பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம்,  சென்னை வளர்ச்சிக் குழுமம் இணைந்த ஏற்பாட்டில் 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி விருது' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம்,  சென்னை வளர்ச்சிக் குழுமம் இணைந்த ஏற்பாட்டில் 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி விருது'

பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் விருதுபற்றிய அறிமுக உரை



முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியினை சென்னை வளர்ச்சிக் குழுமம்  நேற்று (8.8.2020) மாலை காணொலி வாயிலாக நடத்தியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்  மரபு வழி  தமிழர்கள், அரசியல் அதிகாரத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் அங்கு வாழும் தாயகத் தமிழர்கள் பலரும் பங்கேற்று தலைவர் கலைஞர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை, நினைவு களைப் போற்றி மரியாதை செலுத்தி உரையாற்றினர்.


பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் ஒவ்வொருராண்டும் விருது வழங்கப்படும் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.


பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர் நிலைப் பல்கலைக் கழகமும் (Periyar Maniammai  Institute of Science and  Technology (Deemed to be Univer sity) சென்னை வளர்ச்சிக் குழுமமும் (Madras Development Soceity) இணைந்து விருது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி விருது எனும் பெயரில் (Dr. Kalaignar M.Karunanidhi International Award for Social Justice) தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்தார். விருது பற்றிய விவரங்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.


தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்திடும் நிகழ்ச் சியினை ஏற்பாடு செய்திட்ட சென்னை வளர்ச்சிக் குழுமத் தின் தலைவர் முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் காணொலி நிகழ்ச்சிக்கு வருகை தந்து பங்கேற்று உரை யாற்றிய பெரு மக்களை, நண்பர்களை வரவேற்றுப் பேசினார்.


நிகழ்ச்சிக்கு புதுவை மாநில அரசின் முதலமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி தலைமை ஏற்று உரை யாற்றினர்.


முதல்வர் வி. நாராயணசாமி உரை


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைத்திட அரும் பாடுபட்ட தலைவர் கலைஞர் ஆவார்.  முதலமைச்சராக இருந்தபொழுதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தும்  அரசு ஆணைகள் மூலம் அதன் நடைமுறையினை உறுதிப் படுத்தினார். பெருந் தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்த பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும், சமூகநீதிக்கான வழிமுறைகளையும் தனது ஆட்சியில் மேம்படுத்திச் செயல்படுத்தினார். நிர்வாகச் சீர்திருத்தத் தளத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கலைஞர் அவர்களின் அரசியல் அறிவாற்றல், தீர்க்கதரிசன ஆளுமை ஆகிய பண்புகள் அளவிட முடியாதவை. அரசியல் ஆட்சி அதிகாரத் தளத்தில் பல்வேறு தோல்விகள், பின்னடைவுகளை நேர்கொண்டாலும், துணிவுடன் கட்சியினை நடத்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து  வரலாற்றுச் சாதனை புரிந்த தலைவர் கலைஞர். தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி கிடைத்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி அதில் வெற்றி கண்டவர். காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக, மத்திய அமைச்சராக, புதுவை மாநில முதல்வராக பல நிலைகளில் தலைவர் கலைஞரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினை  அவரது மேலான அனுபவ ஆலோசனைகளை   நான் பெற்று வந்துள்ளேன். மொத் தத்தில் ஜனநாயகக்  கோட்பாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டு நாட்டின் அரசியலாட்சி அதிகாரத்திற்கு பெரிய பங்கினை வழங்கிச் சென்றுள்ளவர் அறிஞர் - தலைவர் கலைஞர். அவரது புகழ் வாழ்க!


இவ்வாறு முதல்வர் வி. நாராயணசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.


