ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் வியாழக்கிழமை (7.5.2020) அதிகாலை 3.30 மணிக்குநிகழ்ந்த நச்சு வாயு கசிவு நிகழ்வு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்து குளிர்சாதனப் பெட்டியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டெரெய்ன் மொனோமெர் என்ற கெமிக்கல் திரவ நிலையிலிருந்து வாயுவாக மாறியுள்ளது. இந்த வாயு வெளியே கசிந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஸ்டெரெய்ன் மொனோமெர் என்ற கெமிக்கல் 20 டிகிரி செல்சியஸ் வரை நீர்மமாக இருக்கும். அதுவரை எந்தவிதப் பிரச்சினையும் இல்லை குறிப்பிட்ட கெமிக்கல் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் டியூப்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாயுவாக மாறிய ஸ்டெரெய்ன் மொனொமெர் அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. ஸ்டெரெய்ன் மொனோமெர் என்ற கெமிக்கல் பாலிமர், பிளாஸ்டிக், ரெஸின்கள் தயாரிக்கப் பயன்படும். இந்த கெமிக்கல் ஆக்ஸிஜனுடன் கலந்து வாயு நிலைக்கு வரும்போது ஸ்டெரெய்ன் டை ஆக்சைடாக மாறிவிடுகிறது. இந்த வாயு மிகவும் ஆபத்தானது. ஸ்டெரெய்ன் டை ஆக்சைட் தாக்கும் போது மனித உடலில் கண் எரிச்சல், சளியை உருவாக்கிக் கட்டச் செய்தல், சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். இந்த வாயுவை சுவாசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உடலில் பிரச்சினைகள் ஏற்படும். அதிகளவில் இந்த வாயுவைச் சுவாசிப்பவர்கள் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள். சாதாரணமாக இந்த வாயுவைச் சுவாசித்தவர்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். காதுகேளாமை, தலைவலி, மன அழுத்தம் உள்ளிட்டவையும் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இப்போதைய நேரத்தில் ஆந்திராவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது 3 டன் ஸ்டெரெய்ன் டை ஆக்சைட் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.
போபாலில் நிகழ்ந்த பெரும் விபத்துக்குப்பின் நாட்டில் இதுபோன்ற கெமிக்கல்களை பராமரிப்பதில் பல்வேறு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது விபத்துக்கான காரணமான எல்ஜி நிறுவனத்திடம் இது தொடர்பான விசாரணை நடந்து வரும் சூழலில், விடைத் தெரியாத பல கேள்விகள் உள்ளன. இந்த நிறுவனம் அய்எஸ்அய் சான்றிதழ் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற தொழிற்சாலைகள் மக்கள் வாழும் பகுதியிலிருந்ததே இப்படியொரு சோகத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
1984 இல் டிசம்பர் 3 இல் போபாலில் ஏற்பட்ட பேரழிவால் பல்லாயிரக்கணக்கில் பலியானார்கள். (இது கடவுளின் செயல் என்று நீதிமன்றத்தில் நிறுவனத்தின் சார்பாக சொன்னது எல்லாம் நினைவிற்கு வருகிறது)
யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் அய்சோ சயனேட் எனும் நச்சுக்காற்று கசிந்ததினால் அய்ந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சுக்காற்று தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போபால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் 1969இல் போபாலில் நிறுவப்பட்டதாகும். இதில் பாதி இந்திய அரசின் பங்கு மற்றும் பாதி யூனியன் கார்பைடு நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்த நிறுவனம் மக்கள் தொகை அதிகம் உள்ளப் பகுதியில் அமைக்க கூடாது என்று அந்த நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள மக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் நிர்வாகம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறி போராட்டங்களை அலட்சியம் செய்தது,
இன்றுவரை நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது 2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போபால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு தூய்மையான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் இன்றுவரை மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது போன்ற தொடர் நச்சுவாயு மரணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அரசுகள் விபத்து நடந்து முடிந்த பிறகு அதற்கான நிவாரணங்களை பெயரளவில் கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுகிறது, போபால் நச்சுவாயு விபத்தில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த 9 பேர் சமீபத்தில் கரோனா பாதித்து மரணமடைந்தனர்.
மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்ற பெரு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவலக்குரல் இன்னும்கூட மனிதாபிமானம் உள்ளோர் தம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குள் விசாகப்பட்டினங்கள் - இன்னும் எத்தனை எத்தனை மனிதச் சாவுகளின் ஓலங்களைக் கேட்கப் போகிறோமோ!
அணுமின் நிலையத்தை எதிர்த்து எத்தனை எத்தனை போராட்டங்கள் நடைபெற்றன.
மக்கள் குடியிருப்புகளைக் கடந்து வெகு தூரத்தில் இவற்றை நிறுவுவதற்கு கூடவா மனம் கசியவில்லை? விஷக் கசிவைவிட இந்த கசிவு மகாமகா மோசம்!
No comments:
Post a Comment