ஓர் ஒப்பற்ற தலைமை என்பது பல நேரங்களில் நெருப்பின்மீதுதான் நின்று கொண்டிருக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

ஓர் ஒப்பற்ற தலைமை என்பது பல நேரங்களில் நெருப்பின்மீதுதான் நின்று கொண்டிருக்கிறது

பொறுப்பு அப்படிப்பட்டது - நெருப்பு அதற்குச் சாதாரணமானது!


‘‘ஒப்பற்ற தலைமை''  என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை



சென்னை, ஜூன் 26 ஓர் ஒப்பற்ற தலைமை என்பது, பல நேரங்களில் நெருப்பின்மீதுதான் நின்று கொண்டிருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு அப்படிப்பட்டது - நெருப்பு அதற்குச் சாதாரணமானது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 20.6.2020 அன்று மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


ஆகவே, ஒரு தலைவர் என்பவர், இந்த முறைகளை யெல்லாம் எந்த நிலையிலும் கையாண்டால், அவர்கள்  நீடித்த, உண்மையான தலைவராக, தலைமைத்துவம் பெற்றவராக, ஒப்பற்ற தலைவராக இருக்க முடியாது - மனித சமுதாயத்தில் - வரலாற்றில் நிலைக்க முடியாது என்பதற்கு முதல் இலக்கணம்.


‘‘அன்றியும், மற்றொரு விதமாகியும் அதாவது பத்திரிகைக்காரர்கள் தயவால் அதாவது, பத்திரிகைக் காரர்களை திருப்தி செய்து அவர்களது லட்சியங்களுக்கு ஆயுதமாய் இருந்து அவர்களால் கை தூக்கி விடப்பட்டு, தலைவர் ஆனவரும் அன்றியும், மற்றொரு விதமாகவும் அதாவது ஆங்காங்கு கூலி ஆட்களைப் பிடித்துக் கூலி கொடுத்து, அவர்களைக் கொண்டு நாடு முழுவதும் தங்களை தலைவர்கள் எனக் கூச்சலிடச் செய்து, அதனாலேயே தலைவரானவரும் அன்று. அன்றியும் பார்ப்பனர்களின் அடிமையாக இருந்து உலக நலத்தின் பேரால், கலை நலத்தின் பேரால், மோட்ச நலத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் என்று பார்ப்பன ஆதிக்கத்திற்கும், நலத்திற்கும் ஆளாயிருந்து அவர் களால் தலைவர் பட்டம் பெற்றவரும் அன்று.''


‘‘இவராக இருக்குமோ? அவராக இருக்குமோ?'' என்று நீங்கள் நினைக்கலாம்!


இப்படியும் சிலர் இருக்கிறார்கள்; தலைவர் என்று தன்னை நினைக்கின்ற ஒருவர், ரயில் நிலையத்தில் இறங்கு வதற்கு முன்பாக, பத்து பேருக்குப் பணம் கொடுத்துத் தயாராக நிற்கச் சொல்லியிருப்பார். மாலையையும் வாங்கி வைத்துக்கொள்ளச் சொல்லியிருப்பார். தலைவர் என்று சொல்லிக் கொள்பவர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும், ‘‘ஜே,ஜே'' என்று கூச்சல் போட்டு, அந்த மாலையை தலைவர் என்று சொல்லக் கூடியவர்களுக்கு அணிவிப்பார்கள். இதுபோன்ற தலைவர்களும் இருக்கிறார்கள். நான் இதைச் சொல்லும்பொழுது உங்களில் சிலருடைய மனவோட்டம், “இவராக இருக்குமோ? அவராக இருக்குமோ?” என்று நினைக்கலாம்.


பனகால் அரசர் அப்படி வந்த தலைவர்கள் அல்ல. மற்ற தலைவர்கள் எல்லாம் இப்படி வந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார்கள் தந்தை பெரியார் அவர்கள்.


