‘‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த மாட்டோம்; பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்'' என்று தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 28, 2020

‘‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த மாட்டோம்; பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்'' என்று தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்



சென்னை, ஆக.28  தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்தமாட்டோம்; பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்'' என்று தமிழக அரசு பிரகட னப்படுத்தவேண்டும் என்று தளபதி மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-


'இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்குத் தாருங்கள் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பிர தாய முறையில் எழுதியிருக்கும் வழக்கமான கடிதமும், அதற்கு முரண்பாடாக, கரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்திக் கொள்ள லாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பழனிசாமி கடலூரில் சொல்லி இருப்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள பச்சைத் துரோகங்கள்.


நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்குத் தேவை என்பதுதான் தமிழக மக்களின் ஒரு மித்த கோரிக்கை. ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குக் கோரி, சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு; அதற்கு மாறாக, முதல்வரே பேசுவது தமிழ் நாடு இதுவரை கண்டிராத விசித்திரம்.


அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு தனது அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்துக்கு எதி ராகவே பேசும் முதல்வர் என்ற 'புதிய சாத னையை' பழனிசாமி படைத்திருக்கிறார். சந்தர்ப்பவாத பூனைக்குட்டி இப்போதாவது வெளியே வந்திருந்திருக்கிறதே என்று தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!


நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குக் கோரிய தமிழக சட்ட முன்வடிவுகளை மத் திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; அதிமுக அரசு, அந்தச் சட்ட முன்வடிவுகளைக் கமுக்கமாகக் கைவிட்டுவிட்டது!


நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக அரசு எடுத்துள்ளதை, தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். செல்வங்கள் அனிதா, சுபசிறீ தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.


தமிழகச் சட்டப் பேரவையைக் கூட்டி, "தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த மாட் டோம்; பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்" என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.


நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு அல்ல, உயிர்க்கொல்லி 'நீட்'டிடம் இருந்து, கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு! அந்தப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையில் இருந்து அதிமுக அரசு, அரசியல் காரணங்களுக்காக, நழுவிப் போக நினைத்தாலும், மாணவர் நலனிலும் சமூக நீதியிலும் தளராத நம்பிக்கை கொண்டுள்ள திமுக அதை அனுமதிக்கவே அனுமதிக்காது'.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment