பெரியாரின் போர்ப்படைத் தளபதி நாகம்மையார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 9, 2020

பெரியாரின் போர்ப்படைத் தளபதி நாகம்மையார்


தான் நினைத்த காரியத்தைச் சாதிக்கும் பிடிவாத குணமும், வெகுளித் தன்மையும் உடையவராக, கடவுள் பக்தி மிகுந்தவராக, தன் 13 வயதில் பெரியாரைத் திருமணம் புரிந்து கொண்டு, அவர் இல்லத்திற்கு வந்த நாகம்மாள் அவர்களின் மாற்றம் நமக்கு வியப்பை அளிக்கிறது.


"ராமசாமியைத் தான் மணந்து கொள்வேன்! இல்லை என்றால் இறந்து விடுவேன்" என்று பிடிவாதம் காட்டி சாதித்ததும், கடவுள், விரதம் போன்றவற்றை தன் விருப்பத்திற்கும், குடும்பத்தினர் விரும்பியதாலும் கடைப்பிடித்ததும், இந்த மூடப்பழக்கங்களில் இருந்து அவரை மாற்றுவதற்காக பெரியார் செய்த பல்வேறு நடவடிக்கைகளை உண்மையாக நம்பிய வெகுளித் தன்மையையும், நாம் பல நூல்கள் மற்றும் திரைப்படம் வாயிலாக அறிந்திருக்கிறோம்.


ஆனால் பெரியார் அவர்களின் அன்பு மற்றும் அவர் செயல்களில் நாகம்மையாருக்கு இருந்த நன்மதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட மாற்றம் (Transformation) நம் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்மை அளித்திருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. மணம் முடிந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரையிலும், பெரியார் அவர்கள் எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு உடையவராக இல்லையென்றாலும், கடவுள் - மூடநம்பிக்கைகள் பற்றி கேள்வி கேட்பவராக இருந்து வந்துள்ளதால் அந்த வகையில் பக்குவப் படுத்தப்பட்டுள்ளார்  நாகம்மையார்.


1919இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரியார் இணைந்த பிறகு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக கதர்த் துணியினை அணியும்படி தன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் கேட்டுக்கொள்ள, எந்த மறுப்பும் இன்றி அதனை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார்.


1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று காந்தியாரும், பெரியாரும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் முடிவெடுத்து, அதனை தீவிரமாகச் செயல்படுத்த, பெரியார் தன் தோப்பில் இருந்த 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். போராட்டத்தை அடக்க எண்ணிய ஆங்கிலேயே அரசு 144 தடை உத்தரவு போட்டது. அதனையும் மீறிப் போராடிய பெரியார், கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.


அதன் பிறகு ஒரு நாள் இடைவெளியில், நாகம்மையாரும், அய்யாவின் தங்கை கண்ணம்மாளும் ஆயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி, போரா ட்டத்தைத் தொடர்ந்தனர். நாட்டின் பிற பகுதிகளில்  நடந்த போராட்டங்களில், வன்முறைகள் நடந்ததால், கள்ளுக்கடை மறியல் நிறுத்தப்பட வேண்டுமென்று காந்தியிடம் சொன்னபோது, “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை! அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது! அவர்களை தான் கேட்க வேண்டும்!” என்று பதிலிறுத்தார். இவ்வாறு அனைத்திந்திய அளவில் பேசப்பட்ட பெண்களின் இந்தப் போராட்டம் காரணமாக தடை உத்தரவை திரும்பப் பெற்றது ஆங்கில அரசு. கள்ளுக்கடை மறியலில் பெண்கள் கலந்துகொண்ட முதல் போராட்டம் இதுவேயாகும்.


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் தலைவர்கள், பொதுக்கூட்டங்களுக்கோ, மாநாடுகளுக்கோ  தங்கள் மனைவிமார்களை அழைத்துச்  செல்லக்கூடிய அளவிற்கு மனப்பாங்கு கொண்டவர்களாய் பெரும்பாலும் இருக்கவில்லை. அக் கட்டத்தில் பெரியார், தம் துணைவி நாகம்மையாரை வடபுல பகுதிகளிலே நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளுக்கு அழைத்துப் போகும் பண்பாட்டை பெற்றிருந்தார். அதன் பயனாய், 4.12.1923 திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டிலிருந்து அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மை ஆவார்.


1924 -ல் கேரள மாநிலம் வைக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதற்கும், கோயிலைச் சுற்றி யுள்ள தெருக்களில் நடப்பதற்கும் இருந்த தடையினை நீக்க, அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க காந்தியிடம் அனுமதி கேட்டபோது, கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கு என்ற கோரிக்கையை மட்டும் வைத்து போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என அனுமதி அளித்தார். காந்தி, போராட்டத்திற்கு ஆதரவளிப்பது போல் காட்டிக் கொண்டாலும்,  அதனை விரும்பவில்லை என்பதை அவரின் செயல்களும், அறிக்கைகளும் தெளிவாக்கின. இந்நிலையில், கேரளாவில் உள்ள தொண்டர்கள் அழைப்பிற்கு இணங்க பெரியார் அவர்கள், அங்கு சென்று போராட்டம் நடத்தி கைதாகிறார். பெரியார் கைதான செய்தியை அறிந்த நாகம்மையார், பெரியாரின் தங்கை கண்ணம்மாள், பெரியாரின் சித்தி ஆகியோருடன் வைக்கத்திற்குச் சென்று போராட்டத்தை தொடர்கிறார்.