இந்தக் கருத்து, அன்றிலிருந்து, இன்றுவரையில், இதைப் படிக்கின்ற வாசகர்களுடைய எண்ணத்தில் வேறொரு படம் ஓடிக்கொண்டே இருக்கும். போலித் தலைவர்கள் யார்? என்று நினைத்துப் பார்ப்பார்கள்.


தலைவர்கள் என்பவர்கள் இப்படி இருக்கக்கூடாது என்பது இதிலிருந்து நாம் பெறவேண்டிய ஒரு பாடம்.


கூலி கொடுத்துத் தலைவராகக் கூடாது


பத்திரிகையாளர்களின் தயவில் தலைவராகக் கூடாது


மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்து, எதைப் பேசினாலும், மலிவான கருத்தைப் பேசி, பாமரத் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, பாமர மக்கள் புகழுகிறார்கள் என்கிற நிலைக்கும் சொல்லக்கூடாது.


தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகள், விளக்கங்களை எல்லாம் ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. இலக்கியத்தை, கவிதைகளைப் படிப்பதைவிட, ஆழமாகப் படிக்கவேண்டும்.


அவருடைய எழுத்தில், ஒரு சொல்லை எடுத்துவிட்டு, வேறொரு சொல்லைப் போட முடியாது.


எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனையாற்றல்தான்!


அவருடைய எழுத்தில், ஆயிரம் பொருள்கள் உள்ளடங்கியதாக இருக்கும். வெறும் அழகுக்காக, மோனைக்காக, எதுகைக்காக, அலங்காரத்திற்காக அவர் எழுதியதில்லை, பேசியதில்லை. மக்களின் உள்ளத்தைத் தொடக்கூடிய ஆழமான கருத்தை மட்டுமே பேசக்கூடிய ஒப்பற்ற தலைமை தந்தை பெரியாருடைய தலைமை என்பதற்கு அடையாளமே, அவருக்கு இருந்த ஆற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனையாற்றல்தான்.


அடுத்தகட்டமாக தந்தை பெரியார் அவர்கள் ஆக்கப் பூர்வமாக என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்,


‘‘மற்றென்னையோவெனில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப்பட்ட மக்கள் - அதாவது தீண்டாதார், கீழ்சாதியார், ஈன சாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும், பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும் சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர்நீச்சல் செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர்.''


இந்த இயக்கம் என்ன செய்தது?


யாருக்காகப் பாடுபட்டது?


நூறாண்டுகளுக்கு முன்பு, இந்த இயக்கம் என்ன செய்தது? யாருக்காகப் பாடுபட்டது? அன்றைய பணி, இன்றைக்கும் அஸ்திவாரமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இந்த இடத்தை நன்றாக ஆழமாகக் கவனிக்க வேண்டும்.


அன்றைய தலைமை, நீதிக்கட்சி யாருக்காகப் பாடு பட்டது? என்று பல பேருக்குப் புரியவில்லை. நீதிக்கட்சி மற்ற ஜாதிக்காரர்களுக்காக என்றெல்லாம் கோடு போடு கிறார்கள், பிளவுபடுத்துகிறார்கள்; அப்படிப்பட்டவர்களுக் கெல்லாம் இது பதிலாக அமைகிறது.


இந்தத் தலைமை எப்படிப்பட்ட தலைமை - ஒப்பற்ற தலைமை என்று சொல்லி, நம்முடைய ஒப்பற்ற தலைமை அடையாளங்காட்டி, இலக்கணம் வகுக்கக் கூடிய தன்மை யில் இருக்கிறது.


மேலும் தந்தை பெரியார் சொல்கிறார், கேளுங்கள்:


‘‘அவ்வேலையில் அவர் பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது.''


எவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் சொல்கிறார் பாருங்கள். எவ்வளவு கொந்தளித்துப் போய், உணர்ந்து, பனகால் அரசர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதை எப்படி அவர் எதிர்கொள்கிறார். ஏனென்றால், அவ்வளவு சிக்கலான நேரம் அது.


ஓர் ஆட்சி, அதற்கும் பெரும்பான்மை இல்லாத அளவிற்கு ஆக்குகிறார்கள். நல்ல காரியங்கள் செய்வதை யெல்லாம், தலைகீழாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.