தமிழர் தலைவர் உரை


தலைவர் கலைஞர் பெயரில் பன்னாட்டு விருதினை அறிவித்து அறிமுகப்படுத்தி உரையாற்றிய தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:


சமூகப் புரட்சியாளர் கலைஞர் பெயரில் பெரியார் மணியம்மை  அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகம் விருது வழங்கிடும் பெருமைமிகு செய்தியினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமூகநீதி விருது கலைஞரின் பெயரில் வழங்கப்படுகிறது. சமூக அநீதி நிலவிய  சமுதாயத்தில் அதனை நீக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைத்திட இடைவிடாமல் பாடுபட்ட தலைவர் கலைஞர். இங்கு நிலவிய சமூகஅநீதி, மனித  இழிவைத் திணித்து வந்தது. இழிவை நீக்கி, சுயமரியாதை உணர்வினை ஊக்குவித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடத் தனது ஆட்சி அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத் தியவர் கலைஞர்.


மானமிகு சுயமரியாதைக்காரர் 


ஒரு முறை பிறந்த நாளில் பத்திரிகையாளர் ஒருவர் கலைஞரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். உங்களைப்பற்றி ஒரே வரியில் எப்படி குறிப்பிடுவீர்கள்?" என்ற கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், 'மானமிகு சுயமரியாதைக்காரன்' என பளிச்சென பதிலளித்தார். 'மாண்புமிகு 'அடைமொழி வரும் போய் விடும். ஆனால் 'மானமிகு' நிலைத்து நிற்கும். அப்படி கலைஞர் வெளிப்படுத்திய சொற்செறிவு மிக்க தொடரே, சமூகநீதியின் பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றினை பறைசாற்றுவதாகத் திகழ்கிறது.


தந்தை பெரியாரிடம் ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்றவர் கலைஞர்; ஓய்வறியா உழைப்பாளி கலைஞர். 'எப்படி உங்களால் இப்படி இடைவிடாமல் உழைக்க முடிகிறது? என்று கலைஞரிடம் கேட்டபொழுது 'அது ஈரோட்டு குருகுலத்தில் தந்தை பெரியாரிடம் பயின்றது' எனக் கூறினார். தந்தை பெரியாரின் துணிவும், அறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து பொது வாழ்க்கையில் சாதனைகள் பல புரிந்த தலைவர் கலைஞர் ஆவார்.  அரசியல் வாழ்வில் தெளிந்த சிந்தனை, சரியாக விரைந்து முடிவு எடுக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தார் கலைஞர். "நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரிய வர்களைத் தெரிவு செய்வதில் உங்களது பெரும் பங்கினை ஆற்றியுள்ளீர்கள்.  ஏன் நீங்கள் அந்தப் பதவிகளுக்கு வர நினைக்கவில்லை" என்று கலைஞரிடம் கேட்ட பொழுது, 'பதில் அளித்திட அவகாசம் எதுவும் எடுக்காமல் சட்டென எனது உயரம் எனக்குத் தெரியும்' என கருத்துத் தெரிவித்து இந்த நாட்டு அரசியல் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொண்டு செயலாற்றிய தலைவர் கலைஞர்.


தலைவர் கலைஞர் சமூகநீதிக்களத்தில்   பல புராண, இதிகாசம் சார்ந்த புனைவுகளின் மீதான மூடநம்பிக்கைகளை மறுத்து சமூகநீதிக் கொடி நாட்டியவர். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தன்னை 'மிக மிக.. எத்தனை மிக சொல்லையும் போட்டுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந் துள்ளேன்' என சமூகநிலைமையை தன்னை வைத்து புரிய வைத்து ஆவன செய்த தலைவர் கலைஞர். கலைஞரது நிகரற்ற நிர்வாகத் திறன் குறித்து விமர்சனப் போக்கில் ஒரு கருத்தை அவரிடம் இப்படித் தெரிவித்தனர்.


'Your decisions are hasty' என்ற விமர்சனத்திற்கு அவர் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். My decisions are quickly and not hasty'


"உங்களது முடிவுகள் அவசர முடிவுகள்" என்ற விமர்சனத்திற்கு, 'எனது முடிவுகள் விரைவான முடிவுகள்; அவசர முடிவுகள் அல்ல' என்று கலைஞர் பதிலளித்த விதம் அவரது நிர்வாக ஆற்றலையும்  அதனை வெளிப்படுத்து வதில் எப்படி துல்லியமாகக் கூறினார் என்பதையும் புலப்படுத்தும்.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என ஆலயங்களிலும் சமத்துவம் நிலவிட சட்டம் இயற்றியவர் கலைஞர்.


