ஆசிரியர் விடையளிக்கிறார்: ‘உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்: ‘உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு


கேள்வி 1: ‘உஞ்ச விருத்திக்கும்‘ பிச்சை எடுப்ப தற்கும் என்ன வேறுபாடு?


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில் : உஞ்சி விருத்திக்கும் பிச்சை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிய விரிவான விளக்க விடை இதோ: அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘ஹிந்து மதம் எங்கே போகிறது?‘ என்ற நூலில் (57ஆம் பக்கத்தில்)


“.... சங்கரர், சந்நியாசிகள் எப்படி வாழ வேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு, தன்னைப் பின்பற்றும் அதாவது சந்நி யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.


சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்தி ருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருட்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்பதோடு - மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாசி பண்பாடு.


சந்யாசி அக்னியைக் கூட தேவைக்காக நெருங்ச்கக் கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்ற சங்கரர் ‘சந்யாச ஸ்மிருதி’ வகுத்த விதியைக் கடுமையாகப் பின்பற்றினார்.






கடிகாரச் சுற்றுப்படி: 
உ.வெ.சாமிநாதையர், ஆதிசங்கரர், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், மதுரைத் தமிழ்ப் பேரகராதி


‘சந்யாச ஸ்மிருதி’யா அது என்ன சொல்கிறது?


ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி, எப்படி வாழ வேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் ‘சந்யாச ஸ்மிருதி’


“பததீ அஸோவ் ஸ்வயம்


பிக்‌ஷ ஹீ யஸ்ய ஏதது


த்வயம் பவேது”


சந்நியாசியானவன் பணத்தைக் கையால் தொட்டால்கூட அது மிகப் பெரிய பாவம்.


- சந்யாச ஸ்மிருதி.


‘உஞ்ச விருத்தி’ என்பதற்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி (உ.வே.சுவாமிநாதய்யர் தொகுத்து 1937இல் வெளியானது. இ.மு.கோபாலகிருஷ்ண கோன் வெளியீடு) சொல்லும் பொருள் என்ன?


‘உரலருகிலும் வயலிலும் ஒவ்வொரு தானியமாய் பொறுக்குதல்’ என்று பொருள் கூறுகிறார்.


எவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்கிறாரோ,


அவர் சந்நியாச ஸ்மிருதிப்படி - பிச்சை யெடுக்கிறார் என்பதே சரியானது.


எவர் உரல் அருகிலும் வயலிலும் தானியம், அதுவும் ஒவ்வொரு தானியமாக பொறுக்குபவரோ, அவரே - உஞ்சி விருத்தியார்.


பொதுவாக சந்நியாசிகள் மட்டுமல்ல, பிராமணர்கள் என்பவர் உண்மையில் பிராமண - வர்ணாசிரமப்படி ஒழுக வேண்டுமானால் அவர்கள் மநுதர்மப்படி பிச்சை யெடுத்தே வாழவேண்டும். இதை மனுதர்மம் மட்டுமல்ல, காஞ்சி சந்திரசேகரந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படும் ‘மூத்த பெரியவாள்’ ‘மகா பெரியவாள்’ தெய்வத்தின் குரலில் தனது உரையிலும் கூறியுள்ளார்!


ஏன் கும்பகோணத்தில் ஒரு தெருவுக்கே ‘பிச்சை பிராமணர் தெரு’ என்றே பெயர் இன்னும் இருக்கிறதே!


எனவே சந்நியாசிகளுக்கும் பிச்சைதான் உரியதர்மம் - உஞ்ச விருத்தி அல்ல; பிற்கால நடைமுறையில் பார்ப்பனர்கள் பெறுவதற்கு ‘பிச்சை’ என்ற பெயரை மாற்றி உஞ்ச விருத்தியாக்கி விட்டார்களே என்பது நமக்குத் தெரியாத ஒன்றா?



கேள்வி 2: பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமா? சாத்தியம் எனில் அது கள்ளச் சாராயத்திற்கு வழிவகுக்காதா? சாத்தியம் இல்லை எனில் வாழ்வியல் எப்படி இருக்கும்?


 - தேன்மொழி அன்பரசன், குடியாத்தம்


பதில்: ஏன் சாத்தியப்படாது? - இந்தியா முழுமைக்கும் முழு விலக்கை உருவாக்கினால் பெரிதும் வெற்றி பெறும்.


முதல்வர் கலைஞர் அவர்கள் முன்பு நிதி நிலை அறிக்கை உரையில் குறிப்பிட்டபடி “கொழுந்துவிட்டு எரியும் தீ வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக ஒரு மாநிலம் மட்டும் இருந்தால் முழு வெற்றி அடையாது.”


