அரசமைப்புச் சட்டத்திற்கே முரணான தேசிய கல்விக் கொள்கை - 2020 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

அரசமைப்புச் சட்டத்திற்கே முரணான தேசிய கல்விக் கொள்கை - 2020

ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக்கும் ஆபத்தான கல்விக் கொள்கை!



இந்தியா ஓர் ஒற்றை ஆட்சி நாடல்ல. அதன் அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்டது. அரசமைப்புச் சட்ட 246-ஆவது பிரிவின்படி, சட்டமியற்றும் அதிகாரங்கள் மத்திய அரசுக் கும், மாநில அரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்ட, ஏழாவது அட்டவணையில் சட்டமியற்றும் அதிகார வரம்புகள் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. முதல் பிரிவு மத்திய அரசுப் பட்டியல் (Union List-List-I), இரண்டாவது பிரிவு மாநிலப் பட்டியல் (State List-List-II),  மத்திய அரசும் மாநில அரசுகளும் சட்டமியற்றக் கூடிய பட்டியல் ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent-List - List-III). மத்திய அரசுப் பட்டியலில் கண்டுள்ள பொருள்களின் மீது மாநிலங்கள் சட்டமியற்ற இயலாது, கூடாது. அதுபோன்றே மாநிலப் பட்டியலில் கண்டுள்ள பொருள்மீது மத்திய அரசு சட்டம் இயற்ற இயலாது, கூடாது. மூன்றாவது பட்டியலில் கண்டுள்ள பொருள்கள் மீது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. ஆனால் இரண்டு சட்டங்களுக்கும் இடையே மாறுபட்ட கருத்துடைய பகுதிகள் இருந்தால் மத்திய அரசின் சட்டமே நடைமுறைப்படுத்தக் கூடும். இரண்டு சட்டங்களுமே நடைமுறைப்படுத்தும் வகை யில்  இருந்தால், இரண்டு சட்டங்களுமே நடைமுறை யில் இருக்கும். மாறுபாடுடைய மாநிலச் சட்டப் பகுதி கள் மட்டுமே செயல்படுத்தக் கூடாததாகக் கருதப்படும்.


மத்திய, மாநில இரண்டு அரசுகளுமே சட்டமியற் றலாம் என்பதாலும், மாறுபாடிருந்தால் மத்திய அரசுச் சட்டமே நடைமுறைப்படுத்தப்படக் கூடும் என்பதாலும் மூன்றாவது பட்டியலில் உள்ள அனைத்து அம்சங் களைப் பொருத்தும் மத்திய அரசே சட்டமியற்றி, 254(2) பிரிவினைப் பயன்படுத்தி அனைத்தையும் மத்தியப் பட்டியல் போன்றே செயல்படுத்துவது, அல்லது செயல்படுத்த நினைப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயலாகும்.


மூன்றாம் பட்டியல் Concurrent List என்பதை ‘பொதுப்பட்டியல்’, Common List என்று கூறுவது சரியல்ல. 'Concur' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ஒத்துப் போதல்’, ‘ஒத்துக்கொள்ளல்’ அல்லது ‘சம்மதித்தல்’ என்பதே பொருள். மாநிலங்கள் ஒத்துப் போகாதபோது அல்லது சம்மதிக்காதபோது, அல்லது ஏற்றுக் கொள்ளாத போது, அந்த வகையில் மத்திய அரசு சட்டம் எதையும் இயற்றக்கூடாது. மத்திய மாநில அரசுகள் கூட்டாக முடிவு செய்யவேண்டும் என்பதே அரசியல் சட்டத் தத்துவம். மிக மிக முக்கியமான நேரங் களில், அல்லது அம்சங்கள் குறித்து, மிக அரிதாகவே அரசமைப்பின் 254(2) பிரிவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படைக் கட்டுமானமாகும்.


அரசமைப்புச் சட்ட 254(2)ஆம் பிரிவினைப் பயன் படுத்தி, மூன்றாவது பட்டியலில் கண்டுள்ள அனைத்து அம்சங்களின் மீதும் சட்டமியற்றி மாநிலங்களின் சட்டங்களைச் செல்லாச் சட்டங்களாக்க முயற்சிப்பது அரசியல் சூழ்ச்சி, அல்லது வஞ்சனை ஆகும். அவ்வாறாகச் செயல்பட்டு மூன்றாவது பட்டியலை நடைமுறையில் முதல்பட்டியலாக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல. அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயலாகும். அரசமைப்புச் சட்டமெனும் தேரின் அச்சாணி போன்ற இந்தக் கோட் பாட்டினைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை இக்கட்டுரையில் பகுப் பாய்வு செய்யப்படுகிறது.