வைக்கம் போராட்டத்தின் போது...


மே 20 : திருமதி ஏ.இ.நாயுடு, திருமதி தாணுமால பெருமாள் பிள்ளை, திருமதி கோவிந்தன் சாணார் ஆகியோருடன் நாகம்மையார், அய்யாவின் சித்தி ஆகிய அய்ந்து பெண்களும் கோயில் கோபுர வாயில் அருகில் இருந்த வேலியைக் கடந்து செல்ல முற்பட்ட போது, அவர்களின் ஜாதிகளைக் கேட்டறிந்த காவல்துறை அதிகாரி, திருமதி சாணார்  தவிர, மற்றவர்கள் செல்லலாம் என்று அனுமதி வழங்கினார். "அந்த சகோதரியும் சேர்ந்து, ஒன்றாகச் செல்லவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் . அவரை விடுத்து நாங்கள் செல்லமாட்டோம்" என பதில் கூறினார் நாகம்மையார்.


மே 22 : நாகம்மையார், திருமதி கோவிந்த சாணார் அவர்களை அனுமதி மறுக்கப்பட்ட தெருவிற்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார். பார்ப்பனர் ஒருவர், கோபத்துடன் உத்தரவை மீறக்கூடாது என்று கண்டித்தார். கனத்த மழையிலும்  பெண்கள் அனைவரும் அந்த இடம் விட்டு நகரவில்லை.


ஜூன் 5 : திருமதி நாகம்மையார் மற்ற பெண்களுடன் சேர்ந்து பிரச்சார வேலைகளையும், பண வசூலும் செய்து வருகிறார்.  சாது எம்.பி. நாயரின் மனைவியும் அவருடன் வேலை செய்கிறார். பாடல்களைப் பாடிக்கொண்டும், காந்தியடிகளின் ராட்டினத்தைச் சுற்றிக் கொண்டும் இருவரும் போக்குவரத்துக்குத் தொல்லை செய்ததால், கைது செய்யப்பட்டு எட்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். பின் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அய்ந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  அதனையும் கொடுக்க மறுத்ததால்,  நீதிமன்றம் கலையும் வரை காவலில் வைத்திருந்து பின் விடுவிக்கப்பட்டனர்.


ஜூலை 13 : நாகம்மையார், அய்யாவின் சித்தி, கண்ணம்மாள் உட்பட 6 பெண்கள் மற்றும் பல ஆண்கள் மறியலுக்குச்  சென்றனர்.  நாகம்மையார், காவல் அதிகாரியிடம் "எங்களுக்கு வழி விடுங்கள்!  நாங்கள் போகவேண்டும்" என்றார். அதற்கு அவர்கள்," போகக் கூடாது" என்றனர். "ஏன் போகக்கூடாது " என்று மறு கேள்வி கேட்டார். "உள்ளே பாம்புக் குட்டிகள் உண்டு. போனால் உங்களைக் கடிக்கும்' என்றனர். "எங்களை எதுவும் கடிக்காது, வழி விடுங்கள்" என்று பதிலிறுத்தார் நாகம்மையார்.


செப்டம்பர் 1 முதல் 8 வரை தொடர்ச்சியான பயணம் செய்து, ஆழப்புழா மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார் நாகம்மையார். கண்ணம்மாள், பெரியாரின்  சித்தி ஆகியோரும் உடன் பங்கு பெற்றனர்.


வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை கைது செய்யப்பட்ட பெரியார், இரண்டாவது முறை சிறையிலிருந்து விடுதலை பெற்று சென்னை வந்தபோது, மீண்டும் அவர் வைக்கத்துக்குச் செல்வதை தடுக்கும் நோக்குடன், தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்படுகிறார். அப்பொழுது ‘நவசக்தி’ இதழில் (12.9.1924), நாகம்மையார், ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி, பெரியார் என்னிடம் விடைபெற்றுச் சென்றிருக்கிறார்" என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.


1929 டிசம்பரில், சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளில் உள்ள தமிழர்களின் அழைப்பை ஏற்று, இயக்க முன்னோடிகள் சிலருடன், பெரியாரும், நாகம்மையாரும்  கப்பல் பயணம் செய்தனர். பினாங்கு துறைமுகத்தில் இறங்கிய அவர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர் அம்மக்கள். மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும், ஈப்போவில் நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டிலும் கலந்து கொண்டனர்


தொடர்ந்து சிங்கப்பூரில் ஒரு மாத காலம் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அங்கிருந்த  மக்கள் அனைத்து நாட்களிலும் பல்வேறு விதமான உபசரிப்புகளால்   அன்பை வெளிக்காட்டினர். இவற்றுக்கெல்லாம் மேலாக, இருநாட்டுத் தமிழர்களும் புரிந்த அரும்பெரும் செயல், குடிஅரசு இதழுக்கு ஆண்டு உறுப்பினர் திரட்டிக் கொடுத்ததுதான்! சிங்கப்பூர் 'தமிழ் முரசு 'ஆசிரியர் சாரங்கபாணி அவர்கள் மட்டுமே 1500 இதழ்களுக்கு ஆண்டுக் கட்டணம் பெற்றுக் கொடுத்து உதவினார்! 


