1963 ஆம் ஆண்டு, திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நாள்களில் - பெரியார் மாளிகைக்குச் சென்று விடுவேன்.
தந்தை பெரியார் அவர்கள், பெரும்பாலும் திருச்சியில் தான் இருப்பார்.
ஒரு நாள் பெரியார் மாளிகைக்கு வெளியே மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பழைய புத்தகம் ஒன்றினை உற்றுப் பார்த்துக் கொண்டு - பென்சிலால் குறித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் புத்தகம் - அதிகப் பக்கங்களைக் கொண்டதாக, தாள்கள் மிகவும் பழுப்பேறியதாக இருந்தது. நான் அவரின் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கைகளை மெதுவாகத் தட்டிக் கொண்டு முணுமுணுத்தவாறு பாடினார். வள்ளலார் பாடல் போன்று இருந்தது. பாடல் தெளிவாக எனக்குக் கேட்கவில்லை.
அய்யாவுக்கு இசை மீது எவ்வளவு பற்று! என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன்.
அப்பொழுது அவர் மடியில் வைத்திருந்த அந்தப் புத்தகம் கீழே விழுந்துவிட்டது. உடனே நான் அதை எடுத்துக் கொடுத்தேன். "மிக்க நன்றி" என்றார். உடனே அவரின் கையைப் பிடித்துக் கொண்டு,"வணக்கம் அய்யா" என்றேன்.
"தம்பி யாரு? இங்கே படிக்கிறீர்களா" என்றார்.
"ஆம் அய்யா! நான் அரூர் இராமசாமி மகன்" என்றேன்.
"நம்ம மூக்கனூர் பட்டி இராமசாமி மகனா?" என்று சிரித்தார். எனக்கு மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த நிகழ்வுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றேன்! நெஞ்சம் நெகிழ்கின்றேன்! - கவிஞர் கண்ணிமை
No comments:
Post a Comment