மானமிகு கலைஞரின் நினைவு நாளில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

மானமிகு கலைஞரின் நினைவு நாளில்!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் மறைந்து ஈராண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் அவர் பதித்துச் சென்ற தடங்கள், எழுதிக் குவித்த சிலாசாசனங்கள், ஆட்சி முறையில் அவர் சாதித்துச் சென்ற சாகா வரலாற்றுக் கல்வெட்டுகள், கொட்டி முழக்கிய பேச்சு நதிகள் எல்லாம் என்றென்றைக்கும் ஜீவ நதிகளாக சமூகத்திலே சலங்கை ஒலி எழுப்பி ஓடிக் கொண்டே இருக்கும்.


கருத்துவளம் கலைத்துவம் அவற்றில் மணந்து கொண்டே இருக்கும்.


15 வயதிலே இந்தி எதிர்ப்புக் கொடி ஏந்திய அந்தக் கரம், போர் முழக்கமிட்ட அந்தக் குரல், அதிகாரத்திலே அமர்ந்த போதிலும் சரி. அது இல்லாத போதும் சரி, போர்க் குணத்தோடுதான் பொங்கி எழும் அலைபோல ஒலித்து கொண்டே இருந்தது.


எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காலக் கட்டத்திலும், தான் சுயமரியாதைக்காரன், திராவிட இயக்கத்துக்காரன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் தவறியதே கிடையாது.


என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில். "நான் ஒரு சுயமரியாதைக்காரன் - நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பெரியாரின் மாணவன்" என்று பளிச் சென்று பதில் அளித்தார்.


'தினகரன்' ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் என்ன கூறுகிறார்?


"கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?


கலைஞர் பதில்: இந்த இரண்டையும்விட, அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான்" என்று பதில் கூறினாரே! ('தினகரன்' 6.5.2006)


தமிழர்களின் நிலைமையைப் பற்றிச் சற்றுக் கவலையுடன் குறிப்பிடுகிறார் அவர், Òஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சைக் கேட்க வந்து குழுமியிருப்போர் அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் முடிந்து கலைந்து செல்லும்போது, தனித்தனி ஜாதிகளாகக் கலைந்து செல்கிறார்கள். அந்த நிலை மாறி, தமிழர்களாகவே கூட்டத்தில் அமர்ந்து, எழுந்து செல்லும்போதும் தமிழர்களாகவே கலைந்து செல்லும் காலம் வந்தால், அதுதான் நான் எதிர்பார்க்கும் காலம்" என்று 2001ஆம் ஆண்டில் 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஏட்டுக்கு அளித்த பதிலில் அழகாகக் குறிப்பிட்டார்.


ஒரு கவியரங்கில் குறிப்பிடுகிறார். "மானமா? மகுடமா? என்று கேட்டால் மானத்தை மட்டுமே மதிக்கும் மனிதன் நான்" என்று மார்புப் புடைத்து கருத்தாழத்தோடு சொன்ன கருப்புச்சட்டைக்காரர்.


"நான் தலைவராக விளங்குகின்றேனோ, இல்லையோ இளமை தொட்டு தென்னையின் விழும் மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச்  சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன், மானமிகு இல்லையேல் மாண்புமிகுவுக்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்" ('முரசொலி' 15.9.2006).


15 வயதில் பள்ளிப் பருவத்தில் எந்தக் கொள்கை விதை அந்த மாணவன் நெஞ்சில் விழுந்ததோ, அதுதான் வளர்ந்து, நிலை பெற்று, விழுதுகளைப் பரப்பி, காலம் அவரைக் கவ்விக் கொண்டு போனாலும், இன்று வரை நிழல் பரப்பும் ஆன்றவிந்த ஆலமரம்போல ஓங்கி தான் நிற்கிறது. ஆரியம் - வரலாற்றுத் தொடர்ச்சியில் அவ்வப்போது அமுக்கப்படுவதும், அதன்பின் கொஞ்சம் துளிர்த்து எழுவதுமான போக்கினைக் கொண்டதே!


இன்றைய நவீன கால கட்டத்திலும் மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, மக்களின் பாமரப் பக்தியை முதலீடாக்கிக் கொண்டு பரமபதம் விளையாட்டு ஆடிக் கொண்டு இருக்கிறது.


சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலத்தை இடித்துத் தள்ளி, இடித்தவர்களே அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி "பார், பார் எங்களின் மகத்தான சாதனை நாட்டு மக்களின் உணர்வை மதித்து எழுப்பிய சாதனை" என்று 'ஜப்பான் பார், ஜெர்மன் பார்!' என்று படம் காட்டித் திரிந்தார்கள்.


ஓர் அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது இதையல்ல - மக்களின் சமூகப் பொருளாதார மாற்றங்களையும், வளர்ச்சியினையும்தான்!


இந்தத் திசையில் மிகப் பெரிய கேவலமான தோல்வியைச் சந்தித்து விட்ட ஓர் அரசு, எப்படி எப்படியெல்லாம் மக்களை  போதையில் தள்ளிக் காலத்தை ஓட்டுகிறது என்பதுதான் இப்பொழுது மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரே பிரச்சினை.


வட இந்தியாவில் பக்தியையும், மதத்தையும் மூலதனமாக வைத்து மேற்கொள்ளப்படும் மோசமான யுக்தி என்னும் நோய்க்கு சரியான மருந்து - தெற்கே தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, தயாரித்தும் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவு சுயமரியாதைத் தத்துவப் புயலே! அது வட திசை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


'ஹிந்து' என்ற ஒரு புள்ளியில் பெரும்பான்மையாக மக்களைத் திரட்டிடத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் கூறும் அந்த 'ஹிந்து' என்பது உயர்ஜாதியினருக்கானது. பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் எதிரானது என்பதை விளக்கி மக்களை விழிப்புணர்வுப் பெறச் செய்வதே இதற்கு ஒரே தீர்வு - இந்தக் காலக்கட்டத்திற்கான அவசியமும், தேவையுமாகும்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கருத்தும் - சிந்தனை யோட்டமும் செயல்பாட்டின் மய்யப் புள்ளியும் இவ்வாறாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்தம் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இந்த இலட்சியச் சுடரை நாட்டுமக்களின் கரத்தில் அளிப்போம்! அளிப்போம்!!


வரும் தேர்தலில் தி.மு.க. எப்படியும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது  என்பதில் எதிரிகள், பிற்போக்கு மதவாத சக்திகள் பல்வேறு பஞ்ச தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனை முறியடித்து தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதுதான் நம் முன் உள்ள ஒற்றைச் சிந்தனை! செயல்பாடும், விழிப்பும் மிக மிகத் தேவை என்பது நினைவில் இருக்கட்டும். இது முக்கியம்! மிக முக்கியம்!! மிக மிக முக்கியம்!!!


No comments:

Post a Comment