உ.பி.யில் நடக்கும் ராமராஜ்ஜியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

உ.பி.யில் நடக்கும் ராமராஜ்ஜியம்

உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தைச் சேர்ந்த பத்திரி கையாளர் விக்ரம் ஜோஷி அவருடைய மகள்களின் முன்னா லேயே படுகொலை! அந்த அதிர்ச்சியிலிருந்து பிள்ளைகள் மீளவில்லை.


 இவரது மகளைப் பாலியல் ரீதியாகச் சீண்டிய சிலர் மீது இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் திரும்பப் பெறச்சொல்லி அவருக்கு அப்பகுதியில் உள்ள சில குண்டர்கள் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். மேலும் அவரைப் பணிக்குச் செல்லும் போது தாக்கியுமுள்ளனர்.


தான் தாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களோடு காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்து 'தன்னை துப்பாக் கியால் சுட்டுக்கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள், அவர்களைக் கைது செய்யுங்கள்‘ என்றும் கூறியுள்ளார்.


 ஆனால், காவலர்கள் மீண்டும் அவரது புகார்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், அவர் தனது மகள் களுடன் சென்றுகொண்டு இருக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.


ஊடகவியலாளர்  துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். மாநில அரசு பத்திரிகையாளரின் மனைவிக்கு அரசு வேலையை அறிவித்த துடன், அவரது 3 குழந்தைகளுக்கும் இலவசக் கல்வியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. புகார் அளித்தவருக்கு உரிய நீதியை பெற்றுத் தராமல் உயிருக்கு விலை பேசிய கேவலத்தை என்னவென்று சொல்லுவது!


இந்த வழக்கு குறித்து காஸியாபாத் காவல்துறை எஸ்.எஸ்.பி கலாநிதி நைதானி கூறுகையில், “நாங்கள் ஒன்பது பேரைக் கைது செய்துள்ளோம். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் நாங்கள் மீட்டுள்ளோம். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரிகளின் அறிக்கை சமர்ப் பிக்கப்படும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


இக்கொலை வழக்கில் உ.பி. காவல்துறை சரிவர செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஊடகவியலாளர்கள்குழு  போராட்டம் நடத்தியும் உள்ளது.


இக்கொலை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கண்டித்துள்ளார்.


இதுகுறித்து ராகுல் காந்தி டுவிட்டரில், “தனது மகள் துன்புறுத் தப்பட்டது குறித்து புகார் அளித்ததற்காக விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். துயரத்தில் உள்ள குடும்பத்திற்கு எனது இரங்கல்! ராம ராஜ்ஜியம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், குண்டர் ராஜ்ஜியம் அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். (இராமராஜ்ஜியம் மட்டும் என்ன - சம்பூகனைக் கொலை செய்ததுதானே!)


பிரியங்கா காந்தியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் மாநில அரசை விமர்சித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸை விட குற்றவாளிகளால் பரவும் “கிரைம் வைரஸ்” மிக வேகமாக செயல்படுகிறது” என்று கூறினார்.


காவல்துறையின் அலட்சியத்தால் விக்ரம் கொலை செய்யப் பட்டார் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


முதலில் பாலியல் சீண்டல் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில் அளித்திருந்தும் அந்தப் புகாரைக் காவலர்கள் விசாரிக்கவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்டவரின் இருப்பிடம் குறித்து மட்டுமே ஒரு காவலர் குழு விசாரித்ததாக அவர்கள் கூறினர். அதன் பிறகே குற்றவாளி நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்து தாக்கிவிட்டுச் சென்றார்.  இதனை அடுத்து  ஜூலை 17ஆம் தேதி, காவல்துறை எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனை அடுத்தே அவர் சாலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையின் கேவல மான அலட்சியம் ஒரு குடும்பத் தலைவரின் - ஊடகவியலாளரின் உயிரைக் குடித்துவிட்டது.


இதுதொடர்பாக  காஸியாபாத் காவல்துறை எஸ்.எஸ்.பி கலா நிதி, விஜய்நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் ராகவேந்திராவை கடமையை செய்யத் தவறியதற்காக பணியிடை நீக்கம்  செய் துள்ளார். மேலும், ஏன் நடவடிக்கை தாமதமானது என்பதை அறிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அளவிலான ஒரு அதிகாரியின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


உயிர் பறிக்கப்பட்டபின் இந்த விசாரணை நாடகம் யாரை ஏமாற்றிட! குதிரை காணாமல் போனபின் இலாயத்தை இழுத்துப் பூட்டும் Ôஅதிபுத்திசாலித்தனம்Õதானே!


 சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் உத்தரப்பிரதேசத்தில் சர்வசாதா ரணமாகக் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சமீபத்தில் விகாஸ் துபே என்பவர் 13 காவலர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொலை செய்தார். இதனை அடுத்து நாடு முழுவதும் நடந்த போராட்டத்திற்குப் பிறகு விகாஸ் துபேவை மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனுக்குச் சென்று பிடித்து வரும்வழியில் அவனை என்கவுண்டர் செய்துள்ளனர்.


 இவ்வாறாக ஒரு குற்றத்தை மறைக்க மற்றொரு கொலை என உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. உயிரோடு பிடித்து விசாரிக்க நேர்ந்தால் திடுக்கிடும் கசப்பான தகவல்கள் வெளியாகிவிடுமே எனும் காரணத்தாலும் பல என்கவுண்டர்கள் நடப்பதுண்டு - இது எதில் சேரும் என்பது யாருக்குத் தெரியும்?


No comments:

Post a Comment