‘‘பெண்கள் உரிமைப் போராட்டப் பேரிகை நாள்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

‘‘பெண்கள் உரிமைப் போராட்டப் பேரிகை நாள்!''

துணிவு கொள்க - தெளிவு கொள்க - உறுதிப்பாட்டோடு போராட்டக் களத்தில் நிற்க, வெல்க!


அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு நாளில் பேரிகை கொட்டுகின்ற முழக்கம்


காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரை



சென்னை, மே 12  துணிவு கொள்க! தெளிவு கொள்க!! உறுதிப்பாட்டோடு போராட்டக் களத்தில் நிற்க, வெல்க! என்பதுதான் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்களுடைய நினைவு நாளில், இந்தப் பேரிகை கொட்டுகின்ற முழக்கம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு நாளில் காணொலி மூலம்   உரையாற்றினார்.


அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார்


நினைவு நாள்


நேற்று (11.5.2020) அன்னை ஈ.வெ.ரா.நாகம் மையார் நினைவு நாளில், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:


அனைத்துத் தோழர்களுக்கும் வணக்கம். இந்த நாள் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பொதுத் தொண்டில், தொண்டு செய்து பழுத்த பழமாக ஆவதற்குத் துணை நின்ற அவருடைய வாழ்விணையர் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்களுடைய நினைவு நாளையொட்டிய இந்த நிகழ்வு ஓர் புதுத் திருப்பமாகும்.


‘‘பெண்கள் உரிமைப் போராட்டப்


பேரிகை நாள்''


‘‘பெண்கள் உரிமைப் போராட்டப் பேரிகை நாள்'' என்ற தலைப்பில், இதனை இந்த ஆண்டு முதல் தொடர்ந்து நம்முடைய இயக்கம் நடத்த விருக்கிறது. அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை பேசுகின்ற என்னைப் போன்றவர், கேட்கின்ற உங்களைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில், செயற்கரிய செயல்களைச் செய்தவர்.


‘‘திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்''


அதுமட்டுமல்ல, சுயமரியாதை இயக்கம் பிறக் காத காலத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களை வாழ்விணையராகக் கொண்டவர். அவர் எளிமையான ஒரு குடும்பத்திலிருந்து வந்தாலும், பிறகு வளமையான குடும்பமாக மாறிக் கொண்டார்கள் என்பதற்கு அடையாளமாக, திரு.வி.க.வும், டாக்டர் வரதராஜூலு நாயுடுவும் ஈரோட்டிலே சந்திக்கின்றபொழுது, தந்தை பெரியார் அவர்களும், அன்னை ஈ.வெ.ரா.நாகம் மையார் அவர்களும் எப்படி இருந்தார்கள் என்பதை ‘‘திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்'' நூலிலே திரு.வி.க. பேசுகிறார் கேளுங்கள்:


‘‘நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியின் தோற்றம் மணி பூத்த பொன் வண்ணமாகப் பொலிந் தது. அவர் (நாயக்கர்) ஜமீன்தாரராகவும், இவர் ஜமீன்தாரணியாகவும் காணப்பட்டார்கள்'' இப்படி வாழ்க்கைக் குறிப்பிலே திரு.வி.க. எழுதுகிறார். இது 1919 ஆம் ஆண்டு.


அப்படிப்பட்ட அவர்கள், பிறகு எவ்வளவு எளிமையாக மாறிப் போனார்கள். வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்கள் என்பதை முதலில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடமாகும்.


அன்னை நாகம்மையாரை, சுயமரியாதைத் தத்துவத்தைப்


படிக்க வைத்தவர் தந்தை பெரியார்


இரண்டாவது, எப்படி ஜோதிபாபூலே அவர்கள், சாவித்திரி பூலே அவர்களுக்குப் படிப்பை சொல்லிக் கொடுத்து, பள்ளிக்கூடத்தை வைத்து மாணவிகளைத் தயாரிப்பதற்கு, 18 ஆம் நூற்றாண்டில் மகாராட்டிராவில் ஒரு கல்விப் புரட்சியை உருவாக்கினார்களோ, ஒரு மிகப்பெரிய அறிவுப்புரட்சியை உருவாக்கி னார்களோ அதேபோலத்தான், அதிகம் படிக் காத அன்னை நாகம்மையார் அவர்களை, சுயமரியாதைத் தத்துவத்தைப் படிக்க வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.


