கோயில் கொள்ளையர் யார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

கோயில் கொள்ளையர் யார்

கோயில் கொள்ளையர் யார்? யார்? யார்?


கவிஞர் கலி.பூங்குன்றன்



“தி.மு.க.வினரின் தந்தையான பெரியார், ‘சாமி இல்லை, சாத்தான் இல்லை’ என்று காலமெல்லாம் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்து, கண்ணீர்த்துளிகளான தி.மு.க.வினரைக் கோவில் சொத்துகளைத் துணிந்து அபகரித்துக் கொள்ள வழி போட்டுக் கொடுத்தவர்;1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், தி.மு.க. போட்ட ஆட்டத்தில் பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள சொத்துக்களுக்கு, பொய்யான பட்டாக்கள், பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு, பலர் வசம் சென்றன.


அன்று தொடங்கிய சொத்து அபகரிப்பு ஆட்டம், இன்று வரை தொடர்கிறது.


‘சிவன் சொத்து குலநாசம்‘ என்று அந்தக் கால சந்ததியினர் பயந்து நடந்தனர்.ஆனால், ஈ.வெ.ரா. செய்த கடவுள் மறுப்புப் பிரசாரத்தால், நாத்திகத்  தினவெடுத்துப் போய்க் கிடந்த திராவிட அரசியல்வாதிகள், வகை தொகை இல்லாமல், கோவில் உடைமைகளையும், சொத்துகளையும் கபளீகரம் செய்து விட்டனர். தொடர்ந்து இதில் ஈடுபட்டும் வருகின்றனர். ‘கடவுளாவது, தண்டிப்பதாவது என்று, தி.மு.க.வினரைப்பின்பற்றி அ.தி.மு.க.வினரும், இதில் இறங்கி விட்டனர். திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் எண்ணும்போது, நடந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்ட சுப்பிரமணிய பிள்ளையை அடித்து, பாத் ரூமில் தொங்க விட்டவர்கள் அ.தி.மு.க.வினர். அப்போது எம்.ஜி.ஆர்.தான் முதல்வர்.”


இவ்வாறு ‘துக்ளக்‘ வார இதழில் (29.7.2020 பக்கம் 12) “திராவிடக் கட்சிகளும் கோவில் சொத்துக்களும்?’ எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் தான் மேலே எடுத்துக் காட்டப்பட்ட பகுதி.


கடவுள் மறுப்பாளர் தான் தந்தை பெரியார். இது ஊர் உலகத்திற்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான்.


அந்தப் பெரியார், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்பே ஈரோட்டில் உள்ள முக்கியப் பொறுப்புகளில் தலைமை தாங்கிய பெருமகனாராக உலா வந்தவர். அந்தப் பொறுப்புகளுள் ஒன்று - ஈரோடு வட்ட தேவஸ்தானக் கமிட்டியின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.


இதுகுறித்து, சாமி. சிதம்பரனார், 'தமிழர் தலைவர்' நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-


“அக்காலத்திலேயே உருவ வணக்கத்தை வெறுப்பவர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண செலவுக்குக் காரணமானவை என்பவர், இவை மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கின்றன என்னும்


உறுதியான கொள்கையை உடையவர். ஆயினும், தம் தலைமைப் பதவியின் பொறுப்பையுணர்ந்து, கோவிலில் நடைபெற வேண்டிய செய்கைகளைத் தவறாமல் நடத்தி வந்தார். தமது கமிட்டிக்குக் கட்டுப்பட்ட பல கோயில்களைப் புதுப்பித்தார். கோவிலின் செல்வங்கள், கொள்ளை போகாமல் பாதுகாக்கப்பட்டன. கோவில்களுக்குப் பழுதுவராமல் திருப்பணிகள் செய்யப்பட்டன. இவர் தேவஸ்தான கமிட்டிக்குத் தலைவராகுமுன் கமிட்டியில் பணமில்லை. கடன்தானிருந்தது. பல ஆண்டுகள் தலைவராயிருந்து விட்டு, அப்பதவியிலிருந்து நீங்கு முன் எல்லாச் செலவுகளும் செய்த பிறகும், சுமார் 15,000 ரூபாய் சேமித்து வைத்திருந்தார்” (அந்தக் காலத்தில் இந்தத் தொகையின் மதிப்பு மிகப் பெரியதே!) என்று எழுதுகிறார் சாமி சிதம்பரனார்.


