மாணவர் அணியினரிடையே கழகத் தலைவர் காணொலி கல்வியில் கவனம், ஒழுக்கம், கட்டுப்பாடு, சிக்கனம் - இலட்சியம் தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 9, 2020

மாணவர் அணியினரிடையே கழகத் தலைவர் காணொலி கல்வியில் கவனம், ஒழுக்கம், கட்டுப்பாடு, சிக்கனம் - இலட்சியம் தேவை!

*கலி. பூங்குன்றன்



திராவிடர் கழக மாணவர் அணி பொறுப்பாளர்கள் மத்தியில் கடந்த 2.5.2020 ஞாயிறு முற்பகல் கழகத் தலைவர் காணொலி மூலம் உரையாடினார்.


நூற்றாண்டுக் கடந்த திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி தொடர்பான தகவல்களை விவரித்தார். நீதிக்கட்சியைத் தோற்றுவித்த டாக்டர் சி. நடேசனார் (1912), வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் இவர்களைத் தொடர்ந்து நீதிக் கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த இராமராய நிங்கர் (பனகல் அரசர்) - முத்தையா (முதலியார்) கொண்டு வந்து நிறைவேற்றிய வகுப்புவாரி உரிமை ஆணை - 1950ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் அதற்குத் தடை - அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த நிலையில் முதல் சட்டத் திருத்தம் - ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் என்பது - மனுதர்ம காலத்திலிருந்து சூத்திரனுக்குக் கல்வி கொடுக்கப்படக் கூடாது என்பதன் தொடர்ச்சி - தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் - போராட்டத்திற்கு தமிழகமே போர்க்களமான காட்சி - முதல் அமைச்சர் பதவிவிலிருந்து ராஜாஜி ராஜினாமா செய்து அவரைத் தொடர்ந்து காமராசரை முதல் அமைச்சராகக் கொண்டு வருவதற்கான முயற்சி அழுத்தம் - காமராசரின் கல்விப் புரட்சி - தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு - மத்திய அரசு துறைகளில் கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யும் மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற்றிட 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் மேற்கொண்ட முயற் சிகள்-  பிஜேபி ஆட்சியில் மீண்டும் மனுதர்மம் - குருகுலக் கல்வி, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு - ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வு  - கிரீமிலேயர் திராவிடர் மாணவர்களுக்கான ஒழுகலாறுகள் குறித்தெல்லாம் கழகத் தலைவர் உரையாடினார்.


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது மனுதர்மம்! இதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?


“ஒரு ஜாதியார்தான் படிக்க வேண்டும், பார்ப்பனர் தான் படிக்க உரிமை வேண்டும் என்ற தத்துவம் கொண்டதுதான் மனுதர்மம் சாஸ்திரம். எவன் சூத் திரனுக்குப் படிப்புச் சொல்லித் தருகிறோனோ அவனே பாவி, சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனு தர்மத்தில் காணப்படுவது (விடுதலை 7.3.1954).


தந்தை பெரியாரின் இதே கருத்தைத் தான் டாக்டர் அம்பேத்கரும் கூறுகிறார். பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் - மனுதர்மம் என்பது அண்ணல் அம்பேத்கரின் கருத்தாகும்.


1927 டிசம்பர் 25இல் மகாராஷ்டிர மாநிலம் மகத் நகரில் கூடிய சத்தியாகிரக மாநாட்டில் “மனுஸ்மிருதி யிலும், இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நாகரிகமற்றவையாகவும், இழிவிலும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை வன்மை யாகக் கண்டிக்கிறது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டுக் கொளுத்தத் தீர் மானிக்கிறது” என்று கூறி அம்பேத்கர் தலைமையில் மனுஸ்மிருதியை எரித்தனர்.


1927 டிசம்பர் 25இல் அண்ணல் அம்பேத்கர் தலை மையில் மனுதர்மம் எரிக்கப்பட்டது என்றால் அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாகவே 1927 டிசம்பர் 4 அன்று காட்பாடியில் கூடிய சுயமரியாதைக்காரர்கள் மாநாட்டில் மனுதர்மம் கொளுத்தப்பட்டது.


ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மனு தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக அமைய வேண்டும் என்று லோகமான்ய திலகர் என்று பெருமையாகப் பேசப்படும் பாலகங்காதர திலகர் வற்புறுத்தினார்.