வைதீகக் குடும்பம், ஆழமான எண்ணம் இவற்றையெல்லாம் மாற்றி, மிகப்பெரிய சுயமரியாதை இயக்கத்திற்குத் தொண்டராக வருவதற்கு முன்னால், தேசிய இயக்கங்களுக்குத் தலைமை தாங்கி, போராட்ட வீராங்கனையாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.


இது அடுத்த திருப்பமானது; சாதாரண மானதல்ல.


விருதுகளுக்கெல்லாம் மேற்பட்ட பெருமை!


இந்திய வரலாற்றிலேயே தேசப்பிதா என்று அழைக்கப்படக் கூடிய அண்ணல் காந்தியடிகளால், ‘‘இதனுடைய முடிவு இரண்டு பெண்மணிகளின் கைகளில் இருக்கிறது. ஈரோட்டிலேதான் அந்தப் பெண்மணிகள் இருக்கிறார்கள்'' என்று அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார்அவர்களைப்பற்றி குறிப்பிட்டார்கள். இந்தியாவிலே வேறு எந்தப் பெண்மணிக்கும் கிடைக்காத மிகப்பெரிய விருது; விருதுகளுக்கெல்லாம் மேற்பட்ட பெருமை.


ஏறத்தாழ 95 ஆண்டுகளுக்கு முன்பாக...


அப்படிப்பட்டவர், போராட்டக் களத்திலே நின்று, கள்ளுக்கடை மறியலாக இருந்தாலும், அதிலே பயிற்சி பெற்று; அதற்குப் பிறகு வைக்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் போராடிய நேரத்தில், அவர் கைதாகி சிறைக்குச் சென்றபொழுது, தன்னு டைய ஊரிலிருந்து மகளிரை அழைத்துச் சென்று, வேறொரு நாட்டிற்குச் சென்று, இன்னொரு பகுதியிலே, மொழி தெரியாத பகுதியிலே, அறிமுகமில்லாத மக்கள் மத்தியில், ஒரு புதிய அரசாங்கத்தினுடைய அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, அவர்கள் களத்தில் நின்றார்கள் என்றால், அதுவும் எந்த ஆண்டு தெரியுமா? ஏறத்தாழ 95 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வு அந்த நிகழ்வு.


வைக்கம் போராட்டத்தில் அவர்கள் தன்னந் தனியராக ஈடுபட்ட நேரத்தில், அதிகாரிகளின் மிரட்டல்கள், உருட்டல்கள் எல்லாம் வந்த நேரத்திலும், அன்னை நாகம்மையார் அவர்கள் எப்படி தன்னுடைய தோழியர்களுடன் சென்று, போராட்டக் களத்தில் நின்றார், வென்றார் என்ற செய்திகளையெல்லாம் அண்மையில் பழ.அதிய மான் அவர்களுடைய நூலிலே விரிவாக, விளக்க மாக வந்திருக்கிறது.


அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட அன்னை நாகம் மையார் அவர்கள், தலைசிறந்த சுயமரியாதை இயக்கப் பெண்ணுரிமைப் போராளியாகவும், இயக்கத்தினுடையகொள்கையானஜாதிஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு அடையாளமாகவும், எத்தனை சுயமரி யாதைத் திருமணங்கள், விதவை மறுமணங்களை, ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தார்.


மணமக்களைக் கடத்திச் சென்றுவிடுவார்களோ என்றஅச்சத்தைக்கடந்துதிருமணஏற்பாடுசெய்துபாதுகாத் தவர் என்று இப்படி எத்தனையோ எதிர்நீச்சல் களையெல்லாம் அவர்கள் செய்திருக்கிறார்கள்.