கள்ளச்சாராயத்தைக் காய்ச்சாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மகளிரை உள்ளடக்கிய, கிராமக் குழுக்களை உருவாக்கி, நேர்மையுடன் செயல்படும் காவல்துறை குழுவுடன் இணைத்துச் செயல்படும், நல்ல ஆளுமை நிறைந்த முதல்வர் - ஆட்சியாளர் இருந்தால் சாத்தியமே! சில சட்ட மீறல்களால் அச்சட்டமே தோல்வி என்று கூற வேண்டியதில்லை. 80% வெற்றி பெற்றாலே மனித குலம் தழைக்கும். மனமும், துணிவும், தெளிவும், ஆளுமைத் திறனும் இருந்தால் வெற்றி நிச்சயம்!


கேள்வி 3: அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதைக் கடுமையாக எதிர்ப்போர், அனைத்து ஜாதியினரும் உண்டியலில் காசு போடுவதை மட்டும் எதிர்ப்பதில்லையே.. ஏன்?    


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: மில்லியன் டாலர் கேள்வி - விலைமதிப்பற்றது!


‘தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய்’


என்ற சிதம்பரம் இசைச் சித்தர் ஜெயராமன் பாடிட, பராசக்தி படத்தில் கேட்டிருப்போம். காசுக்கு, நோட்டுக்கு ஏதுங்க தீட்டு...?


அதுபோல பச்சைக் காய்கறிகள், பச்சரிசி, பால், மோர், தயிர், நெய் வெண்ணெய் எல்லாம் விலக்குப் பட்டியல் - அவாள் கணக்குப்படி!


கேள்வி 4: மருத்துவக்கல்வி பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே இல்லை என்பதை அறிந்து மக்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து போராட முன்வருவார்களா?            


- குடந்தை க.குருசாமி, கும்பகோணம்


பதில்: போராட வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் கைகளில் உள்ளது! நம்பிக்கை தளரவில்லை!


கேள்வி 5: கொரோனாவிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளைக் கழுவச் சொல்வோர், கைகளிலே கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்தெறியுங்கள் என்று சொல்வதில்லையே ஏன்?                               


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: கைகளில் கட்டியிருக்கும் கயிறுகளால் கூட கரோனா தொற்று நோய்க் கிருமி பரவ வழி உண்டே! கடிகாரம் கூட கட்டாதீர்கள் என்கிறார்களே! புரியவில்லையே என் செய்வது? மரமண்டைகள் என்று நம் மண்டைகளைக் குத்திக் கொள்ள முடியாதே!


கேள்வி 6: மதுக்கடையைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றமே அனுமதி வழங்கிய பிறகும், இந்நாட்டில் நீதி எனும் வார்த்தைக்கு அர்த்தம் உள்ளதா?


- வெங்கட. இராசா, ம.பொடையூர்.


பதில்: மதுவிலக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பது அல்ல வழக்கு. குறிப்பிட்ட பிரச்சினையில் என்ன என்று சட்டத்தின் கண்களை இறுக்க நெருக்கிக் கொண்டதன் விளைவே அது!


கேள்வி 7: தந்தை பெரியார் அவர்களுக்கு இந்தி மொழி நன்றாகத் தெரியும் என்று என் நண்பர் ஒருவர் கூறுகிறார் அது உண்மையா?              


- தமிழ்க்குமரன், ஈரோடு


பதில்: உண்மை இல்லை.


கேள்வி 8: திருமணத்திற்கு மணப்பெண் பார்க்கச் சொல்லும்பொழுது குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பார்க்கச் சொல்கிறார்கள். குடும்பப் பெண் என்றால் என்ன? இந்த வார்த்தை ஆண்களுக்கும் பொருந்துமா?         


- மு.பவானி, சாந்தோம்.


பதில்: அது அவர்களைத்தான் கேட்க வேண்டும்!  House Wife  என்று மொழி பெயர்க்கலாம் என்பதுபோல் ஒரு சொல்லாடல் - அர்த்தமற்றது. எல்லாப் பெண்களும் குடும்பத்தில் உள்ள பெண்கள்தானே! ஆண்களுக்கு இப்படிப் பல வார்த்தைகள் இல்லையே-வசதியாக!


கேள்வி 9: கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஊரடங்கு உண்மையில் வெற்றி பெற்றிருக்கிறதா - உலக அளவிலும், இந்திய அளவிலும்?         


  - கண்ணன், நரிப்பையூர்


பதில்: இல்லை. ஓரளவு தான் வெற்றி என்பதே உண்மையான விடையேயாகும்.


No comments:

Post a Comment