இன்றைக்குக்கூட நம் காலத்தில்கூட, கறுப்பு


 வெள்ளை என்கிறார்கள்; வெள்ளையைக் கருப்பு என் கிறார்கள். எவ்வளவு தாறுமாறாகப் பிரச்சாரம் செய்கிறார் கள் என்று சொன்னால், அன்றைக்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்திருக்கும்; பார்ப்பன ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், எல்லாம் அவாள்தான்; எங்கும் அவர்கள் மயம்தான் என்ற நிலையில், அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில், சிங்கத்தின் குகைக்குள் புகுந்து, அதனை சந்திப்பது போன்ற ஒரு சூழ்நிலையில், அந்த எதிர்ப்பை இவர்கள் சமாளிக்கின்ற நேரத்தில், அதை விளக்கிச் சொல்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.


இமயம் போன்ற எதிர்ப்புகளை 


திராவிடர் இயக்கம் சந்தித்தது


இது தலைமையைப் பற்றி மட்டுமல்ல நண்பர்களே! இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில், திராவிடர் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில், எத்தனை எதிர்ப்பு களை, இமயம் போன்ற எதிர்ப்புகளை அது சந்தித்தது என்பதை ஒரு பக்கத்தில் நீங்கள் புரிந்துகொள்வதற்காக இது பயன்படும்.


இங்கே அவர் பட்ட கஷ்டத்தை யார் அறிவார்? என்பதை எமக்கே சொல்ல முடியாததாக இருக்கிறது.


மேலும் தந்தை பெரியார் எழுதுகிறார்:


‘‘இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமுகத்திற்கு விரோதி, ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி, ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலி களுக்கு விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.''


ஒப்பற்ற தலைமை என்பது, பல நேரங்களில் நெருப்பின்மீதுதான் நின்று கொண்டிருக்கிறது


ஓர் ஒப்பற்ற தலைமை என்பது, பல நேரங்களில் நெருப்பின்மீதுதான் நின்று கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பொறுப்பு அப்படிப்பட்டது - நெருப்பு அதற்குச் சாதாரணமானது.


பெரியாரை இலக்கியவாதியல்ல என்று சில புத்திசாலி கள் சொன்னார்கள். இந்த இரங்கல் இலக்கியத்தைப் படித்தால், இதைவிட ஒரு பெரிய இலக்கியத்தை யாராவது கண்டுபிடித்துக் கொடுக்கட்டும் பார்க்கலாம். எழுத்துகளில் எவ்வளவு ஆழமான பொருள்கள் இருக்கின்றன என் பதைப் பாருங்கள்.


‘‘அது மாத்திரமல்ல, நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாகவாவது, உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவரைக்கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது.''


இவ்வளவு எதிர்ப்பைச் சந்தித்து ஒரு தலைவர் போராட்டக் களத்தில் நிற்கின்றார். அவருக்கு யார் துணை?


அய்யா சொன்னார், ‘‘என்னையே நம்பி, இப்பெரும் பணியேற்றேன்'' என்று. இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், யாராவது தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று அவர் ஒருபோதும் கருதியது கிடையாது.


தன்னம்பிக்கையினுடைய உச்சக்கட்டம்தான் அந்தத் தலைமை!


அதற்காக, இராமாயணத்தில் இருந்து, இராவணன் சொன்னதை எடுத்துச் சொன்னார், ‘‘என்னையே நம்பி, இப்பெரும் பணியேற்றேன்'' என்று சொன்னார். நான் யாரையும் நம்பியில்லை. தன்னம்பிக்கையினுடைய உச்சக் கட்டம்தான் அந்தத் தலைமை.