இந்தச் செய்தி பெரியாருடன் சென்றிருந்த நாகம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. ஆதலால்தான், தாயகம் திரும்பும் வேளையில், அவரிடம், "உங்களுக்கு விருப்பமான - தேவையான மலாய் நாட்டு பொருள்கள் எவை?” என்று கேட்ட தமிழர்களிடம், "நீங்கள் எல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப்  பாடுபட்டு பரப்பி இருக்கிறீர்களே! அதுவே எனக்கு அருமையான பொருள்!" என்று கூறி பாராட்டினார் நாகம்மையார்.


பெரியார் அவர்கள், போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைகளுக்குச் சென்றிருந்த பொழுதும், 1930களில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த பொழுதும் குடிஅரசு பதிப்பாளராக, வெளியிடுபவராக அதன் வளர்ச்சிக்கான பணிகளைச் செம்மையாக செய்துள்ளார் நாகம்மையார்.   சந்தா சேகரிக்கும் படியாகவும், கட்டுரைகள் எழுதி அனுப்ப வேண்டுகோள் விடுத்தும்  அவர் பெயரில் வந்துள்ள அறிக்கைகள் இதற்குச் சான்றாகும்.


1928களில்  'ரிவோல்ட் ' என்ற பெயரில் ஆங்கில இதழ் ஒன்றினை வெளியிட பதிப்பாளராகவும், வெளியிடுபவராகவும் பதிவு செய்துகொள்ள உண்மைவிளக்கம் பிரஸ் (புரப்பரைட்டிரஸ்) உரிமையாளராக அவர் விண்ணப்பித்துள்ள அறிக்கை, குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது


ரிவோல்ட் இதழில், செல்வி ஞானம், செல்வி இந்திராணி, செல்வி குஞ்சிதம், மருத்துவர் முத்துலட்சுமி ஆகிய பெண்கள் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதற்கு ஒப்பாக மகளிர்க்கு மதிப்பளித்த, 1928 -29 களிலேயே இப்படி ஒரு புரட்சி செய்த, ஆங்கில ஏடு எதுவும் இல்லை.


1933 மே 11 இல், நாகம்மையார் அவர்கள் இயற்கை எய்திய போது, பெரியார் அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரை, அவலச்சுவை உறைந்த சொல்லாட்சியை உடையது. 'ணிலிணிநிசீ' என்பதான புலம்பல் பாடல்கள் நிரம்பிய இரங்கற்பா வகையிலான இலக்கியத்தை ஒத்தது.


"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நான், ஒவ்வொரு வினாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன்...


பெண்கள் சுதந்திர விஷயமாகவும்,பெண்கள் பெருமை விஷயமாகவும், பிறருக்கு நான் எவ்வளவு பேசுகிறானோ, போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை...


ஆகவே நாகம்மாள் மறைந்தது, எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா ? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே!"


நாகம்மையார் காலஞ்சென்றது குறித்து, மலேசியாவில் உள்ள சுங்கப் பட்டாணி என்ற நகரில், தோழர் பி.அப்துல் சுபஹான் என்பவரால் ஒரு அனுதாபப் பாடல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள சில கருத்துகள்  காரணமாக, அங்குள்ள சில கத்தோலிக்க - முஸ்லிம்களுக்கு இடையே பிரச்சனை எழுவதாக காரணம் கூறி அந்தப் பாடலை தடை செய்ய முயன்றார்கள். அதனை எழுதிய தோழர், 'அந்தப் பாடல் என் சுய முயற்சியின் பேரில் எழுதப்பட்டது. பொதுமக்கள் பலரும் அதனைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், சுமார் 5000 பிரதிகள் அச்சிட்டேன். உலக மக்கள் யாவரும் சமூக-பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமாய் இருக்க வேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்தும் ஒரு மாபெரும் தலைவரின் மனைவியார் காலஞ்சென்றதைக் குறித்து எழுதப் பெற்ற பாடல் தான் அது’ என அரசாங்கத்தினர் இடம் விளக்கம்  அளித்துள்ள செய்தி ‘புரட்சி’ இதழில் வெளிவந்துள்ளது.


சான்று நூல்கள்:


இதழாளர் பெரியார் - பெரியார் பேருரையாளர் அ.இறையன்


வைக்கம் சத்தியாகிரக நினைவலைகள் - த.அமலா


தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார்- பேரா.ந.க.மங்களமுருகேசன்


- இறைவி


No comments:

Post a Comment