அத்தனைப் பேருக்கும் ஒரு தாயாக இருந்தவர்!


அதுமட்டுமல்ல,அவரிடத்தில்பழகிய,பெரியா ருக்குப் பாதுகாவலர்களைப்போல, தொண்டர் களைப் போல இருந்த அத்தனைப் பேருக்கும் ஒரு தாயாக நின்று, இன்றைக்கு எப்படி நாகம் மையார் குழந்தைகள் இல்லம், ஆதரவற்ற குழந்தை களையெல்லாம் அரவணைத்துக் கொள்கிறதோ, அதுபோல, கொள்கை உள்ளத்திலே, பாசறையிலே பயின்றவர்களுக்கெல்லாம் தாயாக, விருந்து உபசரிப்பவராக என்றைக்கும் இருந்திருக்கிறார், இல்லத்திலே, ஒரு இல்லத்தரசியாக.


ஒரு மிகப்பெரிய போராட்டக் கள வீராங் கனையாகவும், அதேநேரத்தில் மனிதாபிமானம் மிக்க ஒரு இல்லத்து அரசியாகவும், இயக்கத்திற்குப் பெருந்துணையாக இருக்கக்கூடிய அவர், ஒரு ஆளுமை நிறைந்த, ஒரு தனித்தன்மை வாய்ந்த எடுத்துக்காட்டானவர் என்பதற்கு மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால்,


‘குடிஅரசி'னுடைய பத்திராதிபர். அதற்காகப் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்குப் போட்ட நேரத்தில், அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தார்கள். அதை யெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல், பக்கு வப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியம்.


இந்தியாவில் எவரும் கேள்விப்பட முடியாத


ஒரு மனத்துணிவு


அவர் படித்தது பெரியாருடைய பள்ளியில், கல்லூரியில்தான் என்பதற்கு அடையாளம்தான், ஒவ்வொரு முறையும், அய்யா அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைவிட, அதிகமான சோதனை களைத் தாங்குகின்ற நேரத்தில், இரட்டிப்பு மடங்கு தாங்குகின்ற நேரத்தில், அதை அவர்கள் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


பிரிட்டிஷ் அரசாங்கத்தினுடைய அடக்குமுறை; நீதிமன்றம், தண்டனை என்பதையெல்லாம் ஏற்றுக் கொண்டு, பத்திராதிபராக இருந்து ஆளுமையைக் காட்டியிருக்கிறார்.


அதைவிட இன்னொரு சிறப்புச் செய்தி என்ன வென்றால், இந்தியாவில் எவரும் கேள்விப்பட முடியாத ஒரு மனத்துணிவு.


அய்யா அவர்கள் வைக்கத்தில் போராடி, சிறைக்குச் செல்கிறார்; சிறையிலிருந்து வெளி வந்து, மீண்டும் போராடுகிறார். சிறைக்குச் செல் கிறார்; மறுபடியும் அவர்கள் வெளியே வந்து, ஈரோட்டிற்கு வருகின்ற நேரத்தில், தன்னுடைய வாழ்விணையரைப் பார்க்கவேண்டும், தனது குடும்பத்தினரைப் பார்க்கவேண்டும் என்று நினைக்காமல், களத்திலிருந்து வந்தவுடன், வழக்கு ஒன்றில் ஆஜராகவேண்டும் என்பதற்காக வருகிறார்.


பழ.அதியமான் நூலில் பதிவு செய்திருக்கிறார்!


அப்பொழுது ‘குடிஅரசு' இதழில் ஓர் அறிக்கை வெளியிடுகிறார். என்னுடைய வாழ்விணையர் ஈ.வெ.ரா. அவர்கள் மீண்டும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் - இறுதிவரையில் போராட வேண்டும் என்றாலும், இப்பொழுது வழக்கிற்காக இங்கே வந்திருக்கிறார். இந்த வழக்கு 124-ஏ, பல ஆண்டுகள் தண்டிக் கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். என்றாலும், இந்த வழக்கு முடிந்து, தண்டனை பெற்று, அதற்குப் பிறகு அவர் போராட்டக் களத்தில் பங்கேற்று, வெற்றி பெறக்கூடிய அளவிற்கு, அவர்களை நான் வேண்டுகிறேன், மகாத்மாவை வேண்டுகிறேன், கடவுளை வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


‘‘நாடார் குல மித்திரன்'' பத்திரிகையிலும் அந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது; அதைப் பதிவு செய்திருக்கிறார் பழ.அதியமான் அவர்கள்.


இப்படி தன்னுடைய வாழ்விணையர், இரண்டு முறை சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த பொழுது, ஓர் இக்கட்டான வழக்கு, அதுவும் பல ஆண்டுகள் தண்டிக்கப்படக் கூடிய வழக்கைச் சந்திக் கின்ற நேரத்தில், யாராக இருந்தாலும், மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். ஆனால், அன்னை நாகம்மையார் அவர்கள் அப்படியில்லை.


அன்னை நாகம்மையார் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் 1932 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்குச் சென்ற காலகட்டத்தில்,  ‘‘ரஷ்யாவில் என்ன நடக்குமோ? மறுபடியும் அவர்களுக்கு என்னென்ன தொந்தரவு வருமோ?'' என்ற அந்த அச்சம்தான், அவருடைய உடல்நலத்தை வெகுவாகக் குறைத்தது.


காரணம் என்ன?


தந்தை பெரியார் அவர்கள்மீது வற்றாத அன்பு. இன்னொரு பக்கத்தில் இயக்கக் கொள்கைக்காக, தன்னுடைய வாழ்விணையரையும் தியாகம் செய்ய வேண்டும்; தன்னையும் தியாகம் செய்யவேண்டும் என்கிற ஒரு உறுதிப்பாடு.


இவற்றையெல்லாம் இன்றைக்குத் தனி ஒரு பெண்மணியிடம் பார்க்க முடியுமா? யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி!


அன்னை நாகம்மையார் அவர்கள் இறந்தவுடன், தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியில்,


‘‘நாகம்மையார் அவர்கள் எனக்கு வாழ்க்கைத் துணைவராக இருந்திருக்கிறார். அவருக்கு நான் வாழ்க்கைத் துணைவராக நான் இருந்தேனா என்று சொல்லுகின்ற நேரத்தில், இல்லை என்பதை வெட்கத்தோடு நான் சொல்லுகிறேன்'' என்று சொன்னார்.


அவர் எழுதிய இரங்கல் செய்தியில், கண்ணீர்க் கடலை எல்லோருக்கும் உருவாகக்கூடிய செய்தி யாகும்.


அதில், என் காதல் போயிற்று என்று சொல்வதா? அன்பு போயிற்று என்று சொல்வதா? பாசம் போயிற்றா? என்று  அடுக்கிக் கொண்டே போகிறபொழுது, எல்லாமே போயிற்று என்று சொல்லுகின்ற நேரத்தில், தன்னை சமாளித்துக்கொண்டு ஒரு பகுத்தறிவுவாதி, தன்னுடைய உணர்வுகளை மறைத்துக்கொண்டு, பகுத்தறிவிற்கு முன்னிடம் கொடுத்து, ‘‘பரவாயில்லை, இதுவும் ஒரு நன்மைக்கே!'' என்று சொல்கிறார் என்றால், இந்தத் துணிச்சல் தந்தை பெரியாருக்கு எப்படி வந்தது?


அன்னைநாகம்மையார்அவர்கள்உடல்நலம்


குன்றியநேரத்தில்கூட, தன்னுடைய பொதுக் கூட்டத்தை ஒத்தி வைக்காமல், திருப்பத்தூர் மாநாட் டிற்குச் செல்கிறார். அங்கே இருக்கும் பொழுதுதான் அவருக்குச் செய்தி வருகிறது, ‘‘நாகம்மையார் மறைந் தார்'' என்று.


பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள், உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிவிட்டுத்தான் வருகிறார்.


