"கழகப் பயிரோடு துரோகக் களைகள்" - எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

"கழகப் பயிரோடு துரோகக் களைகள்" - எச்சரிக்கை!

ஒப்பற்றத் தலைமை (5) எனும் தலைப்பில் | காணொலி மூலம் தமிழர் தலைவர்


* கலி. பூங்குன்றன்



பயிரோடு சேர்ந்து களைகளும் வளரும் அல்லவா! தந்தை பெரியார் அவர்களின் அந்த ஒப்பற்ற பொதுத் தொண்டினூடே துரோகக் களைகளும் அவ்வப் பொழுது தலைத்தூக்கத்தான் செய்தன.


எதிர்நீச்சல் எதிரிகளிடம் என்றால், உள்குத்து உள்ளுக்குள் இருந்த துரோகச் சிந்தனையாளர்களிட மிருந்தும். ஆனால், தன் பின்னால் யார் வருகிறார்கள் என்று பார்க்காமல் முன்னேராகச் சென்ற தலை வருக்குப் பெயர்தான் தந்தை பெரியார்.


தந்தை பெரியார் எத்தனை எத்தனைத் தடை களையெல்லாம் தாண்டி வந்திருக்கிறார்கள் - எப்படித் தாண்டி வந்திருக்கிறார்கள் என்பது இயக்கத் தோழர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று.


துரோகத்திற்கு வயது கிடையாது - அவ்வப்போது தோன்றிக் கொண்டு தானிருக்கும்- நாளைக்கும்கூட நாம் சந்திக்க வேண்டியிருக்கலாம்; இயக்க வரலாறு தெரிந்தவர்கள் அப்படித்தான் நினைக்கவும் கூடும்.


சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார் தந்தை பெரியார். நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகளை அவ்வப்போது ஆதரித்துக் கொண்டும், ‘குடிஅரசு’ இதழ் மூலம்  தன்மான, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டும் தன் பொதுத் தொண்டைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப்பட்டபோது, தேர்தலில் தோற்றுத் துவண்டுப் போன நீதிக்கட்சியைக் காப்பாற்றிட பெரியாரால்தான் முடியும் என்று முடிவு செய்து, நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை சிறையில் இருந்த தந்தை பெரியார்மீது திணித்தனர் என்றே கூற வேண்டும். கிட்டத்தட்ட அய்ந்தாண்டுகள் சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தந்தை பெரியார், இந்த இரு அமைப்புகளின் கொள்கைகளையும் இணைத்து 1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் என்று உருமாற்றினார். இது தேர்தலில் ஈடுபடாது; இதுவரை பதவிகளில் உள்ளவர்களும், சர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அவற்றைத் துறக்க வேண்டும் என்று மாநாடு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், பதவி ருசி கண்டவர்கள் கொதித்தார்கள். அந்த மாநாட்டுக்குப் பெரியார் தலைமை தாங்கக் கூடாது என்று திட்டம் போட்டவர்களின் சதிகள் எல்லாம் தொண்டர்களின் எழுச்சியால் முறியடிக்கப்பட்டன. வேறுவழியின்றி தனி அமைப்பை உண்டாக்கிக் கொண்டார்கள்.


அதற்கு முன்னதாக தந்தை பெரியார் அவர்கள் அய்ரோப்பிய நாடுகளிலும், சோவியத் ருசியாவிலும் ஓராண்டுக் காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


சமதர்மப் பிரச்சாரத்தையும் இணைத்துப் பிரச் சாரம் செய்து வந்தார். ‘குடிஅரசு’ இதழில் அந்த வகையில் கட்டுரைகளை எழுதி வந்தவர் சிந்தனை யாளர் ம. சிங்காரவேலர் அவர்களுடன் இணைந்து சமதர்ம திட்டத்தைப் பிரகடனப்படுத்தியதுண்டு.


'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்று 1933ஆம் ஆண்டில் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய தற்காக தந்தை பெரியார்மீது 124 (ஏ) பிரிவின்கீழ் ராஜநிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார் (30.12.1933). குடிஅரசில் வெளி யிட்டார் என்ற முறையில் தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.


