சந்திரயான்-2: ஆர்பிட்டர் ஆய்வு பணியை 7 ஆண்டுகள் தொடரும் - இஸ்ரோ தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

சந்திரயான்-2: ஆர்பிட்டர் ஆய்வு பணியை 7 ஆண்டுகள் தொடரும் - இஸ்ரோ தகவல்

சென்னை, ஆக. 24- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. நிலவில் தரை இறங்குவதில் தோல் வியை தழுவி இருந்தாலும், விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுக்கான படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பி வருகிறது. இது தற்போது 7 ஆண்டுகள் வரை தரவுகளை அனுப்ப உள்ளது. இதுகுறித்து இஸ்ரோவின் மூத்த அறிவியலாளர்கள் கூறியதாவது:-


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் ஆய்வுப்பணிக்காக பொருத்தப்பட்டு இருந்த நவீன கருவிகளான ஆர்பிட்டர் கலன் மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 3-டி கேமராக்கள் உள்பட 8 விதமான ஆய்வு கருவிகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஓராண்டில் 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட முறை நிலவை சுற்றி தரவுகளை சேகரித்து உள்ளது. அதில் உள்ள நவீன கருவியான ஆர்பிட்டரின் ஆய்வுக்காலம் ஓராண்டு என்று முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதில் அதிகளவு எரிபொருள் இருப்பதால் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டர் ஆய்வு பணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


அம்பத்தூர் தொழிற்பேட்டையில்


உயர்கோபுர மின்விளக்கு இயக்கம்


சென்னை,  ஆக. 24- சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில், புதிதாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தியாளர்களின் சங்கமான அய்மா அலுவலகம் அமைந்துள்ள - முதலாவது பிரதான சாலை சந்திப்பில், இந்த உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை காவல் சரகத்தின், வடக்கு மாவட்ட போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் எம்.எம். அசோக் குமார், அண்மை யில் இதனை இயக்கி வைத்தார். சென்னை வாகன உதிரிபாக உற் பத்தி கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அளித்த கோரிக்கையை ஏற்று, இந்தத் தொழிற்பேட்டையிலேயே செயல்பட்டு வரும் கே-லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமது சொந்த செலவில் இந்த உயர் கோபுர மின்விளக்கை அமைத்துக் கொடுத்துள்ளது என கே-லைட் இன்டஸ்ட் ரீஸின் தலைமை செயல் அதிகாரி திலிப் கும்பத் தெரிவித்துள்ளார்.


புகையிலை விற்ற வழக்கில் கைதானவர்:


கபசுர குடிநீர் வழங்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,ஆக.24, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவர், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மருதாச்சல மூர்த்தி, நிபந்தனை அடிப்படையில் மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு குற்றவியல் வழக்கு ரைஞர் டி.சண்முகராஜேஷ்வரன், கரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இந்த புகையிலையை பயன்படுத்துபவர்கள், அதை சுவைத்து விட்டு பொதுஇடங்களில் எச்சில் துப்புவார்கள். ஏற்கனவே குமாரபாளையத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ளது. கட்டுப் பாட்டு பகுதி என்று 6 பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, ‘மனுதாரர் தன் சொந்த செலவில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவிக்க, நிபந்தனைகளுடன் கூடிய பிணையை நீதிபதி வழங்கினார். அதில், குமாரபாளையத்தில் உள்ள அட்சயம் அறக் கட்டளைக்கு ரூ.50 ஆயிரத்தை மனுதாரர் வழங்க வேண்டும். அந்த தொகையை கொண்டு அந்த அறக்கட்டளை பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்தார்.


No comments:

Post a Comment