காணொலி வகுப்பு நடத்துவதை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

காணொலி வகுப்பு நடத்துவதை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - தீர்மானங்கள்



சென்னை, ஜூன் 10 காணொலி வாயிலாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ் அவர்கள் தலை மையில், 9.6.2020 அன்று காலை நடைபெற்ற திராவிட மாணவர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்மொழியப் படும் தீர்மானங்கள் பின்வருமாறு:


தீர்மானம் எண் 1:


பேரிடரை எதிர்கொள்வோம்


கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அறிவிற் சிறந்தோர், ஆற்றலாளர்கள், சமூக அக்கறை கொண்டோர், மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் பலரை கரோனா காரணமாகவோ, பிற காரணங்களாலோ இழந்துள்ளோம். அவர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவ அறிவியல் தரும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து நம்மையும், மனித குலத்தையும்  இப் பேரிடரிலிருந்து மீட்க வேண்டியது நம் கடமை. உளத் துணிச்சலுடன், கட்டுப்பாடு, அறிவியல் பார்வை இவற்றைக் கைக் கொள்வதோடு, அவற்றைப் பரப்பவும் முனைவோம்.


தீர்மானம் எண் 2:


பெருந்தொற்றுக் காலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு - விஷப்பரிட்சையே!


கரோனா பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், அதன் பரவல் வேகமெடுத்திருக்கும் ஆபத்தான சூழலில் ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவது என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து நடந்துகொண்டிருப்பது அதிர்ச்சிக்கும், கண்டனத் திற்கும் உரியதாகும். போர்க்காலம் போன்றதொரு சூழலில், உயிரைக் காப்பாற்றுவது தான் முக்கியம். அதனைக் காவு கொடுக்க தேதி குறிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், அனைத்துக் கட்சியினர், மாணவர் அமைப் புகள் என்று அனைவரின் குரலையும் புறந்தள்ளி அரசு விஷப்பரீட்சை நடத்த விரும்புகிறது. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பதையெல்லாம் முடிவு செய்ய முடியாத இன்றைய நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள், முடிவுகள் எல்லாம் இப்போது உடனடித் தேவையன்று. அது தனியார் பள்ளிகள் ஆள்சேர்ப்பில் ஈடுபடுவதற்காகப் பயன்படலாமே ஒழிய, வேறெந்த அவசியமும் இப்போது இல்லை. கல்வி ஆண்டுக் கணக்குகளே (சிறிது காலத்திற் கேனும்) மாற்றியமைக்கப்படவேண்டிய அவசியமும் எழ லாம். எனவே, அதற்காக மாணவர்களையும், அவர்களின் வாயிலாக வெகு மக்களையும் ஆபத்துக் கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்துவது கூடாது. மாநில அரசு இதில் எந்த வித தன்முனைப்பும் பார்க்காமல் உடனடியாக தேர்வை நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (ஜூன் 10) அன்று காலை 10 மணியளவில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள போராட்டத்தினை அவரவர் வீட்டின் வாயிலிலும் 5 பேர் என்ற அளவில் தனி மனித இடைவெளியையும், தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடித்து, நடத்திடுவது என்று முடிவு செய்கிறது.


தீர்மானம் எண் 3:


சமவாய்ப்பை மறுக்கும்


காணொலி வகுப்புகள்


காணொலி வாயிலாக வகுப்புகள் என்பவை சமவாய்ப் புக்கும், சமூகநீதிக்கும் முரணானது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டி விடுத்துள்ள அறிக்கை மிக முக்கியமானதாகும். ஏழை, எளிய, கிராமப்புற, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் தொடங்கி, தனியார் பள்ளி களில் பயிலும் நடுத்தர வர்க்கத்தினர் வரை காணொலி வகுப்புகளுக்காக செலவு செய்வதும், ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் படிப்புக்கு கருவிகள், இணைய இணைப்பு வாங்குவதும் இப்போதிருக்கும் பொருளாதாரச் சூழலில் எப்படி சாத்தியம் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்படு வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இப்போதைய அவசர அழுத்தங்கள் எல்லாம், தனியார் கல்வி நிறுவனங்களின் நலனுக்காகவே இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தப் போக்குக்கு அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, காணொலி வகுப்பு நடத்துவதைப் பள்ளிக்கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது.


கோவை வடவள்ளியில் உள்ள ஒரு பள்ளியில், காணொலி வகுப்புகளுக்கு மாற்றுக் கருத்தைத் தெரிவித்த 10 பெற்றோர்களைத் தண்டிக்கிறோம் என்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் காணொலி வகுப்புகளுக்குத் தடை விதித்திருக்கிறது அந்தப் பள்ளி நிர்வாகம். இது பள்ளிக் கல்வியில் தனியார் நிர்வாகங்களின் எதேச்சதி காரத்தை எடுத்துக் காட்டும் ஒரு சான்று. இது போல இன்னும் ஏராளமான நிகழ்வுகள்! இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து, கல்விக் கொள்ளைக்கு அரசு துணை போகக் கூடாது.