ருசியா செல்லுவதற்கு முன்பாகவே தந்தை பெரியார் அவர்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்திலும், சமதர்மக் கொள்கையிலும் ஆர்வம் மிகவுண்டு. ருசியா செல்லுவதற்கு முன்னதாகவே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் கொள்கை அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து ‘குடிஅரசு’ இதழ்களில் தொடர்ந்து வெளியிட்டவர் பெரியார்.


கம்யூனிஸ்டுப் பிரச்சாரத்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தீவிரமாக செய்கிறது என்ற கண்ணோட்டத்தில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாகக் கண்காணித்தது. ‘குடிஅரசு;’ கட்டுரையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுதான் தந்தை பெரியாருக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.


இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்கள் சமதர்மப் பிரச்சாரத்தின் வேகத்தைக் குறைத்து, சுயமரியாதை பிரச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.


ஜீவானந்தம் போன்றவர்கள் இதில் மாறுபட்டனர். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் அது வெடிக்கவும் செய்தது. தந்தை பெரியார் அவர்கள் அம்மாநாட்டில் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இயக்கம் இருந்தால்தான் கொள்கையைப் பரப்ப முடியும். காப்பாற்ற முடியும். தீவிரமாகப் பேசியதோடு நான் சிறைக்குள் போய் உட்கார்ந்து கொள்வது ஒன்றும் பெரிய வேலையல்ல.


அதே நேரத்தில் சமதர்ம திட்டத்தை நாம் கைவிட்டோம் என்பதாகக் கருதத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார். ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் அது ஒரு கட்டம்.


இரண்டாவது கட்டம்தான் சேலத்தில் 1944ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தை நீதிக்கட்சியையும் ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம்; பதவிக்குச் செல்லுவதில்லை என்று முக்கிய முடிவு எடுக்கப்பட்ட மாநாடு அது.


இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாங்கள்தான் நீதிக்கட்சி என்று அறிவித்துக் கொண்டார்கள். அப்போது சென்னை வந்த டாக்டர் அம்பேத்கரை அழைத்து அந்தச் சிறுபிரிவினர் விருந்தளித்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அம்பேத்கர் ‘ஒழுங்காக பெரியார் ஈ.வெ.ரா.வின் தலைமையை ஏற்று கட்டுப்பாடாக நடந்து கொள்ளுங்கள்Õ என்று அறிவுரை வழங்கினார்.


அதைக் கிண்டல் செய்துதான் ‘குடிஅரசு’ இதழ் Ôசோறு போட்டு உதை வாங்கிய கதை’ என்று தலையங்கம் தீட்டியது. (30.9.1944).


இது இயக்க வரலாற்றில் துரோக சக்திகளின் இரண்டாவது கட்டமாகும். இவற்றைக் கடந்து தந்தை பெரியாரின் இயக்கப் பணிகள் வேகமாகவே நடந்தன.


மூன்றாவது கட்டம்தான் பெரியார் - மணியம்மையார் திருமணத்தைக் காட்டி இயக்கத்தில் ஏற்படுத்திய பிளவாகும்.


திமுக பிரிந்து சென்றாலும், 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த நிலையில் தேர்தலில் கூட்டணி வைத்திருந்த ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்களைக் கைவிட்டு தாம் கண்ட, கொண்ட, ஒரே தலைவரான தந்தை பெரியாரைச் சந்தித்து, தந்தை பெரியாரின் ஆதரவைப் பெற்றவர் அறிஞர் அண்ணா. இந்த ஆட்சியே அய்யாவுக்குக் காணிக்கை என்று அறிவித்தவர் அண்ணா.


இடையில் எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து பின்னால் ஒருநாளில் தம் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக அவை அமைந்திருந்தன.


ஜீவா அவர்களும்கூட கருத்து மாறுபாடுடன் வெளியில் சென்றாலும் - கடும் விமர்சனங்களை வைத்தாலும் காங்கிரசுக்கே சென்றாலும், 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு தந்தை பெரியாரிடம் நெருக்கமாக வரும் நிலை எல்லாம் ஏற்பட்டதுண்டு. 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்காக தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார். சென்னை வண்ணையில் அவர் சிலையையும் திறந்து வைத்து ஜீவாவைப் புகழ்ந்து பேசினார் தந்தை பெரியார்.


 


(அவ) நம்பிக்கையானவர்கள்தான்!


தன்னிடம் நெருக்கமாகவும், அணுக்கமாகவும் இருந்தவர்கள் எல்லாம் ஒவ்வொரு காலக் கட்டத்தில் எப்படியெல்லாம் நம்பிக்கைத் துரோகம் எனும் நிலையில் நடந்து கொண்டார்கள் எனும் ஒரு பட்டியலை தந்தை பெரியார் எடுத்துக் கூறியுள்ளார்.


ஜே.எஸ்.கண்ணப்பர், கி.ஆ.பெ.விசுவநாதன், அ.பொன்னம்பலனார், பி.பாலசுப்பிரமணியம், எஸ்.இராமநாதன், லீலாவதி ராமசுப்பிரமணியம் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இவர்களில் சிலர் தந்தை பெரியார் வீட்டிலேயே தங்கியும், பணரீதியான வரவு, செலவு கையாள்வது வரை இருந்தவர்கள் உண்டு. என்றாலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் வேறு மாதிரியாக நடந்து கொண்டபோதிலும், இதெல்லாம் மனித சுபாவம் தான் என்கிற அளவில் மதிப்பிட்டு தன் பணி யைத் தொடர்ந்ததாக தந்தை பெரியார் குறிப்பிட்டு இருப்பதை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர்.


 


நான்காவது கட்டம்தான் ‘விடுதலை’ ஆசிரியராகவும் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்த குத்தூசி குருசாமி அவர்களும், மத்திய கமிட்டியின் தலைவராக இருந்த திருச்சி தி.பொ.வேதாசலம் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டதாகும்.


ஓர் உண்மையைச் சொல்லப் போனால், பெரியார் - மணியம்மையார் திருமணத்தையொட்டி எழுந்த பிரச்சினையில் பின்னணியிலிருந்து அண்ணாவுக்கு தைரியத்தைக் கொடுத்ததே குத்தூசி குருசாமி அவர்கள்தான்.


திமுக பிரிந்த பிறகு ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’யில் அண்ணா அவர்களையும், திமுகவினரையும் கண்ணீர்த் துளிகள் என்று குறிப்பிட்டுத் தாக்கித் தாக்கி எழுதிய நிலையில், அண்ணா அவர்களே தமது ‘திராவிட நாடு’ இதழில் ஓர் உணமையை உடைத்தும் எழுதிவிட்டார்.


Ôஎல்லோரும் விலகி விடுவோம் - எஞ்சி பெரியாருடன் இருப்பது மணியம்மையும், சீட்டா நாயும்தான் என்று சொன்னவர் நீங்கள்தானே, அப்பொழுதே நான் சொல்லியதுண்டு. குருசாமி அவர்களே, இருப்பார்கள் - தந்தை பெரியாருடன் இருப்பார்கள் குடும்பம் குடும்பமாக இருப்பார்கள் என்று சொன்னேன் என்பதை அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் எழுதும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் குருசாமி.


திராவிடர் கழகத்தில் இருந்தபோதே ‘விடுதலை’யில் இரட்டை அர்த்தம் தொனிக்க எல்லாம் எழுதியுள்ளார்.


(“சாதி - மத ஒழிப்பு ஒன்றையே திட்டமாகக் கொண்டு கடந்த நாற்பதாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் பேச்சுத் தொண்டு ஆற்றிவரும் ஒரே தலைவர் பெரியார் என்று எழுதியுள்ளார் பெரியார் தொண்டு என்பது வெறும் பேச்சுத் தொண்டு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.)


இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்க வேண்டாம். தெரிந்திருந்தும் அதனை அனுமதித்து வந்திருக்கிறார்.


“கழகத்தில் கோஷ்டியும், உள் பூசலும், சதி காரியங்களும் மலிந்து வருகின்றன. என் ஆயுள் வளருவதை ஆசைப்படுபவர்களைவிட, குறுகுவதை எதிர்பார்க்கின்றவர்கள் அதிகமாகிறார்கள். முன்னைய அனுபவங்களைக் கொண்டு இதை இயற்கையென்றே கருதி என் இஷ்டப்படி நடக்கின்றேன்ÕÕ என்று தந்தை பெரியார் எழுதுகிறார் என்றால் துரோகத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாமே!


எந்த அளவுக்கு குருசாமி அவர்களும், தி.பொ. வேதாசலம் அவர்களும் சென்றனர் என்றால் வருமான வரித்துறைக்கு குற்றஞ்சொல்லி புகார் கடிதம் எழுதும் அளவுக்குச் சென்றனர் - இவ்வளவுக்கும் தி.பொ.வேதாசலம் அவர்களோ பெரியார் அறக்கட்டளையின் துணைத் தலைவர். விடுதலை ஆசிரியர் குருசாமியோ அறக்கட்டளை உறுப்பினர் இப்படிப் பொறுப்பில் இருந்து கொண்டே இந்தத் துரோகத்தைச் செய்துள்ளனர்.


தந்தை பெரியார் இருந்தபோது ரூ.15 லட்சம், அன்னை மணியம்மையார் காலத்திலோ ரூ.60 லட்சம், அதன்பின் ரூ.80 லட்சம் என்றுவரி போடப்பட்டது. வழக்குத் தொடுத்து அதில் நாம் வெற்றி பெற்றோம் என்பது வேறு விஷயம்.


சட்ட எரிப்புப் போராட்டத்தில் குருசாமி அவர்கள் சிறையில் இருந்தபோதே கோஷ்டி சேர்க்க ஆரம்பித்து விட்டார். வேலூரிலும், நெல்லையிலும் பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் இதுபற்றி எல்லாம் பேசியிருக்கிறார்.


பிறகு குத்தூசி குருசாமி தனிக்கட்சி கண்டார். பத்திரிகையும் நடத்தினார். பெரியாரை எதிர்த்து எதிலும் வெற்றி பெற முடியவில்லை.


குருசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்தது - அப்பொழுது தந்தை பெரியார் திருச்சியில் இருந்தார். விடுதலையில் தலையங்கம் எழுதுவதுபற்றி திருச்சியில் இருந்த தந்தை பெரியாரிடம் தொலைப்பேசி வழிப்பேசி தந்தை பெரியார் அறிவுரைப்படி துணைத் தலையங்கத்தை ‘விடுதலை’யில் எழுதினேன். இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணாவையும் அப்பொழுதுதான் அங்கு கண்டேன்.


‘விடுதலை’யில் துணைத் தலையங்கம் எழுதியதற்காக என்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தந்தை பெரியார் கூறுவதைக் கட்டளையாக ஏற்று செயல்படுவதுதான் என் வேலை. தந்தை பெரியார் தந்த புத்தி என்று நான் சொல்லுவது இதைத்தான்.


இயக்கத்தை நடத்தும் முறையில் இடுக்கண்களை, இடையூறுகளை, எதிர்ப்புகளைச் சந்திக்கும் நேரத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் - எதிர் கொள்ள வேண்டும் என்பதை தம் அனுபவங்கள் மூலமும், நடப்புகள் மூலமும் நமக்கு வழி காட்டிச் சென்றுள்ளார் தந்தை பெரியார்.


அதை பின்பற்றுவோம் - தந்தை பெரியார் பாதையில் அவர் காண விரும்பிய இலட்சியத்தை நிறைவேற்றும் பணியில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டு செயல்படுவோம்.


வாழ்க பெரியார்


வளர்க பகுத்தறிவு


குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் பெயரால் 28.7.1949 தேதியிட்ட ‘விடுதலை’யில் Ôவருத்தமும் விஞ்ஞாபனமும்Õ எனும் பெயரில் ஓர் அறிக்கை வெளியாகியிருந்தது. உண்மையில் அது மாதிரியான அறிக்கை தந்தை பெரியார் எழுதவேயில்லை; ஆனாலும், தந்தை பெரியார் கையொப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை வெளிவந்தது என்றார் தந்தை பெரியார். எத்தகைய துரோகக்காரர்கள் மத்தியில் தொண்டு செய்து வந்திருக்கிறார் என்பது விளங்கும். இதுகுறித்து தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த தகவல் தனியே காண்க.


No comments:

Post a Comment