21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் மீதான "தாக்குதல்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 25, 2020

21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் மீதான "தாக்குதல்!"

ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் பிணையில் வெளிவந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு, திருமணம் முடிந்த நிலையில் மீண்டும் சிறைக்குச் செல்லும் கொடுமை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது.


சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன் கணவரை விடுப்பில் (பரோலில்) விடுவிக்கக் கோரி ஒரு பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தபோது, தனக்கு திருமணம் ஆகும்போது தன் கணவன் ஓர் ஆயுள் தண்டனைக் கைதி என்றே தெரியாது. கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்கால பிணையில் வெளியில்வந்த தன் கணவர் அந்த விவரங்களை எல்லாம் மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அந்த பெண் கூறினார். இதைக் கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுபோல ஒரு வழக்கு அல்ல; பல வழக்குகள் நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தன. அண்மையில், அஸ்லாம் என்பவரை 30 நாட்கள் விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவரும் ஆயுள் தண்டனைக் கைதி என்று தெரிந்தே திருமணம் செய்துள்ளார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவரை விடுப்பில் விட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார். அவர் தாக்கல் செய்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் விடுப்பில் வெளியில் வந்த தன் கணவர், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அன்றே அவர் சிறைக்கு சென்று விட்டதாகவும், தற்போது மாமியாருடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பெண் சொந்த விருப்பத்தின்பேரில் திருமணம் செய்துகொண்டாரா? அல்லது ஜாதி, மத நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் இவருக்கு கட்டாயத் திருமணம் நடந்ததா என்பது தெரியவில்லை.


இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுப்பில் வெளியில் வந்து திருமணம் செய்து விட்டு உடனே சிறைக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.


ஓர் ஆயுள் தண்டனைக் கைதியை திருமணம் செய்து விட்டு, தனிமையில் வாழும் ஒரு பெண் அனுபவிக்கும் மனவேதனை, துன்பங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே, தண்டனைக் கைதிகளுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு, மணப்பெண் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் திருமணம் செய்கின்றாரா? அல்லது ஜாதி, மத நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறாரா? என்பதை பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும்.


இப்போதெல்லாம், சமுதாயத்தில் சாதாரண வாழ்க்கையை மேற்கொண்டு வரும் ஆண்மகனை திருமணம் செய்துகொள்ளவே பெண்கள் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, கைதியை, அதுவும் ஆயுள் தண்டனைக் கைதியை திருமணம் செய்ய எந்த ஒரு பெண்ணும் விரும்ப மாட்டார். எனவே, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தேவை. ஒரு பெண் ஆயுள் தண்டனைக் கைதியை திருமணம் செய்தால், அவளது வாழ்க்கை முடங்கிப்போய் விடும்.


அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக வேதனைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு திருமணமான பெண்ணுக்கு காலம் முழுவதும் தார்மீக ஆதரவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உடல் ரீதியான ஒரு தோழமையும் கணவனிடம் இருந்து தேவைப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. அதற்காக, தண்டனைக் கைதிகளைத் திருமணம் செய்ததாக பெண்கள் தொடர்ந்த பிற ஆட்கொணர்வு வழக்குகளும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும். இந்த வழக்குகளில் தேசிய மற்றும் மாநில பெண்கள் ஆணையங்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக தாமாக முன் வந்து சேர்க்கின்றோம்.


ஜாதி, மத நிர்ப்பந்தங்களினால் தண்டனைக் கைதிகளை திருமணம் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா என்பது குறித்தும், திருமணத்துக்கு முன்பே இதுகுறித்து விசாரணை நடத்தும் நடைமுறையை கொண்டு வருவது குறித்தும் இந்த அமைப்புகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.


இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


இந்த நாட்டில் பெண்களின் பரிதாப நிலையை நினைக்கும்பொழுது வேதனையும், வெட்கமும் போட்டி போட்டுக் கொண்டு நின்று நம்மை தலைகுனிய வைக்கின்றன.


இதில் தீர்வு காண்பதில் எளிதாக இல்லாததான நிலை என்னவென்றால், பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட ஆணை தண்டித்தும் பயன் இல்லை. காரணம் ஏற்கெனவே அவன் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறான்.


இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட வேண்டியவர்கள், உண்மையை மறைத்துத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஆணின் பெற்றோர், உற்றார் உறவினரும் கூடத்தான்; தவறு செய்கிறோம் - ஒரு பெண்ணின் வாழ்க்கை சோக இருளில் தள்ளப்படுகிறது என்று தெரிந்திருந்தும், காதும் காதும் வைத்தாற்போல, கமுக்கமாக திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் - துணைப் போனவர்கள் மகா மகா குற்றவாளிகள்தான்.


தன் மகளை அப்படியொரு குற்றவாளிக்கு சிறைவாசிக்குத் திருமணம் செய்து வைப்பார்களா?


படித்திருந்தாலும் பெண்கள் இன்னும் சுதந்தர சிந்தனையாளர்களாக பெரும்பாலும் இருக்க முடியாத சமுதாயத்தின் இறுக்கமான கட்டமைப்பு.


மதச் சிந்தனைகளும், தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் சம்பிரதாய பழக்க வழக்கங்களும், மூடத்தனங்களும், பெண்களை முற்போக்கு வழியில் சிந்திப்பதற்கு - மனத் தடங்கலை ஏற்படுத்தி வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக வீறு நடைபோடும் பெண்களை மனதிற்கொண்டுமட்டும் - பெண்கள் எல்லாம் சமநிலை சமுதாயத்தில் ஆணுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்காகும்.


திருமணத்திற்கு முன் இருபாலரின் மருத்துவச் சான்றிதழ் நன்னடத்தைச் சான்றுகள் பெறப்படுவதற்கான சட்டங்கள் தேவை.


ஆணோ, பெண்ணோ குற்ற வழக்குகளில், செயல்களில் ஈடுபட்டவர்களா, சிறைத் தண்டனை பெற்றவர்களா என்பவற்றை உறுதி செய்யும் அரசு ரீதியான சான்றிதழ்கள் அவசியம் என்பதை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு உறுதிப்படுத்துகிறது.


தனக்குத் தெரியாமல் திருமணம் நடந்து விட்டது; கணவன் ஆயுள் கைதி என்று அறிந்த மாத்திரத்தில் மணவிலக்கு கேட்க பெண்கள் முன்வர வேண்டும் - ஏழை எளிய பெண்களுக்கு இலவச சட்ட உதவி மய்யங்கள் முன் வர வேண்டும்.


எப்படியாக இருந்தாலும் பெண்கள் பகடைக்காயாக விளையாடப்படும் இந்த விபரீதத்துக்கு உடனடியாக முடிவு எட்டப்பட வேண்டும்.


காவல்துறை, மகளிர் ஆணையங்கள், சமூக முற்போக்கு அமைப்புகள் அடங்கிய ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு, பெண்கள் வாழ்வின்மீது தொடுக்கப்படும் கொடுமைகள் உறுதியாக நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


No comments:

Post a Comment