“நமது சட்டம் மனுஸ்மிருதிதான் என்று கூறியதோடு கற்றறிந்தவர்கள் மற்றும் பிராமணர்கள், உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும்“ என்று மனுஸ்மிருதியில் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் (மகாராஷ்டிர அரசின் கல்வித் துறை 1994இல் வெளியிட்ட “சத்திரபதி சாகு சமூக ஜனநாயகத்தின் தூண்” நூல் பக்கம் 363-364)


ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் இதே கருத்தைத்தான் ‘ஞான கங்கை’யில் (Bunch of Thoughts) குறிப்பிடுகிறார்.


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மனுதர்மத்தையொட்டிதான் நமது அரசர்களும் கல்விக் கூடங்களைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்தனர் என்று குறிப்பிட்டார். அதற்கு ஏராளமான ஆதாரங்களும் உண்டு.


11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னாற் காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், (மாணவர்கட்கும்) தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது - உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்காக அளிக்கப்பட்டது. வேதங்களும், சமஸ் கிருத இலக்கணமும், ஆரியர்களின் மீமம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன.


பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்தில் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது. 260 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் அங்கிருந்தனர். இதிகாசம், மனுதர்மம் அங்குக் கற்பிக்கப்பட்டன.


12ஆம் நூற்றாண்டுச் சோழ அரசர்கள் திருவாவடு துறையில் ஒரு கலை மன்றம் கண்டனர். அங்கு வடமொழியான சமஸ்கிருதத்தில் உள்ள சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள் (ஆதாரம் உத்தரமேரூர் கல்வெட்டு பராந்தகச் சோழன் தீட்டியது மேற்கண்ட புத்தகம் பக்கம் 454).


நாயக்க மன்னர்கள் காலத்திலும் கல்வி என்பது  பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோக சொத்தாக இருந்தது.


“1610ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ராபர்ட் டீநொபிலி (Robert DeNobili)  எழுதிய கடிதம் நாயக்கர் மன்னரின் கல்வி அமைப்பைப் பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. மதுரையில் 10,000 மாணவர்க்கு மேல் இருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 800 வரையுள்ளது. அங்கெல்லாரும் பிராமணர்களே, ஏனென்றால் உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத் தான் உரிமை உண்டு” (ஆதாரம்: “மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்” பக்கம் 55).


வெள்ளைக்காரன் ஆட்சி இந்தியாவில் காலூன்றிய போது -ஆங்கிலத்தை ஒரு பக்கம் மிலேச்ச பாஷை என்று சொல்லிக் கொண்டே பார்ப்பனர்கள் ஆங்கி லத்தைப் படித்து உத்தியோகங்களைக் கைப்பற்றினர் என்பதுதான் வரலாறு.


எடுத்துக்காட்டாக கடப்பை மாநிலத்தில் (இப்பொ ழுது ஆந்திரா பகுதி அப்பொழுது சென்னை ராஜதானி)


ஒரே ஒரு பார்ப்பன அதிகாரியான டி. கிருஷ்ண ராவ் என்பவர் ஹுஸுர் செரஸ்தார் என்ற கலெக்ட ருக்கு இணையான தனது பதவியைப் பயன்படுத்தி தனது 116 உறவினர்களை அரசுப் பதவிகளில் அமர்த்தி கொண்டார் என்றால் தெரிந்து கொள்ளலாமே வெள் ளைக்காரர்கள் ஆட்சியிலும் அவர்களின் ஆதிக்கமே தொடக்கத்தில் கொடி கட்டிப் பறந்தது என்பதை...


1813ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியர் பிறப்பித்த ஆணைதான் மற்றவர்களும் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தியது.


1912ஆம் ஆண்டில் டாக்டர் சி. நடேசனார் திராவிடர் சங்கத்தைத் தோற்றுவித்து பார்ப்பனர் அல்லாதார் கல்விக்கான அடிக்கல்லை நாட்டினார். வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் இணைந்து பார்ப்பனர் அல்லாதாருக்காக ஓர் இயக்கம் கண்டனர். தென் னிந்திய நலவுரிமைச் சங்கம் - அது நடத்திய ‘ஜஸ்டீஸ்’ என்ற பத்திரிகையை மய்யப்படுத்தி ஜஸ்டிஸ் கட்சி நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது.


நீதிக்கட்சி ஆட்சியில்தான் பார்ப்பனர் அல்லாதார் கல்வி மீது அக்கறை காட்டப்பட்டது. கல்லூரிகளில் சேர கல்லூரி கமிட்டி அமைக்கப்பட்டது. பணியில் அமர்த்த ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைக்கப்பட்டது.


மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை உடைத்து எரிந்தது - நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதான்.


வகுப்புவாரி உரிமை ஆணை நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில் அமைச்சர் எஸ். முத்தையா (முதலியாரின்) அயரா முயற்சியால் நிறைவேற்றப்பட்டது. இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீடுக்கு அரசு ரீதியாக அடிக்கல் நாட்டியவர் அவரே.


அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், வகுப்புவாரி உரிமையால் பலன் பெறும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரின் வீட்டிலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் முத்தையா என்றும், பெண் குழந்தை பிறந்தால் முத்தம்மாள் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.


எத்தனையோ தடைகளைக் கடந்துதான் இன்றைய தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் கல்வி யிலும் வேலை வாய்ப்பிலும், இடஒதுக்கீட்டின் காரணமாக பலன் பெற்று வருகின்றனர்.


இதனை மறைமுகமாக ஒழிக்க ‘நீட்’ என்றும், ‘கிரீமிலேயர்’ என்றும் கூறி ஆரியம் சூழ்ச்சி வலையைப் பின்னி வைத்துள்ளது.


மக்கள் தொகையில் பெரும் பகுதியான தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சிறுபான்மையினரும் ஒருங்கிணைந்து ஆரிய சூழ்ச்சி வலைகளைக் கிழித்தெறிவோம் - அந்த ஒருங் கிணைப்புப் பணியினைத் தான் திராவிடர் கழகம் செய்து கொண்டு வருகிறது.


முதல் சட்ட திருத்தம் தந்தை பெரியாரால் அப்படிதான் வந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சி கொண்டு வந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வருமான வரம்பு ஆணையை உடைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அப்படிதான் வந்தது.


69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டதும் அதே அணுகுமுறையால்தான். மத்திய அரசு துறைகளில்  கல்வியிலும், வேலை  வாய்ப்பிலும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதும் திராவிடர் கழகத்தின் அதே அணுகு முறையின் அடிப்படையில்தான்.


இன்றைக்குச் சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் சவால் களையும், அதேஅணுகுமுறையோடு சந்திப்போம் - வெற்றி பெறுவோம்.


திராவிடர் மாணவர் கழகம் முதன்முதலில் கும்ப கோணத்தில்தான் பிறந்தது. குடந்தை அரசு கல்லூரி விடுதியில் பார்ப்பன மாணவர்களுக்கு ஒரு தண்ணீர்ப் பானை, பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்ற வேறுபாட்டின் எதிர்ப்பில் வெடித்துக் கிளம்பியதுதான் திராவிடர் மாணவர் கழகம்.


தவமணிராசன், கருணானந்தம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) ஆகியோர் மாணவர்களாக இருந்தபோது ஏற்படுத்திய எதிர்ப்புப் போராட்ட வடிவம்தான் திராவிடர் மாணவர் கழகம் - இன்னும் சொல்லப் போனால் திராவிடர் கழகம் அதிகாரப் பூர்வமாக 1944இல் சேலத்தில் பிறந்தது. ஆனால் 1943ஆம் ஆண்டிலேயே கும்பகோணத்தில் திராவிடர் மாணவர் கழகம் பிறந்து விட்டது.


மாணவர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் கூறும் அறிவுரை படிப்பில் கவனம் வையுங்கள். போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இலட்சியப்பற்று, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றைத்தான் வற்புறுத்து வார்கள். ஆடம்பரத்தைத் தவிருங்கள், சிக்க னத்தைப் பயன்படுத்துங்கள்.  அதையேதான் உங்க ளுக்கு நானும் சொல்லுகிறேன். உங்கள் பெற்றோர் களிடம் கடைசிவரை நன்றி செலுத்துங்கள். சிறப்பாக பராமரியுங்கள். மாணவர் கழகத்தை வலுப்படுத் துங்கள் இயக்க நூல்களைப் படியுங்கள் பகுத்தறிவும், இன நலமும்தான் நம் மூச்சு. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று கழக மாணவர்கள் மத்தியிலே காணொலி மூலம் கலந்து உறவாடினார் கழகத் தலைவர்.


அவர் ஆசிரியர் என்பதால் கழக மாணவரணி யினருக்கு நல்லதோர் வகுப்பை எடுத்தார் என்றே கூற வேண்டும்.


No comments:

Post a Comment