அந்தத் தலைவரைப் பார்த்து, நாக்கில் புழுத்த புழுவின்  மையிலிருந்து அபாண்ட பழிசுமத்துவது அவர்களின் பார்ப்பனப் புத்தியைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது.


கோயில்களைக் கொள்ளையடித்தவர்கள் யார்? கணக்கு வழக்கு இல்லாமல் மன்னர்களும், ஜமீன்தார்களும் எழுதி வைத்த சொத்துகளையும், நகைகளையும் தின்று ஏப்பமிட்டவர்கள் யார்? என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு.


பார்ப்பனச் சுரண்டலின் கூடாராமாகி விட்ட கோவில் சொத்துகளுக்குப்  பாதுகாப்புத் தேவை என்று கருதித்தான், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் பிரதமராக இருந்தபோது - இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. (அந்தச் சட்டத்தைக் காங்கிரசில் இருந்தபோதே வரவேற்றவர் தந்தை பெரியார்).


ஒழுக்கசீலர் என்று போற்றப்படுபவரும், முதல் அமைச்சராக இருந்தவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைச் சாட்சிக்கு அழைத்தால் - இந்தப் பார்ப்பனக் கூட்டம் முண்ட முடியாது. காரணம், அவர் ஒன்றும் கடவுளை மறுக்கும் நாத்திகர் அல்ல - தெய்வப் பக்தி மிக்கவர்தான்.


“’வெண்சட்டைப் பெரியார்” என்ற தலைப்பில் அவர் குறித்தும், அவர் தெரிவித்த கருத்துக் குறித்தும் தீக்கதிர் ஏட்டில் (1.8.2008) வெளிவந்தது..


வடக்கே விசாகப்பட்டினம் முதல், தெற்கே திருநெல்வேலி வரை பல கோயில்களில் நகை மோசடி, நில மோசடி என அன்றைக்குப் பல லட்சம் சுருட்டப்பட்ட விவரங்கள் தம்மிடம் உள்ளதாக, குறிப்பாக 65 மோசடிகள் குறித்து, தம்மிடம் பட்டியல் இருப்பதாக அவர் தெரிவித்தார் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் தீக்கதிர் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன (தனியே காண்க).


இந்தியாவிலேயே பெரிய கல் முதலாளியான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வண்டவாளம் என்ன? சுரண்டல் புராணம் என்ன! என்ன! என்ன?


2010-ஆம் ஆண்டில் அம்பலப்பட்ட அந்த செய்திகள் இதோ:


15ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசை கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்தார். அவர், திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் தீவிர பக்தர்.  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 7 முறை சென்று இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஏராளமான தங்க, வைர, வைடூரிய நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தி இருக்கிறார்.


கிருஷ்ண தேவராயரின் முடிசூட்டு விழா நடந்து, 500 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அய்தராபாத்தில் வரும் 5ஆம் தேதி மிகப்பெரிய விழாவை ஆந்திர அரசு நடத்துகிறது. இந்த விழாவை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்.


இந்த விழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவராயர், வழங்கிய அரிய ஆபரணங்களின் நிழல்படக்  கண்காட்சி நடத்த, திருப்பதி கோவில் நிருவாக அதிகாரி கிருஷ்ணாராவ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


விளக்கம் கேட்பு


இதைத்தொடர்ந்து நகைகளை நிழல்படம் எடுக்க, நகைகள் பிரிவை அணுகிய போது, “கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள், ஏற்கெனவே 40 ஆண்டுகளுக்கு முன் தங்கக் கட்டிகளாக உருக்கப்பட்டு, கஜானா-வில் சேர்க்கப்பட்டு விட்டது என்று நகைகள் பொறுப்பு அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.


