தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்துகொள்ளலாமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 15, 2020

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்துகொள்ளலாமா

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்


திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்துகொள்ளலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


வன்மையான


கண்டனத்திற்குரியது!


13.5.2020 அன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களின் தலைமையில், மக்களவை  தி.மு.க. உறுப்பினர்கள் திருவாளர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அய்.ஏ.எஸ். அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘‘ஒன்றிணைவோம் வா'' என்ற திட்டத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கரோனா கொள்ளை நோய் நிவாரண உதவியை அரசிடம் கோரி, பாதிப்பிற்குள்ளான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வில்,


தலைமைச் செயலாளர் அவர்கள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நடந்துகொண்ட விதமும், போக்கும், அவர் வகிக்கும் தலைமைப் பதவிக்குரிய பண்போடும், கடமை உணர்வோடும் பொருத்தமாக அமையாது, சந்தித்த பொறுப்பான எம்.பி.,க்களிடம் (அதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் இருந்தாலும்கூட)  மனிதப் பண்பு - அரசு அதிகாரி - மக்களாட்சியில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமோ அப்படி நடந்துகொள்ளாது, அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.


புண்படுத்தும்


புன்மைச் செயலாகும்!


மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் எக்கட்சி யினராயினும் - அதிலும் ஒருவரைப் போய்ப் பார்த்து கடமையாற்றச் சென்றுள்ளபோது, பெருந்தன்மையோடு நடந்துகொள்ளாதது மக்கள் பண்பு நிலைக்க விரும்பும் எவரையும் புண் படுத்தும் புன்மைச் செயலாகும்.


அவர் ஓர் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தவர்; உயர் பதவியில் உள்ளாரே என்பதை நினைக்கும்போது இன உணர்வும், மனிதநேயமும் உள்ள நமக்கு, நமது எழுதுகோல் கடுமையாக எழுத மறுக்கிறது!


இதற்கு என்ன பின்னணி?


அவர் தனது விரும்பத்தகாத இந்த நடவடிக்கை மூலம் ஏன் தேவையற்ற அவமானத்தை உரு வாக்கிக் கொள்ளவேண்டும்.  இதற்கு என்ன பின்னணி? புரியவில்லை!


இதனை அறியாதார், அறியாதாரே!


வேதனைமிக்க நமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


15.5.2020


No comments:

Post a Comment