மதுரை - பாண்டியன் நகரைச் சார்ந்த பகுத்தறிவாளர் லி.ராஜாஜி (வயது 71) 9.8.2020 அன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். காலம் சென்ற சுயமரியாதைக்காரர் சி.லிங்கையா அவர்களின் மூத்த மகனான ராஜாஜி, மதுரை கோட்ஸ் ஊழியர் கூட்டுறவு விற்பனையகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை பெரியாரது கருத்துகளில் மிகுந்த பற்றுக்கொண்டு சுயமரி யாதைக்காரராக வாழ்ந்தவர். மறைந்த லி.ராஜாஜி அவர்களுக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். அவரது உடல் எந்த விதச் சடங்குகளுமின்றி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சுயமரியாதைக்காரரான லி.ராஜாஜி அவர்களது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் கொள்கையாளருக்கு
‘ராஜாஜி’ எனப் பெயர் வந்த குறிப்பு:
பிடிவாதமான சுயமரியாதை வீரர் சி.லிங்கையா அவர்கள் மதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளுள் ஒருவர். தந்தை பெரியாரது கொள்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கடைப்பிடித்துவந்தவர். தனது வீட்டு வெளிச் சுவற்றில் தந்தை பெரியாரின் பெரிய ஓவியத்தை வரைந்து, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்ற முழக்கத்தை எழுதி வைத்த பற்றாளர்; பகுத்தறிவுப் பிரச்சாரகர். தமது இரண்டு மகன்களுக்கு ராஜாஜி, காமராஜ் என்று பெயர் சூட்டினார். பெரியாருக்கு நேர்மாறான கருத்துக் கொண்ட ராஜாஜி அவர்களது, பெயரைச் சூட்டியது சரியல்ல என்று இயக்கத் தோழர்கள் லிங்கையா அவர்களிடம் கூறிய பொழுது அவர் அதைப் பொருட் படுத்தவில்லை.
ஒருமுறை தந்தை பெரியார் மதுரைக்கு வந்த பொழுது இப்படி பெயர் சூட்டிய விவரத்தை பெரியாரிடமே தோழர்கள் முறையிட்டு, அதுபற்றி தந்தை பெரியாரையே விசாரிக்கச் சொன்ன பொழுது, தந்தை பெரியார் சிரித்துக் கொண்டே, தனது மகனுக்கு எந்தப் பெயர் வைக்க வேண்டும் என்பது லிங்கையின் விருப்பம்; நாம் லிங்கையாவைக் கேட்பது முறையல்ல என்று கூறிட, சமாதானம் அடையவில்லை தோழர்கள். தந்தை பெரியார், லிங்கையாவிடமே ‘பெயர் வைத்தது’ குறித்துக் கேட்டாராம். சுயமரியாதைக்காரர் லிங்கையா கூறியது: “நான் எனது மூத்தமகனுக்கு ராஜாஜி எனப் பெயரிட்டது. ‘ராஜாஜி’ உங்களது ஆரம்பக் கால நண்பர் என்பதால் தான். அந்த அபிமானம்தான்! மற்றபடி ராஜாஜியின் கொள்கையின் மீது அபிமானம் கொண்டு பெயர் சூட்டவில்லை.” லிங்கையா அவர்கள் அளித்த பதிலையே முறையிட்ட தோழர்களிடம் பெரியார் சொன்னாராம் தோழர்களும் சமாதானம் அடைந்தனராம்.
- பகுத்தறிவாளர்கள் & தோழர்கள், மதுரை
No comments:
Post a Comment