அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்திர டிரஸ்ட் என ஓர் அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் "மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நீங்கள் மதவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது" என்று தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தும் அதனையும் மீறி மோடி பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மற்றும் மூத்தத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த விழாவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனாத் தலைவர், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு ராம ஜென்ம பூமி விழாவிற்கு இதுவரை அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி முதலியோர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் லக்னோவில் உள்ள சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி காணொலி மூலம் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அத்வானியிடம் சுமார் நான்கரை மணி நேரத்தில் கேட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில், தம் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரும் தங்கள்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் உமாபாரதிக்கு ராமர் கோவில் பூமிபூஜை விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அவர் அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு மோடி தலைமையிலான ராம ஜென்மபூமி நிர்வாக அறக்கட்டளை எந்த பதிலும் கூறவில்லை. மேலும் "ராமர்மீது பக்தி கொண்ட யாரும் கலந்து கொள்ளலாம்; இதுபோன்ற விழாவில் தலைவர்கள், பிரமுகர்கள், சாதாரண மக்கள் என்று வேறுபாடு பார்க்க முடியாது, அனைவரும் சமமே" என்று விளக்கம் சாமர்த்தியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உமாபாரதியிடம் கேட்டபோது, "ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் எனக்கு அழைப்பு விடுக்கிறார்களா என்பது கேள்வி அல்ல, அந்த விழாவில் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பில் மோடி கலந்துகொள்கிறார். இதுவே பெருமையான ஒன்று ஆகும்" என்று கொஞ்சம் நக்கலடித்தே அவர் பதில் கூறினார்.
ராமர் கோவில் விவகாரத்தால்தான் இந்தியாவில் பா.ஜ.க. என்னும் கட்சியே அடித்தளம் போட்டது, இந்த அடித் தளத்திற்கு மிகவும் உறுதியாக இருந்தவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றோர் ஆவர். முக்கியமாக, உமாபாரதி பாபர் மசூதியின் முதல் கோபுரம் இடிக்கப்பட்டபோது, 'அங்கிருந்து ஒவ்வொரு செங்கலையும் பெயர்த்து எடுங்கள், ஜெய் சிறீராம்' என்று கூச்சலிட்டுகொண்டு தந்தையின் தோள்மீது ஏறிவிளையாடும் சிறுகுழந்தைபோல் முரளிமனோகர் ஜோஷியின் தோளில் உப்புமூட்டையாக ஏறிக்கொண்டு கூச்சலிட்டார், அப்போது அவர் முகத்தில் காணப்படும் குதூகலம் சொல்லி மாளாது; மோடி ஆட்சிக்கு வந்தது முதலே அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர் ஓரங்கட்டப்பட்டனர். அதேபோல் உமாபாரதியும் பல்வேறு அவமானத்திற்கு ஆளாகி வந்தார், இந்த நிலையில், இப்போது ராமர் கோவில் கட்டும் பூமி பூஜையில் அவர் கலந்துகொள்வதைக்கூட மறை முகமாக தடுத்துவிட்டார்கள்.
ஏற்கெனவே உமாபாரதி பல வகைகளிலும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். மத்தியப் பிரதேச முதல் அமைச்சராக இருந்தபோது ஒரு வழக்கின் காரணமாக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
வழக்கில் அவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வந்தது; ஆனாலும் முதல் அமைச்சர் நாற்காலி அவரிடம் வந்து சேரவில்லை. கேட்டால் எங்களைப்போல் எல்லையற்ற தார்மீகவாதிகள் உலகில் இனிமேல்தான் பிறந்து வர வேண்டும் என்று வானில் ஏறிக் கூறுவார்கள்.
ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சன், உமாபாரதி பற்றி கூறியபோது அவர் பிறப்பையே கொச்சைப்படுத்தினார். வளர்ந்த குடும்ப சூழல் சரியில்லை என்று சொன்னதுண்டு.
உ.பி. முதல் அமைச்சராக இருந்த கல்யாண்சிங்கும், உமாபாரதியும் பிஜேபி என்பது 'பிராமின் கட்சி' என்று சொன்னது உண்டு. நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்டவர்தானே என்று பதில் சொல்லலாம். ஆர்.எஸ்.எஸின் கைப்பாவையாக இருக்கும்வரைதான் எல்லாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.
No comments:
Post a Comment