மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து ஆட்சியில் அமர்ந்த பிரதமர் அதற்கு எதிராகக் குறிப்பிட்ட மதத் தொடர்பான கோவிலுக்கு அடிக்கல் நாட்டலாமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து ஆட்சியில் அமர்ந்த பிரதமர் அதற்கு எதிராகக் குறிப்பிட்ட மதத் தொடர்பான கோவிலுக்கு அடிக்கல் நாட்டலாமா

மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து ஆட்சியில் அமர்ந்த பிரதமர் அதற்கு எதிராகக் குறிப்பிட்ட மதத் தொடர்பான கோவிலுக்கு அடிக்கல் நாட்டலாமா?


அன்று இராமன் சூத்திரன் சம்பூகனைக் கொலை செய்ததுபோல இன்று அதே செயல் வேறொரு வடிவத்தில் வருணாசிரமப் பாதுகாப்பாக அரங்கேறியிருக்கிறது!



மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து ஆட்சியில் அமர்ந்த பிரதமர் அதற்கு எதிராகக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பில் கட்டப் படும் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதும், அடிக்கல் நாட்டுவதும், சட்டப்படி சரியானது தானா? அன்று சூத்திரன் சம்பூகனை வருணாசிரமத்தைக் காப்பதன் பெயரில் இராமன் கொன்றான்; இன்று அதே செயல் வேறு ஒரு வடிவத்தில் வருணாசிரமப் பாதுகாப்பாக அரங்கேறியிருக்கிறது   என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


அயோத்தியில் இராமர் கோவிலுக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முன்னி லையில், உ.பி.  முதலமைச்சரும்,  உ.பி. ஆளுநரும் கலந்துகொண்டனர்.


பிரதமர் மோடி உரை


அதில் உரையாற்றிய பிரதமர்.


‘‘நாட்டின் சுதந்திரத்திற்காக மக்களும், தலைவர்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை ஆகஸ்ட் 15  ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண் டாடுகிறோம். அதுபோல இராமர் கோவிலுக்காக எண்ணற்ற பக்தர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் நீண்ட நாள் கனவு இப்போது நனவாகி உள்ளது'' என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளார்!


இந்திய அரசமைப்புச் சட்ட சாசனத் தின்மீது கையை வைத்து, அதனைக் காப்பேன் என்று இரண்டாம் முறை பதவியேற்ற பிரதமர் மோடி.


இந்து மதக் கோவில் நிகழ்ச்சியை அரசு கள் விழாவாகவே நடத்திக் காட்டி, அதில் பேசும்போது, ‘‘எண்ணற்றவர்கள் தியாகம் செய்துள்ளனர்'' என்று கூறியிருப்பதும் சட்டப்படி, நியாயப்படி,  சரியானதுதானா?


பாபர் மசூதியை இடித்த குற்றவாளி களின்மீதுள்ள வழக்கு இன்னமும் முடியாத நிலையில், இப்படிப் பேசுவது குற்ற வாளிகளைக் காப்பாற்றுவதாகாதா? நீதியின் நெறிமுறைக்கு ஏற்றதுதானா?


நடுநிலையோடு மக்கள் சிந்திக்க வேண்டும்!


மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறானதல்லவா இது?


அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லவா?


உ.பி.யின் அரசு இயந்திரம் முழுவதும் இந்த விழாவிற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது - அதுவும் கரோனாவின் கொடுமை குறையாத நிலையில், இது அதிகாரத் துஷ் பிரயோகம் அல்லவா?


நரேந்திர மோடி அவர்களுக்குத் தனிப் பட்ட முறையில் பக்தி - இராம பக்தி இருப் பதோ, அவர் சென்று வழிபடுவதோ அவருக் குள்ள உரிமை, அதை மறுக்கவில்லை. ஆனால், நாட்டின் பிரதமர் இந்தச் செயலில் ஈடுபடுவது எவ்வகையில் சரியானது - அதுவும் ‘செக்யூலர்' என்ற மதச் சார்பற்ற ஒரு அரசின் மிகப்பெரிய பதவியில் உள்ளவர் செய்தது உசிதமா?


உ.பி. முதல்வர், ஆளுநர் முதல் அத் துணை பொறுப்பாளர்களும் ஒரு தனிப்பட்ட கோவில் டிரஸ்ட் நிகழ்ச்சிக்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட கோவில் சடங்குகளை நாடு முழுவதும் விளம்பரப்படுத்திச் செய்வது, நடத்துவது அரசமைப்புச் சட்டத்தின் கோட் பாடுகளை காப்பதாக ஆகுமா? அதற்கு நேர் முரணானது அல்லவா?


அதுமட்டுமா? ‘‘இராமரைப் போன்ற நல்லாட்சி வழங்கியவர் உலகில் இல்லை'' என்றெல்லாம் கூறுகிறார் மதிப்பிற்குரிய பிரதமர்!


இராம இராஜ்யம் பற்றிய காண்டத்தையே


ஏன் கம்பராமாயணம்


விட்டு  விட்டது?


கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டிப் பேசியும் உள்ளார். அதே கம்பராமாயணத்தில் வால்மீகி இராமாயணத்தில் உள்ள உத்திர காண்டத்தையே - இராம இராஜ்யம்பற்றிய காண்டத்தையே ஏன் கம்பராமாயணம் விட்டு  விட்டது? அதைத் தவிர்த்தது ஏன்?


உண்மைக் காரணம், இராமனின் இராம ராஜ்ஜியத்தில் ‘‘சூத்திர சம்பூகன் - கடவுளைக் காண தவம் செய்ததனால், ‘‘பிராமணச்'' சிறுவன் செத்தான். வர்ண தர்மம் அழிந்த தால்'' என்று ‘பிராமணர்கள்' செய்த புகாரின் பேரில் எவ்வித நீதி விசாரணையும் இன்றி நேரில் சென்று தவம் செய்த சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிக் கொன்றான் என்பதுதான் நல்ல ஆளுமைக்கு - அரசு களுக்கு அடையாளமா? என்பது நமக்குப் புரியவில்லை.


மனித தர்மத்திற்கும் - நியாயம்,


நீதிக்கும் புறம்பானது அல்லவா?


விசாரணையில்லாமல் ஜாதி வர்ண தர்மப் பாதுகாப்புக்காகத்தான் அரசும், ஆளுமையும் என்ற தத்துவம் மனுதர்மத் திற்கு வேண்டுமானால் ஒத்ததாக இருக்க லாம். மனித தர்மத்திற்கும் - நியாயம், நீதிக்கும் புறம்பானது அல்லவா?


இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதி ரானது அல்லவா?


பெரும்பான்மை எங்களிடம் உள்ளது. மற்றவர்களின் குரலை நெரிப்போம், உரி மைகளைப் பறிப்போம் என்ற சர்வாதிகாரத் தொனியல்லாமல் வேறு என்ன இது?


நெருக்கடி நிலைக்கு ஆளானவர்களே, அறிவிக்கப்படாத நெருக்கடிபோல ஆளு மையைப் பயன்படுத்துவது நியாயம்தானா?


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


7.8.2020


No comments:

Post a Comment