‘‘பரவாயில்லை, எனக்கு இருந்த ஒரு கால்கட்டு, எனக்கு இருந்த நிலை மாறிவிட்டது. இனிமேல் நான் ஒரு சுதந்திர மனிதனாகிவிட்டேன்'' என்று சொல் லாமல் சொல்லி, அவருடைய துக்கத்தை மறைத்துக் கொண்டார்.


அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்களுடைய மன உணர்வு, மற்றவர் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.


பாதிரியார் கொடுத்த புகாரின் பேரில்


தந்தை பெரியார் கைதானார்


நாகம்மையார் அவர்களின் உடலை அடக்கம் செய்தார்; அடக்கம் செய்த அடுத்த நாளில், இவ்வளவு பெரிய காதலியாக, வாழ்க்கைத் துணைவியாக, தனக்கு எல்லாமுமாக இருந்த அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்த நிலையில், அடுத்த நாள் திருச்சி பாலக்கரைக்குச் சென்று, ஒரு கிறித்துவ மணவிழாவிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். பாதிரியார் கொடுத்த புகாரின் பேரில் கைதானார் தந்தை பெரியார் அவர்கள்.


இன்றைக்கு வழிகாட்டியாக,


பாடங்களாக இருக்கிறார்கள்!


இப்படி ஒரு பொதுத் தொண்டு, இப்படி ஒரு தியாக வாழ்வு, இப்படி ஒரு லட்சிய வாழ்வு, இப்படி எதிர்நீச்சல் அடித்து - இந்த நாட்டுக்கு, நமக்கு, தொண்டர்களுக்கு இன்றைக்கு வழிகாட்டியாக, பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.


எனவேதான், பெண்களுக்கு எதிரான பாலின வன் கொடுமைக்கு எதிரான போராட்டம் என்று சொன் னால், நாம் களத்திலே நிற்கவேண்டும். எத்தகைய விளைவுகள் வந்தாலும், துணிந்து நிற்கவேண்டும்.


எனவேதான், துணிவு கொள்க! தெளிவு கொள்க!! உறுதிப்பாட்டோடு போராட்டக் களத்தில் நிற்க, வெல்க! என்பதுதான் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களுடைய நினைவு நாளில், இந்தப் பேரிகை கொட்டுகின்ற முழக்கம் இதுதான்!


தந்தை பெரியாரின் தொண்டர்களாவோம் - அன்னை நாகம்மையாரின் பிள்ளைகளாவோம்


எனவே, தோழர்களே! தோழர்களே, நீங்களும் இதிலிருந்து பாடம் பெற்று, அதைப்போன்ற உறுதிப் பாட்டைஒவ்வொருவரும்உணர்ந்துகொள்வோம் - ஒவ்வொருவரும் தந்தை பெரியாரின் தொண்டர் களாவோம் - அன்னை நாகம்மையாரின் பிள்ளை களாவோம்.


ஈ.வெ.ரா. நாகம்மையாருடைய நினைவு நாளை, பெண்கள் போராட்ட உரிமைப் பேரிகை நாளாகக் கொண்டாடுகின்ற இந்தக் காலகட்டத்தில், அந்த உணர்வுகள் நம்மை வழிநடத்தட்டும் - அந்த உணர்வோடு நாம் களத்தில் நிற்போம்!


எங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இருக்கின்றனவோ -


எங்கே வன்கொடுமைகள் இருக்கின்றனவோ -


எங்கே பாலின வேறுபாடுகள் காரணமாக, மிருகத் தனங்கள் தலைவிரித்தாடுகின்றனவோ -


அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த, போராளிகளாக நாம் என்றென்றைக்கும் ஆயத்தமாவோம் - இதுவே நாம் அவருடைய நினைவு நாளில் பெறக்கூடிய செய்தி!


வாழ்க பெரியார்! வாழ்க ஈ.வெ.ரா. நாகம்மையார்!


நன்றி, வணக்கம்!


இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு   நாளில் காணொலிமூலம்  உரையாற்றினார்.


No comments:

Post a Comment