36.3 கோடி ஏழைகள் 80 கோடி ஆனது எப்படி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

36.3 கோடி ஏழைகள் 80 கோடி ஆனது எப்படி

36.3 கோடி ஏழைகள் 80 கோடி ஆனது எப்படி?


2014ஆம் ஆண்டு ரங்கராஜன் குழு மோடி அரசாங்கத்திற்கு அளித்த அறிக்கையின் படி இந்தியாவில் அப்போது 36.3 கோடி ஏழைகள் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இன்று வரை அந்த அறிக்கையை முன்வைத்துத்தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.


ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மே 12 ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றும்போது நவம்பர் மாதம் வரை ஏழைகள் உணவுத்திட்டம் (கரீப் கல்யாண் அன்ன யோஜனா) திட்டத்தைத் தொடர்கிறோம். இதன் மூலம் 80 கோடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயனடை வார்கள் என்று 15 நிமிட உரையில் கூறி முடித்துவிட்டார்.


"நம் நாடு ஏழை நாடு அல்ல; அரசியல் லாபத்துக்காகவே, மக்கள் ஏழைகளாக வைக்கப்பட்டுள்ளனர். எனக்கு, 60 மாதங்கள் வாய்ப்பு கொடுங்கள்; மக்களுக்கு அமைதியான, மகிழ்ச்சியான, வறுமை இல்லாத வாழ்க்கையைத் தருவேன்" என்று மோடி 2014-ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் கூறினார்.


இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சவுதி சுற்றுப் பயணத்தின்போது பேசிய மோடி 'இந்தியாவில், இன்னும் சில ஆண்டுகளில் வறுமை ஒழிந்துவிடும் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.


2014-ஆம் ஆண்டில் 60 மாதங்களில் வறுமையை ஒழிப்பேன் என்று உறுதி கூறிய  மோடி, 2019-ஆம் ஆண்டில் 'வறுமை இன்னும் சில ஆண்டுகளில் ஒழியும் என நம்புகிறேன்' என்று கூறி, வறுமை இன்னும் ஒழியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும்படி பேசியிருந்தார். இவற்றுக் கெல்லாம் மேலாக அண்மையில் பேசியபோது 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்' மூலம் இந்தியாவில் உள்ள 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று சொன்ன செய்தி, 'இந்தியாவில் 80 கோடி பேர் ஏழைகளா?' என்ற பேரதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.


மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரங்கராஜன் தலைமையிலான குழு கொடுத்த அறிக்கையில் இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 36.3 கோடி, இதை வைத்து தான் இன்றுவரை வரவுசெலவு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு  ரங்கராஜன் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைதான் இந் தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் அதிகாரப் பூர்வ மக்கள் தொகை. ஆனால், பல அரசு சாரா அமைப்புகளும் இந்தியாவின் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் தொகை யைக் கணக்கிட்டிருக்கின்றன.


இந்தியாவில் ஜாதி மற்றும் மதம் தொடர்பான  ஏற்றத் தாழ்வு காரணமாகத்தான் இந்தியாவில் வறுமையானது தலைவிரித்து ஆடுகிறது என்ற கருத்தைப் பல பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வர்களின் தனிநபர் வருவாய் என்பது 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது அல்லது மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்திருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசியோ மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. 


கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் செல்லப்போகிறவர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்றே தெரியவில்லை. மேற்கண்ட ஏழை மக்களின் எண்ணிக் கையோடு, ஊரடங்கு காலத்தில் வேலையின்மை, வருமான மின்மை என்று தொடர்ந்து வரும் செய்திகளைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், இனி வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள ஏழைகளின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.


உண்மையில் 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பிற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையத் துவங்கியது. இதன் மூலம் தொடர்ந்து 36.3 கோடி என்ற ஏழைகளின் எண்ணிக்கை அதாவது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. மோடியின் இப்போதைய பேச்சுப்படி 80 கோடி என்றால் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காக மாறியுள்ளது, இதன்படி நாட்டின் ஒட்டுமொத்த செல் வமும் குறுகிய நபர்களிடமே தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை மோடியே உறுதிப்படுத்தியுள்ளார்.


மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து வார்த்தை ஜாலங்கள், 'மந்திர'ச்சொற்களைப் பெயராக வைத்துத் திட்டங்களை வெளியிட்டாரே தவிர, அதன் மூலம் எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் இவரது அதிரடி அறிவிப்பான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி,களால் அம்பானி, அதானி உள்ளிட்ட ஒரு சில தொழிலதிபர்களின் சொத்துகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் உலகத் தொழிலதிபர் களின் சொத்துகளை விட அதிகரித்துள்ளது.


முழு ஊரடங்கினால் பட்டினிச்சாவு ஏற்பட்டபோது அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு பல அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு வழிவகுத்துள்ளது. அதேபோல், ஏழைகள் உணவுத்திட்டத்தின்கீழ் அதானி நிறுவனத்தில் இருந்து பருப்பு வகைகள் மற்றும் உணவு தானியம் அல்லாத பொருட்களை பல மில்லியன் டாலர் அளவிற்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கரோனா பெயரைக் கூறிகொண்டு தனது அய்ந்து ஆண்டு கால பொருளாதாரச் சீரழிவை மறைத்துக் கொண்டபோதிலும், தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான காலங்களில்கூட லாபத்தை ஈட்டித்தருவதிலேயே இரவும் பகலுமாக பாடுபட்டு வருகிறார் மோடி. இவரது நடவடிக்கையால் மக்கள்தொகையில்  வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் போகிறது என்பதே உண்மை!


No comments:

Post a Comment