அந்த நகைகள் உருக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்ததும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஆபரண பிரிவு நிருவாக அதிகாரி குரு ராஜாராவிடம், விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.


இந்த நிலையில், இது பற்றி குருராஜாராவ் கூறியதாவது:


கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் இப்போது எங்களிடம் இல்லை. அதை 40 ஆண்டு-களுக்கு முன்பே சாதாரண நகைகளுடன் சேர்த்து, கோவிலில் உள்ள உருக்கு பட்டறையில் உருக்கி தங்கக் கட்டிகளாக ஆக்கி விட்டோம். அவை தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.


அப்போது இந்தப் பிரிவுக்கு பொறுப்பாளராக யார் இருந்தார்?. எந்த அதிகாரியின் உத்தரவின் படி ஆபரணங்கள் உருக்கப்பட்டது? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இவ்வாறு குரு ராஜாராவ் கூறினார்.


அனுமதி அளித்தது யார்?


இது பற்றி கோவில் நிருவாக அதிகாரி கிருஷ்ணராவ் கூறியதாவது:


"கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் உருக்கப்பட்டு விட்டதாக, ஆவணத்தில் எழுதப்பட்டு இருப்பது உண்மைதானா? இந்த ஆவணம் உண்மையானது தானா? இந்த முடிவை எடுத்தது யார்? அனுமதி அளித்த அப்போதைய அதிகாரி யார்? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.முழு விசாரணைக்குப் பின், அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விடும்" இவ்வாறு கிருஷ்ணாராவ் கூறினார்.


அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு கூறுகையில், "அரிய நகைகள் உருக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள். இதில் நடந்த உண்மை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அய்தராபாத் விழாவில் நடக்க இருந்த கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் நிழல்படக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது" என்றார்.


மன்னர் ஏழு முறை வந்திருக்கிறார்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கிருஷ்ண தேவராயர், 1513ஆம் ஆண்டு முதல் 1521 வரை 7 முறை வந்து தரிசனம் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர், ஏராளமான விலை மதிப்பில்லாத நகைகளைக் காணிக்கையாகக் கொடுத்து இருக்கிறார் என்று கோவில் பதிவேடுகளில், தெளிவாக எழுதப்பட்டு இருக்கிறது.


அதன் விவரம் வருமாறு:1513ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி கிருஷ்ண தேவராயர் தனது மனைவிகள் திருமலா தேவி, சின்னா தேவி ஆகியோருடன் திருப்பதி வந்-தார். அப்போது அவர் நவரத்தின கிரீடம் ஒன்றையும், 25 வெள்ளித் தட்டுகளையும், 2 தங்கக் கிண்ணங்களையும் காணிக்கையாகப் படைத்து இருக்கிறார்.


தங்க மணிமகுடங்கள்


1513ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதியும், ஜூன் 13ஆம் தேதியும் இரு முறை அவர் திருப்பதிக்கு வந்து, மூலவருக்கு, விலை மதிக்க முடியாத ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்தி இருக்கிறார். மேலும் உற்சவர்களுக்கு, 3 தங்க மணி மகுடங்களையும் படைத்து இருக்கிறார்.


1514 ஜூலை 6-ஆம் தேதி, 30 ஆயிரம் வராகன்களில் (தங்க காசுகள்) ஏழுமலையானுக்கு, கிருஷ்ண தேவராயர் கனகாபிஷேகம் நடத்தினார். அவை கோவிலுக்குக் கொடுக்கப்பட்டன.


1515ஆம் ஆண்டு அவர் வருகை தந்த போது, ரத்தினக் கற்கள் பதித்த தங்க மகர தோரணம் ஒன்றை காணிக்கையாகச்  செலுத்தி இருக்கிறார். இது மிகவும் விலை மதிப்பு மிக்கது.