தீர்மானம் எண் 4:


கல்லூரி ஷிப்ட் முறையை நீக்காதீர்!


கல்லூரி படிப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத் தவும், அனைவருக்கும் வாய்ப்பு வழங்கவும் தான் காலை, மாலை நேர வகுப்புகள் (Shift Method) அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால், ஷிப்ட் முறையை நீக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்திருப்பது, அனை வரும் மேல்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை மறுக்கும் அநியாயமாகும். புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால், இந்திய ஒன்றிய அரசு எவற்றை யெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்ததோ, அவற்றையெல்லாம் அறிவிக்காமலே நடைமுறைப்படுத் திடுவதும், அதற்கு மாநில அரசும் தலையாட்டிக் கொண் டிருப்பதும் ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைக்கும் மாறானது. தமிழ்நாட்டு கல்வித் துறையின் பிடி யாரிடம் இருக்கிறது என்ற அய்யம் தீவிரமாக எழுகிறது.


கல்லூரி ஷிப்ட் முறையை மீண்டும் நடைமுறைப் படுத்திட வேண்டும். அவற்றில் தகுதிவாய்ந்த நிரந்தர பேராசிரியர்களை நியமித்து, வகுப்புகளை நடத்திட வேண்டும்.


தீர்மானம் எண் 5:


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் ஒன்றிய அரசின் சார்புநிலை


செம்மொழி தமி ழாய்வு நிறுவனத்தில் நீண்ட காலம் நிரப் பப்படாத இயக்குநர் பொறுப்புக்கு, காவிக் கட்சிக்குச் சார்பான வர் என்பதற்காக ஒரு வரை நியமனம் செய்வதும், உரிய தகுதி வாய்ந்தவர் களைப் புறக்கணிப் பதும், இந்திய ஒன்றிய அரசின் சார்பு நிலையைப் பட்ட வர்த்தனமாக  வெளிக்காட்டுகிறது. மாநில அரசு செம் மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சிறப்புகளைப் பாது காப்பது, கல்வி, ஆராய்ச்சிப் பார்வையில் இன்றியமை யாததாகும் என்பதை இந்தக் கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.


தீர்மானம் எண் 6:


மருத்துவ உயர் படிப்புகளில் 


இடஒதுக்கீடு பறிப்பு - மோசடி!


மருத்துவ உயர் படிப்புகளுக்காக மாநில அரசு உருவாக்கிய இடங்களில் 50%த்தினை அடாவடியாக பறித்துக் கொண்ட மத்திய அரசு, அதில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக மறுத்து “0% இடஒதுக்கீடு” என்றாக்கியிருப்பது கடைந்தெடுத்த மோசடியாகும். இதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அனைவரையும் ஒன்று திரட்டி இந்திய அளவில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் தமிழர் தலைவர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்பதும், அதே வழியில் தமிழக அரசும் வந்திருப்பதும் சமூக நீதியைக் காப்பதற்கான நம்பிக்கையைத் தருகின்றன. அயராது போராடி, இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கும் சமூக அநீதியை ஒழித்துக் கட்ட தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் களம் காண்பது என்று திராவிட மாணவர் கழகம் உறுதி பூணுகிறது.


தீர்மானம் எண் 7:


விடுதலையின் விளைச்சல்


சமூகநீதிக்கான திசைகாட்டியாகத் திகழும் விடுதலை நாளேட்டின் 86-ஆம் ஆண்டு பிறந்தநாளை எழுச்சி கரமாக மாற்றி, விடுதலை விளைச்சல் விழா என்ற பெயரில் தமிழர் வாழும் நாடெல்லாம் இதனைப் பேச வைத்த தமிழர் தலைவர் அவர்கள், புதிய தொழில்நுட்ப முறைப்படி அவற்றைக் கொண்டு சேர்க்கும் வழியையும் காட்டி யுள்ளார். அதனை திராவிட மாணவர் கழகம் தன் மேற் போட்டுக் கொண்டு பணியாற்றுவது என்று உறுதியேற்கிறது. சமூக ஊடகங்களில் விடுதலை நாளேடு, அதன் செய்திகளைத் தொடர்ந்து பதிவிட்டு, பரப்பி விடுதலையின் விளைச்சலைப் பெருக்கிட வேண்டும் என்று சமூகநீதிப் பேருழவராம் தமிழர் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விடுதலையின் விளைச்சலில், சமூகநீதியை அறுவடை செய்ய வேண்டிய நாளைய தலைமுறை நாமே என்பதால், அது நம் பணி என்று முரசுகொட்டி விடுதலையைப் பரப்புமாறு திராவிட மாணவர் கழகத்தின் அனைத்துத் தோழர்களையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


No comments:

Post a Comment