கல்வி என்றால் என்ன?


கல்வி (education) என்ற சொல்லுக்கு பொது அறிவை மேம்படச் செய்யும் வகையிலான பயிற்சி, அல்லது பொதுக்கல்வி என்பதே பொருள். ‘கல்வி கற்றவன்’ என்றால் பொது அறிவு பெற்றவன் என்பதைக் குறிக்கும். ‘கற்பித்தல்’ என்பதும் பொது அறிவைக் கூட்டுவதே ஆகும்.


இது குறித்து 1930-ஆம் ஆண்டிலேயே இங்கிலாந் தில் In Re Institution of Civil Engineering (19QBD610)  என்ற வழக்கில் ‘கல்வி’ என்பது பொதுக்கல்வியைத்தான் குறிக்கும் என்றும், அது தொழிலையோ, வணிகத் தையோ கற்றுத்தருவதைக் குறிக்காது என்றும் தீர்ப் பளிக்கப்பட்டுள்ளது. பொது அறிவை வளர்ப்பதும், காரண காரியங்களை உணர்ந்துகொள்ளவும், தீர்மானிக் கவும், முதிர்ச்சியுடனும், அறிவாற்றலுடனும் வாழ்க் கையை எதிர்நோக்கும் ஆற்றலையும் கற்றுத் தருவதே கல்வி ஆகும். தொழில் செய்வதற்குப் பயிற்சி அளிப் பது ‘கல்வி’ ஆகாது.


முக்கியமான அரசமைப்புச் சட்டக் கூறுகள்


அரசமைப்புச் சட்ட 21Aஆம் பிரிவு, ஓர் அடிப்படை உரிமை ஆகும். அதன்படி “அரசானது ஆறுமுதல் பதினான்கு வயதுக் குழந்தைகள் அனைவருக்குமே கட்டாய இலவசக் கல்வி அளிக்க அரசு வகை செய்ய வேண்டும்.” இதில் கண்டுள்ள ‘கல்வி’ என்பது பொதுக் கல்வியையே குறிக்கும். அது தவிர அரசுக்கு “வழிகாட்டுக் கொள்கைகள்” என்ற வகையில், பிரிவு 38(2)இன் கீழ், மக்களிடையே நிலவும் ‘சமத்துவமற்ற நிலை’களைக் களையவும் (eliminate inequality in status), அதற்கேற்றவாறு வாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும் என்று குறிப்பிடுகிறது. பிரிவு 39(f). “குழந்தைகளுக்குத் தேவையான வாய்ப்புகளை அளித்து, சிறந்த முறையில் சுதந்திரமும் மதிப்பும் கிடைக்க வழிசெய்ய வேண்டும்; மேலும் குழந்தை களையும், இளவர்களையும், மற்றவர்களின் சுய நலத்திற்காகப் பலிகடாவாக்கப்படுவதிலிருந்து காத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறது.


பொத்திவைக்கப்பட்ட அரும்பொருள்


(Closeted-Virtue)  


அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இந்தி யாவில் பல நூறாண்டு காலமாக, அனைவரும் கல்வி கற்கத் தகுதி படைத்தவர்கள் அல்ல என்ற நிலைதான் இருந்தது; எல்லோருக்கும் கல்வி கற்றுத் தரக்கூடாது என்ற நிலைதான் இருந்தது. அக்காலகட்டத்தில் ஒரு சில வகுப்பினருக்கே கல்வி கற்றுத்தரப்பட வேண்டு மென்ற நிலை இருந்தது. மற்றவர்கள் கடின உழைப்பே செய்ய வேண்டும். அதுவும் சில நேரங்களில் ஊதியம் எதுவும் இல்லாமலேயே உழைக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது. அதனால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புக்கே கடினமாக இருந்தது. கல்வி என்பது அக்கால அதிகார வர்க்கத்தினால் பொத்திப் பாதுகாக் கப்பட்ட ஓர் அரும்பொருளாகவே இருந்தது.


அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர்...


போர்த்துக்கீசியர்கள்தான் புதியகல்வியை 1715ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். இந்தியாவின் முதல் பள்ளியாக சென்னை மாநகரில் உள்ள செயிண்ட் பால் பள்ளி 1717ஆம் ஆண்டு அவர் களால் துவக்கப்பட்டது. அவர்களுக்குப் பின்னர் வந்த கிழக்கிந்தியக் கம்பனியர்கள், இங்குள்ளவர்களுக்கு கல்வியூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1813ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசின் உத்தரவுக்குப் பின்பே அவர்கள் இங்குள்ளவர்களின் கல்வி மீது அக்கறை செலுத்தினர்.


அதன்பின் சமஸ்கிருதமும், அரேபிய மொழியும் மட்டுமே கற்றுத்தரப்பட்டன. இங்கிலாந்து அரசின் கட்டளைப்படி இந்தியாவுக்கு ‘மெக்காலே’ வந்த பின்பே நவீனக் கல்வியில் முன்னேற்றத்திற்கு வழி ஏற்பட்டது. இங்கு நிலவிவந்த கல்வி முறையை நன்கு உணர்ந்து அறிந்து கொண்ட பின் மெக்காலே அவரு டைய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்து உள்ளார்.


“கோடிக்கணக்கான இந்தியர்களின் புனித நூல்கள் சமஸ்கிருதம் மற்றும் அரேபிய மொழியில் எழுதப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


உண்மையில் மிகக்குறைந்த இலக்கிய மதிப்புடை யவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை, மிக முக்கியமான அம்சங்களைப் பொருத்தும், அவற்றில் கண்டுள்ள தவறான தகவல்களை மனதில் பதிய வைக்கும் வகையில் கற்றுத் தருவதை ஊக்குவிக்க இயலாது. நாம் தவறான வரலாற்றையும், தவறான விண்வெளிக் கல்வியையும், (வானசாஸ்திரத்தையும்), தவறான மருத்துவ முறைகளையும் தற்போது கற்றுத்தர வேண்டி உள்ளது.


மாணவர்களின் இளமையை, ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் தன்னை எவ்வாறு சுத்தப்படுத்திக் கொள்வது அல்லது ஒரு ஆட்டைக் கொன்ற குற்றத்திலிருந்து விடுபடுவதற்கு வேதத்தின் எந்தப் பகுதியை ஓத வேண்டும் என்பதைக் கற்பதில், வீணாக்குவதிலிருந்து விலக்கிட வேண்டும்.


இப்போது நாம் நம்மால் இயன்ற மிகச் சிறந்த சேவையைச் செய்ய வேண்டி, இந்தியாவின் ரத்தமும் நிறமுமாயும், ஆனால் சுவையிலும், எண்ணத்திலும், நீதிகளிலும், அறிவிலும் ஆங்கிலேயரைப் போல் உள்ள ஒரு வகுப்பினரை (class of persons) உருவாக்க வேண்டும்”.


அதாவது மெக்காலேவின் அறிக்கையில், அக்கால கட்டத்தில் இந்தியாவில் ‘குருகுலக்’ கல்வி மூலம் பயிற்றுவிக்கப்பட்ட கல்வியில், தவறான தகவல்களைக் கற்றுத் தருவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், இந்தியர்களும் ஆங்கிலேயர்களைப் போன்று விஞ்ஞானமுறையில் சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார். சிறந்த புத்தகங்கள் ஆங்கில மொழியில் அதிகம் உள்ளதால் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அந்த அறிக்கையினைப் பின்பற்றியே 1835 ஆம் ஆண்டில் சட்டமும் இயற்றப் பட்டு நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து பல ஆங் கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறுதான் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் முறையான கல்வி கிடைக்கலானது. அதனைத் தொடர்ந்தே, சில வகுப்பினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கல்விமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


மெட்ராஸ் மாகாணத்தில் கல்வி


இந்திய அரசுச் சட்டம் 1919ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட பின் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெற்று 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி மெட்ராஸ் மாகாணத்தில் அரசமைத்தது. அப்போது 1921, 1922 ஆம் ஆண்டுகளில் அரசுப் பணிகளிலும், கல்விக் கூடங்களிலும் வகுப்பு வாரி இடஒதுக்கீட்டிற்கு வகை செய்து அரசாணை போடப்பட்டது. ஆனால் அவை நடைமுறைக்கு வர வில்லை. பின்னர் 1927 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் ஆதரவுடன் அரசமைத்த சுப்பராயன் பிரதம அமைச்ச ராக இருந்தபோது முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வழி செய்தார். அதன்படி அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னரே அனைத்து வகுப்பினருக்கும் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியது. ஆனால் அந்த வாய்ப்பு மற்ற பல வட மாகாணங்களுக்குக் கிட்டவில்லை. இதுபோன்று இடஒதுக்கீடு அங்கு நடைமுறைக்கு வரவில்லை. எனவே அங்கெல்லாம் அனைத்து வகுப்பினரும்/ஜாதியினரும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.


அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர்


இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது பெருத்த விவாதங்களுக்குப் பின் ‘கல்வி’ என்பது மாநிலப்பட்டியல் என்னும் பட்டியல் 2இல் இடம் பெற்றிருந்தது. இதுவே, கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள நடைமுறையாகும். ஆனால் 1976 ஆம் ஆண்டு அவசரகால நடைமுறை இருந்தபோது அதனை ஒத்திசைவுப் பட்டியலுக்கு, மூன்றாம் பட்டியலில் வரிசை 25 ஆக மாற்றி அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதனால் மத்திய மாநில அரசுகள் இரண்டுமே அதற்காக சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவையாயின.


‘கல்வி’யை மத்திய அரசின் தனி ஆளுகைக்குக் கொண்டு செல்லும் முயற்சி


தற்போது, அரசமைப்புச் சட்டத்தினை, மாறுபட்ட கோணத்தில் அணுகி, மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சட்டமியற்றும் அதிகாரமுள்ள மூன்றாம் பட்டியலில் உள்ளவைகளை முதல் பட்டியலைப்போன்று, மத்திய அரசின் தனிப்பட்டியலைப் போன்ற நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. இதுபோன்ற ஆர்வம் இதற்கு முன்பிருந்த அனைத்து மத்திய அரசுகளிடமும் காணப்பட்டது. அதன் வெளிப் பாடுதான் முன்னர் வெளியிடப்பட்ட சில தேசியக் கல்விக் கொள்கைகளும், பல்கலைக் கழக மானியச் சட்டம் (U.G.C. Act) போன்ற சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையும். முந்தைய ஆட்சிகளிலாவது கல்விக் கொள்கை கள் கல்வியாளர்களின் அறிக்கைகள் பெற்று வடிவ மைக்கப்பட்டன. ஆனால் தற்போதைய 2020 கல்விக் கொள்கையானது கல்வியாளர்களால் வகுக்கப்பட வில்லை. (குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர்). மாறாக அணு விஞ்ஞானியைத் தலைவராகக் கொண்ட குழுவினால் வகுக்கப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினர் களும் வேறுதுறையைச் சார்ந்தவர்களே. அதுவே இக் குழு அமைத்ததில் மிக முக்கியமான பெருந்தவறு. இது கொல்லன்பட்டறையில் பணியாற்றுபவர் விவசாயத்தை விருத்தி செய்ய ஆலோசனை சொல்வது போலாகும்.


அடுத்த பெருந்தவறு, இந்தக் குழு ‘கல்வி’ என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் முதல் பட்டியலைப் போன்று, தனித்த அதிகாரத்திற்குட்பட்டது போன்ற நினைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ‘கல்வி’ மாநிலங் களுக்கும் அதிகாரம் அளிக்கும் ஒத்திசைவுப் பட்டிய லில் உள்ளதால் பாத்தியதையுடைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கலக்காமல் அவற்றின் பிரதிநிதிகள் எவருமே இல்லாத குழுவை அமைக்கும் அதிகாரமும் மத்திய அரசுக்கு இல்லை. அந்தக்குழு கொடுத்த அறிக் கையை நடைமுறைப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதற்கு ஒப்பாகும். அரசமைப்புப் பிரிவு 254(2)இன் படி, மாநிலச் சட்டங்கள் மத்திய அரசுச் சட்டங்களுக்கு எதிராக இருப்பின் அந்த அளவுக்கு மாநில அரசுச் சட்டங்கள் செல்லாது என்ற கோட்பாட் டினை மனதில் கொண்டு, தனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்ற நினைப்பில் செயலாற்றியது போல் தோன்றுகிறது. ஆனால் 254 ஆவது பிரிவு நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். அரசாணைகளுக்குப் பொருந்தாது. இக் காரணங்களுக்காக 2020 ஆம் ஆண்டு தேசியக் கல் விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இயலாது. காரணம் குழு அமைத்ததே சட்ட விரோதம் என்பதால் தான்.


விடுதலைக்கு முன் இருந்த கல்வி முறைகள்


இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. விடுதலைக் குப் பின், அது தாய்மொழி அல்லது பிராந்திய மொழி யாக மாறியது. மேலும் அக்காலங்களில் பல்வேறு வகை யான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அனைத்துப் பகுதிகளிலும் E.S.L.C. (Elementary School Leaving Certificate) ஆரம்பப் பள்ளிச் சான்றி தழ் பெரும் வகையிலானது; 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை; 8ஆம் ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெற்றால் இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து மேலும் கல்வியைத் தொடரலாம். இதில் ஆங்கிலமே இல்லாமலும் தேர்ச்சிபெற வாய்ப் பிருந்தது. மற்றொருதிட்டம் S.S.L.C. (Secondary School Leaving Certificate) 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலானது. இதில் 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங் கிலம் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுபவர்கள் கல்லூரியில் சேர இயலும். பகுதி பகுதியாகத் தேர்ச்சி பெற்றால் அவர்க ளுக்கு S.S.L.C. ‘முடித்த’தாகச் சான்றிதழ் தரப்படும்.