பனகால் அரசரைப்பற்றி சொல்லும்பொழுது, ஒவ் வொரு கட்டத்திலும், ஒப்பற்ற தலைமை தந்தை பெரியாரை இணைத்து இணைத்து நீங்கள் சிந்தித்துக் கொண்டே வரவேண்டும். இணையான ஒரு சிந்தனையோட்டம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த ஒப்பற்ற தலைமை - வார்த்தைகளால் அல்ல - உணர்வுகளால் அல்ல - அறிவால் நாம் உணர்ந்து கொண்டு நாம் பின்பற்றக்கூடிய அறிவான பக்குவத்தை நாம் அடைய முடியும் என்பதால்தான் இதை நான் சொல்கிறேன்.


மேலும் தொடருகிறார் தந்தை பெரியார்:


‘‘இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர்.தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்பற்று கின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லையே என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல், உள்ளுக் குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண் டும், பழி சுமத்திக் கொண்டும், அவரது தலைமையைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்து கொண்டும், அவரைச் சுற்றிலும், அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள். பின் எப்படி ராஜாவுக்குக் கட்சியும், ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர்களானால், அதற்குப் பதில், அவருடைய தனி சாமர்த்தியத்தால், புத்திசாலித் தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரைத் தான் சொல்லு கின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில், வைத்துக் கொண்டிருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் எனினும், கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையா தவர்களோ, ஏமாற்றமடையாதவர்களோ, அவர் மீது வெறுப்புக் கொள்ளாதவர்களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது!''


இராஜதந்திரம் என்பதை ஒப்புக்கொண்டவர் அல்ல. இது ஒன்றுதான் மாறுபட்ட விஷயம்.


ஒரு வேடிக்கையான நிகழ்வை சொல்வார்கள், நீதிக்கட்சி காலத்தில், பல பேர் சிபாரிசுக்கு வருவார்கள். தனிப்பட்ட உரையாடலில் அய்யா ஒருமுறை சொல்லியிருக்கிறார், ‘‘நீதிக்கட்சி ஆட்சியின்போது, பல பேர் சிபாரிசுக்கு வருவார்கள்; நாம் அவருக்கு  உதவி செய்தவுடன், பத்து பதவிகள் இருந்தால், ஒருவருக்குத்தான் நாம் சிபாரிசு செய்ய முடியும்....”


இந்த வார்த்தையை நன்றாக ஞபாகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு தலைமைக்கு இதுபோன்ற சங்கடங்கள் உண்டு.


‘‘சிபாரிசுத் தொல்லை''


“ஒரு பதவிக்கு, பல பேர் சிபாரிசு கேட்கிறார்கள். ஒருவருக்குத்தான் சிபாரிசு செய்ய முடியும். அப்படி ஒருவருக்கு சிபாரிசு செய்யும்பொழுது, ஒன்பது பேர் எதிரியாகி விடுகிறார்கள். ஆனால், அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், சிபாரிசு பெற்ற அந்த ஒருவனாவது உறுதியாக, இவர்தான் சிபாரிசு செய்ததனால் கிடைத்தது என்பதில் உறுதியாக இருக்கிறாரா என்றால், ‘‘எனக்கு எத்தனையோ தகுதி இருந்தது: அதனால்தான் எனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது'' என்று சொல்வார்.


"9 எதிரிகளையும், ஒரு சந்தேகத்திற்குரிய நண்பரையும் நாம் பெறுகிறோம்."  (for every one appointment, we create nine enemies and one doubtful friend) இந்த அனுபவம், தந்தை பெரியார் அவர்களுக்கு வந்த காரணத்தினால்தான், ‘‘சிபாரிசுத் தொல்லை'' என்ற தலைப்பில், சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உடல்நலிவுற்று இருந்த நேரத்தில், அறிக்கை வெளியிட்டார். இதுபோன்று சொல்லிக் கொண்டே போகலாம்.


திராவிடர் கழகத் தோழர்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல; எந்தப் போராட்டமாக இருந்தாலும், துணிந்து நாம் இறங்கி, களத்தில் எதிரிகளைச் சந்திப்போம் - மிகப்பெரிய படையைத் திரட்டிக் கொண்டு போவோம் - பிறகுதான் களத்தில் இறங்குவோம் என்பதல்ல.


(தொடரும்)


No comments:

Post a Comment