அந்தோ, நமது கலங்கரை விளக்கம் அருமை ஆலோசகர்  அய்யா இராஜரத்தினம் மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

அந்தோ, நமது கலங்கரை விளக்கம் அருமை ஆலோசகர்  அய்யா இராஜரத்தினம் மறைந்தாரே!


இந்தியாவின் தலைசிறந்த வரியியல் அறிஞரும், ஆலோசகரும், கனிந்த அனுபவமும், சிறந்த ஞானமும், பரந்த பண்பாடும் கொண்டவருமான அய்யா திரு.எஸ்.இராஜரத்தினம் அவர்கள் (வயது 92) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (18.7.2020) காலை காலமானார் என்று செய்தி அறிந்து துடித்துப் போனோம்.


சில நாள்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதிலிருந்து தேறி வருகிறார் என்ற செய்தி எங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பாய்ச்சியது! ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அதனைப் பொய்யாக்கி விட்டது!


பெரியார் அறக்கட்டளையின் தலைவர்; பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர்; நமக்கு எப்போதும் வழிகாட்டி அறிவுரை வழங்கும் நேரிய பண்பாளர்.


மனிதநேயத்தோடு எவரிடமும் பழகும் பழுத்த நேர்மையாளர். அவரது மறைவு நமக்கும், நமது கொள்கைக் குடும்பத்தினருக்கும், குருதிக் குடும்பத்தினருக்கும் - அவர் குடும்பத்தவரைப் போலவே ஈடு செய்ய இயலாத பேரழிப்பாகும்!


எளிதில் தேற்றிக் கொள்ள முடியாத இழப்பு என்றாலும், ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழிதான் என்ன?


கண்ணீர் மல்க அவரது இணையற்ற தொண்டறத்துக்கு எமது கடன்பட்ட நெஞ்சங்களின் கடமை உணர்வான நன்றிகள் - அவரை வழியனுப்புவதைத் தவிர வேறு ஏது தீர்வு!


அவரை இழந்துவாடும் அவரது பிள்ளைகள், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி, உறவினர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகச் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து, ஆறுதல் கூறுகிறோம்!


எங்கள் அய்யா இராஜரத்தினத்திற்கு


எங்களது வீர வணக்கம்! வீர  வணக்கம்!! வீர வணக்கம்!!!


 


கி. வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


18.7.2020


No comments:

Post a Comment