1517ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி கிருஷ்ண தேவராயர், தனது மற்றும் அவரது 2 மனைவிகளின் வெண்கலச்  சிலைகளைக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகள், இப்போதும் மகாவாயிலின் உள்பிரகாரத்தில் உள்ளன.


1518ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி, கிருஷ்ண தேவராயர் ஏழுமலையான் கோவி-லுக்கு வந்தபோது, கோவிலின் கருவறை விமான கோபுரத்தில், 30 ஆயிரம் வராகனில் தங்கத் தகடு பதித்தார்.


1521ஆம் ஆண்டு பிப். 17ஆம் தேதி அவர் ஏழுமலையானுக்கு நவரத்தின கிரீடத்தை வழங்கினார். விலை மதிப்பு மிக்க வைர பீதாம்பரத்தையும் கொடுத்தார்.


இப்படியாக, ஏழுமலையான் கோவிலுக்கு, மன்னர் கிருஷ்ண தேவராயர் படைத்த பல ஆயி-ரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழம்பெரும் வைரம், வைடூரியம், மரகதம் போன்ற நவரத்தினங்-களால் ஆன நகைகள் என்ன ஆனது? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவி, திருப்பதி கோவிலில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி, செப்டம்பர் 9 ஆம் தேதி திருப்பதி வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் கூறினார்.


இது குறித்து டில்லியில் பேசிய சந்திரபாபுநாயுடு, நகை மாயமானது பற்றி மட்டுமல்லாது அங்கு நடைபெறும் இன்ன பிற மோசடிகள் குறித்தும் சிபிஅய் விசாரணை நடத்துவது அவசியம் என்றும், அப்போது தான் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காட்டமாகக் கூறினார்.


அத்துடன் வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரம் வெளிவந்த உடன், கோவிலின் நகைப்பிரிவில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த இரண்டு அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டனர், இதனை அடுத்து, இந்த ஊழல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


நாமதாரியான ஏழுமலையானுக்கே இப்படி நாமம் போட்டவர்களை என்னவென்று சொல்லுவது! பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தால்தான் கோயில் கொள்ளை நடப்பதாகக் குதித்துக் குதித்து எழுதும் துக்ளக், திருப்பதி கோயில் கொள்ளைக்கு என்ன காரணம் சொல்லப் போகிறது. உண்மையைச் சொல்லப் போனால், கோயில்  அர்ச்சகர்களுக்கும், தேவஸ்தானப் புள்ளிகளுக்கும் மிகவும் நன்றாகத் தெரியும். கடவுளாவது! கத்தரிக்காயாவது! கல்லு, செம்பு என்பது! அதனாலேதான் துணிந்து கொள்ளையோ - கொள்ளை!


எடுத்துக்காட்டுக்காக இன்னொரு கோயில்! அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் பொன்னம்பலத்தான் விவகாரம்:


இந்தக் கோயிலின் சுரண்டல் மகாபுராணம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.


இந்தக் கோயிலில் நடக்கும் ஊழல்களையும், பித்தலாட்டங்களையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவரும், புவனகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. சாமிநாதன் அவர்கள், (அ.இ.அ.தி.மு.க.) சட்டப்பேரவையில் ஆற்றிய உரையே போதுமானதாகும் (25.3.1982).


என்னென்ன நகைகள் கொள்ளை போயின? அம்மன் தாலி மறைந்த மர்மம், தங்க நகைகளை உருக்கியதில் 16 பவுன் திருட்டு, நடராசருடைய குஞ்சிதபாதம் என்று சொல்கிறார்களே, அதிலிருந்து வைரக்கற்கள் நான்கும் மாயம்! உண்டியலில் போடவேண்டிய சிறு சிறு நகைகளை உண்டியலில் போடக்கூடாது; படிக்கட்டிலே வையுங்கள் என்று சொல்லி சுருட்டிய சூழ்ச்சிகள், நடராசருக்கு இடதுபுறம் உள்ள “ஹஸ்த ராஜா" இடுப்பிலே இருந்த ஒன்றரை பவுன் கிண்கிணி - தங்க அரைஞாணும் காணவில்லை.


அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, இரண்டு கட்டி மூசைத் தங்கமும், 26 தங்க நாணயங்களும் வைத்திருந்தது, இந்து அற நிலையத் துறை ஆணைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.


கோயிலுக்குள் பரமானந்த கூபம் என்ற ஒரு கிணறு இருக்கிறது. உண்டியலில் பணம் போட விரும்பும் பக்தர்களை அந்தக் கிணற்றில் போடுமாறு இந்தப் பார்ப்பனர்கள் கூறுவார்கள். அவ்வாறு போடும் பழக்கம் உண்டு. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடுவார்களாம். பொது ஏலத்திற்கு விடாமல் சில நேரங்களில் இந்தத் தீட்சதப் பார்ப்பனர்களே ஆளை அமர்த்தி, கிணற்றில் மூழ்கச் செய்து பணத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு சென்று விடுவார்கள். இந்தத் திருட்டை வெளியிலே சொன்ன கிருஷ்ணசாமி தீட்சதரைத் தாக்கியிருக்கின்றனர்.


சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த செயலாளர்கள் இருவர், நாக வெங்கடேச தீட்சதர், நடராஜ தீட்சதர், சங்கச பேத தீட்சதர் ஆகிய தீட்சதப் பார்ப்பனர்கள் கையொப்பமிட்டு, தில்லைக் கோயிலில் தீட்சதர்கள் செய்யும் அட்டூழியங்களை, ஊழல்களைப் பட்டியல் போட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இந்தியப் பிரதமர், காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆகியோர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். அந்தப் புகார் மனுவில் கண்டுள்ளவைதான், சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.வி. சாமிநாதன் அவர்களால், சட்டப்பேரவையில் எடுத்துக் கூறப்பட்ட மேற்கண்ட தகவல்களாகும். தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைத் தொகுப்புகளில் பதிவாகியிருக்கும் உண்மைத் தகவல்கள் இவை.


தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் என்று கதை கட்டி வைத்துள்ளனர். அதற்கொரு புனை சுருட்டுக் கதையும் அவர்களிடம் உண்டு. கயிலாயத்திலிருந்து இந்த மூவாயிரம் பேர்களையும் சிவபெருமானே அழைத்து வந்தாராம்.


படைத்தல் கடவுளான பிரம்மா, தில்லையிலிருந்து மூவாயிரம் தீட்சதர்களை யோகத்திற்காகக் காசிக்கு அழைத்துச் சென்றாராம். அப்பொழுது தில்லையில் உள்ள கடவுள், அவர்களை மீண்டும் தில்லைக்கே அழைத்தாராம்!


அதன்படி அவர்கள் அனைவரும் தில்லைக்குத் திரும்பினார்களாம். மூவாயிரம் பேர்களில் ஒருவர் குறைந்தாராம்.குறைவாகக் காணப்படும் அந்த ஒருவர் வேறு யாருமல்லர். நான் தான் என்று தில்லையில் கூத்தாடும் நடராசப் பெருமான் கூறினார் என்று கதை எழுதி வைத்துள்ளனர். அற்புதங்களைச் சொன்னால்தானே பாமர மக்கள் மதிப்பார்கள்?


தில்லை நடராசனும்,  தீட்சதர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கத்தான் இந்தக் கட்டுக்கதை.


1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின்போது, இந்து அற நிலையத்துறை உருவாக்கப்பட்டு, கோயில்கள் பார்ப்பனப்  பெருச்சாளிகளின் ஏகபோகத்தில் சுரண்டப்பட்டதிலிருந்து காப்பாற்றிட வழி செய்யப்பட்டது.


அந்த நேரத்தில், அந்தச் சட்டம் தில்லைக் கோயிலைக் கட்டுப்படுத்தாது என்று தில்லைவாழ் பார்ப்பனர்கள் அடம்பிடித்தனர்.


அறநிலையத்துறை தலைவராக இருந்தவர், நீதிபதி சதாசிவ அய்யர் என்பவர் ஆவார். தில்லை தீட்சதர்கள் கொடுத்த மனுவின் மீது திரு. சதாசிவ அய்யர் அளித்த தீர்ப்பு முக்கியமானது (3.1.12.1925).


இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துகள் எதுவுமேயில்லை என்று பொது தீட்சதர்கள் சொல்லுவதும், இந்த ஆலயத்திற்கு ஆலயத்திற்கு  எந்தவிதக் கட்டளைகளும், வருவாய் தரும் இனங்களும் இல்லையென்று சொல்லுவதும் சரியல்ல. ஆகவே, பொது தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர். மேற்கண்ட ஆலயத்திற்கு எவ்வித வரவு - செலவு கணக்குகளையும் வைக்காமல், பொது தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கும் உள்ளாகிறார்கள்” என்று இந்து அறநிலையத்துறைப்  பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த திரு. சதாசிவ அய்யரே அறிக்கை கொடுத்த பிறகு, இந்தக் கோயில் தீட்சதர்களின் நாணயம், ஒழுக்கம், நேர்மை எத்தகையது என்பது அம்பலத்திற்கு வந்துவிட வில்லையா?


1887 இல் இந்தக் கோயில் தீட்சதர்களிடையே இரு கட்சிகள் ஏற்பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலயம் பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றிற்குச் செலவு செய்தல் தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது.


வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னார்க்காடு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று (ஓ.எஸ். எண் 7/1887), அதன்பின் சென்னை - உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.


 1888 இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி. முத்து சாமி அய்யர், ஷெப்பர்டு (Shepherd) என்ற வெள்ளைக்காரர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது; என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது?


 “முதற்காலந் தொட்டே இக் கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களின் சொந்தச் சொத்து என்பதற்குச் சிறு துளியும்கூட ஆதாரம் கிடையாது” என்று அடித்துச் சொல்லி விட்டார்கள்.


 கணவன் மனைவியை அடிக்கலாம் என்று ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறிய முத்துசாமி அய்யரே, தீட்சதர் தொடர்பான இந்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பைக் கூறிவிட்டாரே - முத்துசாமி அய்யர் என்ன “சுனா””மானா”வா? வெகு காலத்திற்குமுன் கூடப் போக வேண்டாம் - திமுக ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோயிலை அரசு கையகப்படுத்தியது. அதனை எதிர்த்து கோயில் பெருச்சாளிகளான தீட்சதர்கள் நீதிமன்றம் சென்றனர்.


நீதிமன்றத்திலே அவர்கள் கொடுத்த கணக்கு, குபீர் சிரிப்பை வரவழைக்கக் கூடியதே கோயிலுக்கு ஆண்டு வருவாய் ரூ.37,199


செலவு ரூ.37,000


மீதி ரூ. 199 (பேட்டா விலைபோல் இருக்கிறதா?) அதே நேரத்தில், அக்கோயிலை திமுக ஆட்சிக் காலத்தில் அரசு கையகப்படுத்தியபோது, 15 மாத வருமானம் ரூ.25,12,485 எத்தனை மடங்கு கொள்ளை!


இந்த யோக்கியர்கள்தான் எழுதுகிறார்கள் - பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தால்தான் கோயில் கொள்ளைகள் நடக்கிறது - திராவிட இயக்க ஆட்சியில்தான் கொள்ளைகள் என்று எழுதுகிறார்கள். அதிமுக ஆட்சியைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள் - ஆட்சி என்ன செய்யப் போகிறது? பார்ப்போம்!


சங்கராச்சாரி கூறுகிறார்:


கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் பக்தர்களே!



குமுதம்: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத் தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?


ஜெயேந்திர சரஸ்வதி (காஞ்சி சங்கராச்சாரியார்) பதில்:


கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக, பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.


('குமுதம்' 12.9.1996)


No comments:

Post a Comment