மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 15, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 15- தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.


நேற்று (14.7.2020) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருத் துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கிடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 


மேலும் ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.


பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமையைப்


பறித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை


புதுக்கோட்டை, ஜூலை 15- பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமையைப் பறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுக் கோட்டை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் அவர்களது கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே ஆதிக்கம் காட்டுவதாகவும், கையெழுத்தைக்கூட இவர்களே போட்டுக்கொள்வதாகவும் அரசுக்குப் பொதுமக்களிடம் இருந்து அடுத்தடுத்துப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.


மேலும், பெண் பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்படும் அரசு வாகனம் மற்றும் அவர்களது பதவியைத் தங்களுக்குச் சொந்தமான கார்களில் எழுதிக்கொண்டு வலம் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டமும் விதிவிலக்கல்ல.


இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி இன்று (ஜூலை 14) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி பெண் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இது தொடர்பான புகார்கள் குறித்து 18004 259013, 04322 222171 ஆகிய எண்களில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம். பெண் களின் உரிமையைப் பறிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்" என்று தெரிவித்துள்ளார்.


கல்வி தொலைக்காட்சி வழியாக


பள்ளிப்பாடங்கள் தொடக்கம்


சென்னை, ஜூலை 15- கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் எடப் பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர் களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம் பாடம் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்த கங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.


அனைத்து பொது நுழைவு தேர்வுகள் செப்.,-க்கு ஒத்திவைப்பு


அமராவதி, ஜூலை 15- ஆந்திர மாநிலத்தில் வரும் செப்.,வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலமுதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி பொது நுழைவு தேர்வுகள்(சி.இ.டி) நிலையை மதிப்பீடு செய்தார். மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக சிஇடி -யை செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.  மேலும் கொரோனா தொற்று இயல்புநிலைக்கு வந்த பின்னர் கல்லூரியின் இளங்கலை முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும். அதுவரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிக் கப்படுகிறது. விரைவில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.


மாணவர்களின் நலனுக்காக சிஇடி மாதிரி சோதனகள் நடத்தப் படும் இவ்வாறு அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கூறினார்.


No comments:

Post a Comment