ஜாதி ஒழிப்பைக் கருத்திக் கொண்டு சமத்துவத்தை, சமவாய்ப்பினை கொண்டு வர கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காட்டிலிருந்து 31 ஆக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு 16 விழுக்காட்டிலிருந்து 18 ஆக இடஒதுக்கீடு வழங்க அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப் படுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களின் அடித்தள மக்களான அருந்ததி யினருக்கு உள் ஒதுக்கீடாக 3 விழுக் காடு தனியாக இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதி வழங்குவதில் முன் மாதிரி யாக, முன் உதாரணமாக திகழ்ந்தார் கலைஞர். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் சமூகநீதி விருது வழங்குவதில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் பெருமை கொள்கிறது.


கலைஞர் தொடங்கி வைத்த பல்கலைக் கழகம்


விருது வழங்குகிறது


தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார். மகளிர் பொறியியல் கல்லூரியாக இருந்து நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ச்சி  அடைந்தது. பின்னர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் கலைஞரின் பெயரில் 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசியல் அறிவியல் மய்யம்' (Dr.  Kalaignar  M. Karunanidhi Centre for Political Science) என்ற ஆய்வு மய்யமும் தொடங்கப்பட்டு, கல்வி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கலைஞர் பெயரால் சென்னை வளர்ச்சிக் குழுமம் இணைந்து ஏற்படுத்திய  டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி விருது பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசியல் ஆய்வு மய்யத்தின் சார்பாக உரிய பெரு மக்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கலைஞரின் பெயரிலான சமூகநீதி விருதினை முதலாவதாகப் பெறுபவர்


பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக   'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி விருது'  முதலாவதாக  -


மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விருது வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.


இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.


திமுக பொருளாளர் துரைமுருகன்


நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் துரை முருகன், கலைஞர் பற்றிய நெஞ்சார்ந்த நினைவுகள் மற்றும் கலைஞரிடம் பயின்றவை குறித்து விரிவாக உரையாற்றி மகிழ்ந்தார். கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


புகழஞ்சலி செலுத்திய உலகத் தமிழர்கள்


நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள், சான்றோர்கள்: தென்அமெரிக்கா, கயானா நாட்டு முன்னாள் பிரதமர், டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, தென் ஆப்பிரிக்கா, நேட்டால் மாநில அரசின் நிதி அமைச்சர் மாண்புமிகு ரவிபிள்ளை, மலேசிய   முன்னாள் அமைச்சர் பேராசிரியர் டான்சிறீ முனைவர் டி.மாரி முத்து, தென் ஆப்பிரிக்கா, டர்பன் மாநகர முன்னாள் துணைமேயர் லோகிநாயுடு, ஆஸ்திரியா வீயன்னா - அய்.நா. தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஜெபமாலை, சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர். ரவிந்திரன், ஆர். தினகரன், அமெரிக்கா - மேரிலாந்து மாநில மேனாள் துணைச் செயலாளர் முனைவர் ராஜன் நடராசன்,  ஆஸ்திரேலியா சிட்னி பிளாக் டவுன் ஊராட்சிக் கவுன்சிலர் சூசை பெஞ்சமின், துபாய் - ஏழாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுத் தலைவர் அபித் ஜுனியத், அமெரிக்கா - வெளிநாட்டு வாழ் இந்தியர் காங்கிரஸ் தலைவர் மோகிந்தர் சிங் கில்ஜியான், ரஷ்யா - மாஸ்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர். பாஸ்கரன், துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஜெயந்திமாலா சுரேஷ், தென் ஆப்பிரிக்க திரைப்படத் துறை கலைஞர் தரீனா படேல், சௌதி அரேபியா முனைவர் பாக்யலட்சுமி வேணு ஆகியோர் கலைஞருக்கு மரியாதை செலுத்தி உரையாற்றினர்.


நிகழ்ச்சியின் நிறைவாக நாடாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.


இணைப்புரை வழங்கி வழக்கறிஞர் சிநேகா நேர்த்தியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment