செய்தியும், சிந்தனையும்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

செய்தியும், சிந்தனையும்...!

கூறியதுண்டு


திருவள்ளூர் மாவட்டத்தில் 3 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!


பாரட்டுதலுக்குரிய நடவடிக்கையே! அதேநேரத்தில் சிதம்பரத்தில் தீட்சதர் குடும்பங்களில், சொத்துகள் குடும்பத்தைவிட்டு சிதறப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இன்றும் சர்வ சாதாரணமாக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றனவே - அங்கெல்லாம் சட்டம் பாய வேண்டாமா?


(பெண் பூப்படைவதற்கு முன் கல்யாணம் செய்யவேண்டும் என்று பராசர முனிவர் கூறுகிறார். பூப்படைவதற்குமுன் கல்யாணம் செய்வது குற்றம் என்று அரசின் சட்டம் கூறுகிறது; சட்டத்தை மீறி ஜெயிலுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, சாஸ்திரத்தை ஒருபோதும் மீற மாட்டேன் என்று எம்.கே.ஆச்சாரியா போன்ற பார்ப்பனர்கள் கூறியதுண்டு).


ஏழுமலையானுக்கு ‘அரோகரா!'


கரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இன்று பிரம்மோற்சவம் - அறங்காவலர் குழு தீர்மானம்.


தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்கிறார்களே, அந்தப் பட்டியலில் இது வராதோ! கல்லைக் காட்டி ஏமாற்றும் பிழைப்பு வெகுகாலம் நீடிக்காது!


‘நீட்' தேர்வு ஒத்தி வைப்பு?


'நீட்' தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஆறு மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு.


வரவேற்கத்தக்கதுதான் - அது என்ன ஒத்தி வைப்பு. கரோனா கொடிது என்றால், ஒழிப்பதுதானே சரியான நடவடிக்கை!


'நீட்' வசதி வாய்ப்புள்ளவர்களுக்கும், சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்கு மட்டுமேதான் அனுகூலம் என்று திட்டவட்டமாகத் தெரிந்த பிறகு, அதனை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்வதுதானே - மக்கள் நலம் சார்ந்தது?


பலன் கிட்டக் கூடாதா?


மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழக்கு - இரு வாரங்களுக்கு விசாரணை ஒத்தி வைப்பு!


எது எதையோ அவசர வழக்காக விசாரிக்கும் நீதிமன்றங்கள், மக்கள் தொகையில் 52 சதவிகித (மண்டல் அறிக்கைப்படி) மக்களின் மிக முக்கிய கல்விப் பிரச்சினையைத் தள்ளிப் போட வேண்டுமா? இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்குப் பலன் கிட்டக் கூடாதா?


நிபுணர்கள்(?) கருத்து


தேசிய கல்விக் கொள்கையால்


8 வெளிநாட்டு மொழிகள் - இந்தியாவின் பன்மொழி திறன் அதிகரிக்கும் - நிபுணர்கள் கருத்து.


ஏன், எண்பது மொழிகளைக் கற்கச் செய்தால் பன்மொழி திறன் மேலும் அதிகரிக்குமே! கருத்துக் கூறிய அந்த நிபுணர்கள்  யார் யார் என்று பட்டியல் வெளியிட்டால் நல்லது. முதலில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பதுபற்றி ஆராயுங்கள் 'உயர்தட்டு' நிபுணர்களே!


No comments:

Post a Comment