என்பதை அறிவித்துவிடுவோம் என்று கூறியுள்ளார். எங்களிடம் மொத்தமாக லட்டுகளை வாங்கி, இலவசமாக விநியோகம் செய்ய விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
லட்டுவின் விலை ரூ.50. ஆனால், மானிய விலையில் ரூ. 25க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான தகவல் மய்யங்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களில் இந்த லட்டுகள் கிடைக்கும். திருப்பதி கோவிலில் நிதி தட்டுப்பாடு இருப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நிதி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று அவர் பதில் அளித்துள்ளார்.
இதே திருப்பதி கோவில் நிர்வாகம் தான் சுமார் 1,400 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, அதே போல் 400-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் தர பணம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு கைவிரித்துள்ளது - செய்தியாக வந்தது.
கடந்த 60 நாட்களாக வருவாய் இன்றி அரசிடமும், தொண்டு நிறுவனங்களிடமும் உணவிற்காக கையேந் திய நிலையில் மக்கள் இருக்கும்போது கோவில் நிர்வாகத்திடம் பிரசாதம் கேட்டதாக கோவில் தலைமை நிர்வாகி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மலை அடிவாரம் முதல் திருப்பதி கோவில் உள்ளே வரை திருப்பதி லட்டு என்ற பெயரில் டூப்ளிகேட் லட்டு விற்பனை செய்யப்படுவது குறித்தும், இவ்வாறு செய்பவர்களில் பெரும்பாலானோர் கோவில் நிர்வாகி மற்றும் நிர்வாகிகளுக்கு நெருக்கமானோர் என்றும் அன்றாடம் செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போது - நாடு முழுவதுமே இவர்கள் லட்டுகளை விற்பனை செய்யும் திட்டம் வந்தால் கோவில் நிர்வாகிகளே போலி லட்டுகளை தயாரித்து விற்பனை செய்து பணம் பார்க்கும் நிலை ஏற்படும்.
கரோனா வந்தாலும் வந்தது - இந்தக் கோவில்கள், கடவுள்களின் வண்டவாளம் தண்டவாளங்களில் ஏறி விட்டன.
படி அளக்கும் பெருமாள் என்பதெல்லாம் கட்டுக் கதையாகி விட்டது. கரோனா என்னும் நோய் சக்திக்குமுன் இந்தக் கடவுள்கள் - கோவில்கள் மூடும் நிலைக்கு ஆளாகி விட்டன.
இந்த நிலையில் 'திருப்பதி' லட்டு என்ற 'பிராண்ட்' பெயரை வைத்துத் தொழில் நடத்தும் நிலையை என்ன சொல்வது?
"பக்தி ஒரு ஃபேஷனாகி விட்டது. வர்த்தக மனப் பான்மை - அதாவது பிசினஸ் மனப்பான்மை பக்தர்களிடம் ஏற்பட்டு விட்டது" என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் கூறியது சரிதானே!
No comments:
Post a Comment