அவ்வாறு ‘முடிப்பவர்கள்’ பல்கலைக் கழகப் படிப்புப் படிக்க இயலாது. வேறு தொழிற்கல்வி, (ITI போன்று) படிக்கலாம். மற்றொரு திட்டம் ‘மெட்ரிகு லேசன்’ திட்டம். இதில் ஆங்கிலம் பயிற்று மொழியாகும். 1 முதல் 10 ஆண்டுகள் படித்த பின் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிக்கலாம். இது தவிர ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை இருந்தது. அதிலும் ஆங்கிலமே பயிற்று மொழி, ஆனால் சற்று குறைந்த அளவு பாடங்களே படிப்பர். இதுவும் 1 முதல் 11 ஆண்டுப் படிப்பு. இவற்றைத் தவிர vocational course, ‘தொழிற் கல்வி’ முறை. இதில் வேலைக்குப் போவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சில முறைகளும் இருந்திருக்க வாய்ப்புண்டு.


கல்வித் துறையில் சீர்திருத்தங்கள்


தமிழ்நாட்டில், கல்வித்துறையில் ஆய்ந்து அறிந்த அறிஞர்களின் குழுக்கள் பல அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பின்னர், அனைத்துக் கல்வி முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. 10, +2 என்ற கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுத் தேர்வுகள் 10 ஆம் ஆண்டு இறுதியிலும் பன்னிரண்டாம் ஆண்டு இறுதியிலும் நடக்கும். அதாவது 11 ஆண்டு பள்ளிப் படிப்பு, 12 ஆண்டுகளாகக் கூட்டப்பட்டது. S.S.L.C. என்பது மாறி H.S.C., (+2) (Hig her Secondary School Certificate) மேல்நிலை பள்ளிப் படிப்பானது '+2' (பிளஸ்2) என்றும் அறியப்பட்டது.


பல்கலைக்கழகப் படிப்பு 


பதினொன்றாம் வகுப்பு முடித்தபின் கல்லூரிகளில் (Intermediate) 2 ஆண்டு படிப்பு முறை 1956 ஆம் வருடம் வரை இருந்தது. அதன்பின் 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு இருந்தது. அத்துடன் 3 ஆண்டு ‘ஆனர்ஸ்’ (Honours) B.A. (Hons.), B.Sc. (Hons.) என்று இருந்தது. ஆனர்ஸ் (Honours) படிப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் Recommended (B.A. or B.Sc.) சாதாரண பட்டம் (B.A., B.Sc. போன்று) அளிக்கப் பரிந்துரைக்கப்படுவார்கள். ஆனர்ஸ் படிப்பு முடித்த பின் சில ஆண்டுகள் கழித்தபின் அதுவே 'M.A.' பட்டம் ஆகிவிடும். பட்டப் படிப்பு முடித்தபின் 2 ஆண்டு பட்ட மேல்படிப்புத் திட்டம் இருந்தது.


1957 ஆம் ஆண்டு முதல் (Inter-mediate) இடை நிலை பட்டப் படிப்பு முறை முடிவுக்கு வந்தது. அது 1 ஓராண்டு Pre-University, ‘புகுமுகவகுப்பு’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டு பட்டப் படிப்பு 3 ஆண்டுகளாயின. அதாவது தொடக்கத்தில் 11+2+2 திட்டம்  11+1+3=15 திட்டமானது.


ஆங்கில மொழி 6 ஆம் வகுப்பு முதலே...


சுமார் 1970 ஆம் ஆண்டு வாக்கில், பள்ளிகளில் முதல் வகுப்பில் 5 வயது முடிந்தபின் சேர்க்கப்படும் வழக்கம் மாறி ‘கிண்டர்-கார்ட்டன்’ முறை ஏற்கப்பட்ட தனால் 4 வயதில் K.G. வகுப்பிலும், அதை முடித்தபின் முதல் வகுப்பிலும் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். பின்னர் அது 2 ஆண்டு K.G.. வகுப்புகளாயின.  அதன் பின், கிண்டர்-கார்ட்டனுக்கும் முன்பாக Play-school  விளையாட்டுப் பள்ளி தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.


- நாளை முடியும்


No comments:

Post a Comment