கலைஞர் இப்பொழுதும் தேவை; எப்பொழுதும் தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 8, 2020

கலைஞர் இப்பொழுதும் தேவை; எப்பொழுதும் தேவை!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்


சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் சூளுரை



சென்னை, ஆக.8 இன்றைய காலகட்டத்தில், கலைஞர் இப்பொழுதும் தேவை - எப்பொழுதும் தேவை. கலைஞர் என்பது ஒரு தனி உருவமல்ல - கலைஞர் என்பது வரித்துக்கொண்ட ஒரு தத்துவம். தொடர்ச்சியான ஒரு ஆற்றலின் செயல் வடிவம். ஒரு கொள்கை லட்சியத்தினுடைய மிகப்பெரிய ஒளி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.


கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்


நேற்று (7.8.2020) முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்' திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் தலைமையுரையாற்றினார்.


அவரது தலைமையுரை வருமாறு:


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை களைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக இருந்து,  ஆட்சித் தலைவராக வாய்ப்புக் கிடைத்தபொழுதும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதும் சரி, திரைப் படங்களில் வசனகர்த்தாவாக இருந்தாலும் சரி, காவியங்களை உருவாக்கக் கூடிய இலக்கிய மேதையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் தன்னுடைய கொள்கைப் பார்வையோடு நடத்திக் காட்டிய ஒரு மாபெரும் ஆற்றலாளர்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.


தன்னை ஒரு வரி விமர்சனத்துக்கு ஆளாக் கிக் கொள்கின்ற நேரத்தில், ‘‘மானமிகு சுயமரியா தைக்காரன்'' என்று கூறிக் கொண்டவர். அத்தகைய கலைஞர் அவர்களுடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள் இந்நாள்.


நம்மைப் பொறுத்தவரையில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் இங்கே சொல்லி யதைப்போல, நாம் அவரை மறந்தவர்கள் இல்லை. ஆகவே, புதிதாக நினைப்பது என்பதல்ல இந்நிகழ்ச்சி! இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள் - ஒரு பிரச்சாரப் பெருநாள்.


ஆகவேதான், அவர் கொள்கையினுடைய தேவைகளை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டக் கூடிய ஒரு நாளே தவிர - வேறு வகையில் இல்லை. அப்படிப்பட்ட இந்த அருமையான நிகழ்வினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,


நிறைவுரையாற்ற இருக்கக்கூடிய திராவிடர் இயக்கத்தினுடைய போர்வாள் என்று நம்மால் வர்ணிக்கப்படக்கூடிய, ஆற்றல்மிகுந்த நாடாளு மன்றவாதியாக,அகிலஇந்தியாவிற்கும்அறிமுக மாகியுள்ள நம்முடைய அன்புச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய பொதுச் செயலாளர் மானமிகு அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,


திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய அளவிற்குக் கொள்கைத் தெளிவோடு எதிரிகளை மடக்கக் கூடியவராகவும் இருக்கக் கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அரு மைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களே,


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், சுயமரியாதை இயக்கப் பாரம்பரியத்தின் விளைச் சலான மானமிகு கே.எஸ்.அழகிரி அவர்களே,


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, நம்முடைய அருமை சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி யார் மறைந்த சூழ்நிலையில், அவர் பங்கேற்க முடியாவிட்டாலும், அவருக்குப் பதிலாக இங்கே உரையாற்றவிருக்கக்கூடிய விழுப்புரம் நாடாளு மன்றத் தொகுதி உறுப்பினரும், வி.சி.க.வின் பொதுச்செயலாளருமான து.ரவிக்குமார் எம்.பி., அவர்களே,


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அரு மைப் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,


இந்நிகழ்ச்சியில் நாம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அவர்கள் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் விரைவில் நல்ல உடல்நலம் பெற்று,  மீண்டும் நம்முடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டும் என்று அனைவரது சார்பாக விரும்புகின்றோம்.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,


இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிகச் சிறப் பான வகையில் வரவேற்புரையாற்றிய கழக வெளியுற வுச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் கோ.கரு ணாநிதி அவர்களே,


இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,


நன்றியுரை கூறவிருக்கின்ற கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,


இருக்கக்கூடிய தமிழர்கள் திராவிடர்கள் ஒன்றி ணைந்து இருக்கக்கூடிய வரலாற்றுப் பெருமை மிகுந்த இந்நிகழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்ற உலகெங் குமுள்ள கொள்கைக் குடும்பத்தினரே, பொதுமக்களே, தமிழ்ப் பெருமக்களே, இயக்கத் தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘‘மானமிகு சுயமரியாதைக்காரனாகவே'' தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்



கலைஞர் அவர்களுடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாளைத் தாய்க் கழகம் நடத்துகின்றதென்றால், எங்கேயிருந்து அவர் பொதுவாழ்க்கையைத் தொடங் கினாரோ அங்கேயிருந்து அவருக்குச் சிறப்பு செய்வதற்கு நமக்கு முதல் உரிமை உண்டு என்ற அடிப்படையில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறோம்.கலைஞர் அவர்கள்  ‘‘மானமிகு சுய மரியாதைக்காரனாகவே'' தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.


இந்த நேரத்தில், எதிர்பாராத ஒரு சரித்திர நிகழ்வு என்னவென்று சொன்னால், நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் அறிக்கையை செயல்படுத்துவதற்கு அறிவித்த நாளும் இந்நாளே என்பது இயல்பாகவே ஒன்றாக அமைந்திருக்கின்றன. மண்டல் அறிக் கையைச் செயல்படுத்துவதற்கு 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியிருக்கின்றோம்.


வாழ்நாள்முழுவதும்சுயமரியாதைக்காரராகஇருந்து, தன்னுடைய ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்திலே பயின்று, இந்தக் கொள்கை வழியில், அண்ணா வினுடைய கனிவான அந்த முறைகளையெல் லாம் வரித்துக்கொண்டு, தந்தை பெரியாரின் துணிவும், அண்ணாவின் கனிவும் கொண்ட உருவமாகவும், உழைப் பின் ஒப்பற்ற உருவமாகவும் திகழ்கின்ற கலைஞர் அவர்கள், எந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தாலும், அத்தனை வாய்ப்புகளையும் கொள்கை வீச்சுகளுகாகத்தான் பயன் படுத்தினார்.


கற்றுக்கொள்ளவேண்டிய, அறிந்துகொள்ளவேண்டிய பாடம்


இதைத்தான் கலைஞர் அவர்களிடத்தில் இருந்து இன் றைய தலைமுறையினரும் சரி, இனி வரக்கூடிய தலை முறையினரும் தெரிந்துகொள்ளவேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய, அறிந்துகொள்ளவேண்டிய பாடமாகும்.


அந்த வகையில் கலைஞர் அவர்கள், "ஈரோட்டுக் குருகுலத்தில் பயிற்சி பெற்றதுதான், என்னைக் கடுமையாக உழைக்க வைத்திருக்கிறது" என்று ஒரு குறிப்பிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள், செய்த சாதனை களைப்பற்றி எனக்கு முன் உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் அவர்களும், தோழர்களும் இங்கே சுட்டிக் காட்டி னார்கள். அதனை நான் வழிமொழியக் கடமைப்பட்டு இருக்கிறேன்.


குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், அய்ந்து முறை கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள் என்றால், அதனை ஒரு காட்சியாக அவர் நடத்தவில்லை. இந்த இனத்தினுடைய மீட்சியாகத் தன்னுடைய ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தார். அதுதான் கலைஞருடைய சிறப்பு.


‘‘சூத்திரர்களுடைய ஆட்சிதான்''


அண்ணா அவர்கள், ‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை'' என்று சொன்னார். அதேபோல, இந்த ஆட்சியே ‘‘சூத்திரர்களுடைய ஆட்சிதான்'' என்று கலைஞர் சொன்னார். அது வெறும் அலங்காரச் சொல் அல்ல.


இந்த விவரத்தை திருச்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் சொன்னபொழுது, "இந்தச் செய்தியை ‘விடுதலை'யில் தலைப்புச் செய்தியாகப் போடுங்கள், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று சொன்னார். ஏற்கெனவே நான் போட்டுவிட்டேன் என்று சொன்னவுடன்,  அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்.


இதைக் கேட்ட கலைஞர் அவர்கள், இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். அதை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.


சமூகநீதிக்காகத்தான் திராவிட இயக்கமே பிறந்தது;


சமூகநீதிக்காகத்தான் பெரியார் அவர்கள் பொதுவாழ்க் கைக்கே வந்தார்.


சமூகநீதிக்காகத்தான் காங்கிரசில் சேர்ந்தார், காங்கிர சிலிருந்து வெளியே வந்தார். மறுபடியும் காமராசரை ஆதரித்தார். இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு நேர் இழை இருக்கிறது என்றால், அது சமூகநீதிதான்!


மறக்க முடியாத சாதனைகளைச்


செய்தவர் கலைஞர்


அந்த சமூகநீதி, வகுப்புவாரி உரிமை என்று சொல்லு வதற்குரிய வாய்ப்புகளை, தனக்கு வாய்ப்புக் கிடைத்த நேரத்தில் எல்லாம், ஆட்சிப் பீடத்தில் அதைத்தான் செய் தார்கள். எத்தனையோ எண்ணற்ற சாதனைகளை, வாழ்நாள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு, மறக்க முடியாத சாதனைகளைச் செய்தவர் கலைஞர் அவர்கள்.


அவர் ஒரு பல்கலைக் கொள்கலன்.


அவர் செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைக்கு உங்களுக்கு நினைவூட்ட வேண் டிய  மிகமுக்கியமான செய்தி என்னவென்றால் சமூகநீதி!


நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சி சூத்திர மக்களுக்கான ஆட்சி என்று சொன்னது மட்டுமல்ல அதன்படி நடத்தியும் காட்டினார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் ஆட்சி என்பது உயர்ஜாதிக்காரர்களுக்கு என்றே இருந்த நிலை. அதனைத் திருப்பினார்கள்.


ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.


குரூப்-1 சர்வீஸ் தேர்வு முடிவுப் பட்டியலில், எந்தெந்த சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகமோ, அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களையெல்லாம் டெபுடி கலெக்டர்களாக வரக்கூடிய வாய்ப்பைக் கொடுத்து, பொறுப்பேற்கக் கூடிய வர்களின் பட்டியலைத் தந்தை பெரியார் அவர்களுக்கு அனுப்பினார்.


அந்தப் பட்டியலைத் தந்தை பெரியார் அவர்கள் கையில் வைத்துக் கொண்டு, கூட்டத்தில் உரையாற்றும்பொழுது கலைஞரைப் பாராட்டிப் பேசினார்.


அத்தனைப் பேரும் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக வந்து, மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுடைய ஆற்றலை முத்துக்களாகப் பதிவு செய்தார்கள்.


புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, இன்றைக்கு மிகப்பெரிய அறைகூவல்கள்!


எனவே, சமூகநீதியை அவர்கள் எப்படி அணுகி னார்கள் என்றால், நடைமுறையில், பொதுவாக சாலை களைப் போடுவது, பள்ளிக்கூடங்களைத் திறப்பது, பாலங் கள் கட்டுவது போன்ற பணிகளில்கூட, சமூகநீதிதான் முன்னாலே இருந்திருக்கிறது. அதைத்தான் காமராசர் செய்தார். இன்றைக்கும்கூட கல்விப் பறிப்பு நிகழ்ச்சிகள் சமூகநீதிக்கு எதிராகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எனவேதான், இந்தப் போராட்டத்தை நாம் நடத்தவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, இன்றைக்கு மிகப்பெரிய அறைகூவல்கள் இருக்கின்றன.


கலைஞர் அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம்  பயன்படுத்தினார்கள். சட்டநாதன் ஆணையத்தின் மூல மாக பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, எஸ்.சி. மக்களுக்கு 18 சதவிகிதம்,


அதுபோல அருந்ததியர் என்று சொல்லக்கூடிய அடித்தளத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு உருவாக்கிக் கொடுத்தார்.


அதுபோலவே, இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த சிறு பான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்.


‘‘அனைவருக்கும் அனைத்தும்''


காரணம், சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கியபொழுது, ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்றுதான் சொன்னார்.


இப்படி எத்தனையோ விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


ஜாதி ஒழிப்பு என்பது சமூகப் புரட்சி. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார்,


We don't want social ameliorative measure என்று சொன்னார்..


சமுதாயத்தில் சில சீரமைப்புகள் மட்டும் போதாது என்று!


செருப்புத் தைக்கின்ற ஒரு தொழிலாளி, மரத்திற்கு அடியில் நனைந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் பாரம்பரியமாக அதைச் செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு ஒரு கடையை அமைத்துக் கொடுத் தால், அது மாற்று.


ஆனால், அவருடைய பிள்ளை, அந்தத் தொழிலை விட்டுவிட்டு, அவர் அய்.ஏ.எஸ். ஆகவோ, அய்.பி.எஸ்.ஆகவோ, மருத்துவராகவோ வரவேண்டும், பொறியாளரா கவோ வரவேண்டும் என்று சொல்வதுதான் சமுதாயப் புரட்சி.


எனவேதான், சமூகப் புரட்சிக்கு வித்திடக் கூடிய திட்டங்களைத்தான் திராவிட ஆட்சிகள் செய்தன. அண்ணா முப்பெரும் சாதனைகளாக செய்தார். கலைஞர் அதனைத் தொடர்ந்தார்.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது தந்தை பெரியார் போராடிய களம். நான் எங்கே தொடங்கினேனோ, அதை முடிக்கவேண்டும். அந்த ஜாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.


மதிநுட்பம்தான் கலைஞர் அவர்களுடைய தனித்தன்மை!


இளையபெருமாள் கமிட்டி சொன்னதைக்கூட நடை முறைப்படுத்தவில்லை.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் தொடங்குகிறபொழுது, கலைஞருடைய அறிவாற்றல், The Objecs of the Reasons என்று போடுகின்ற நேரத்தில், இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையை செயலாக்கக் கூடிய வகையில் இதைச் செய்கிறோம் என்று போட்டார் உண்மையில், அய்யாவினுடைய கருத்து, தத்துவம்தான் இருக்கிறது அதன் பின்புலத்தில்! அய்யாவினுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான், அதனை செய்கிறார். ஆனால், அதனை எவ்வளவு அழகாகக் கையாண்டார் கலைஞர் அவர்கள். அந்த மதிநுட்பம்தான் கலைஞர் அவர்களுடைய தனித்தன்மை.


பெரியார் அவர்கள் மறைந்த உடன் அவருடைய உடலுக்கு அரசு மரியாதைதான் என்னால் கொடுக்க முடிந்தது. ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை என்று சொன்னார்.


மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன், அதனை செய்து, அதில் வெற்றி பெற்றார். இன்றைக்கு ஏராளமானோர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் நடைமுறையில் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை ஆனாலும், தத்துவ ரீதியாக கலைஞர் அதில் வெற்றி பெற்றார், பெரியார் வெற்றி பெற்றார். இதுவரை பார்ப்பன ரல்லாத அர்ச்சகர்களாக இரண்டு பேர்தான் உள்ளே போயிருக்கிறார்கள் என்றாலும், அந்தத் தத்துவம் உடை பட்டு இருக்கிறது.


இன்றைக்கும் கலைஞர் தேவை!


எனவே, கலைஞர்  அவர்களுடைய சாதனை - அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி - உருவமாக இருந்தாலும் சரி - தத்துவமாக இருந்தாலும் சரி - சமுதாயப் புரட்சி என்பதற்கு அடையாளமாக இருந் தார்கள். இன்றைக்கும் கலைஞர் தேவை.


ஒருமுறை தந்தை பெரியார் சிலையைத் திறக்கின்ற நிகழ்வில் பங்கேற்ற கலைஞர் அவர்கள், "பெரியார் இப்பொழுதும் தேவை" என்று சொன்னார். அருகிலிருந்த நான், "எப்பொழுதும் தேவை" என்று வேடிக்கையாக சொன்னேன். ஆம், "இப்பொழுதும், எப்பொழுதும் தேவை" என்று சொன்னார் கலைஞர்.


கலைஞர் என்பது ஒரு தனி உருவமல்ல -


கலைஞர் என்பது வரித்துக்கொண்ட ஒரு தத்துவம்!


அதுபோல, அதே வார்த்தையை கலைஞருக்கும் சொல்லவேண்டும். இன்றைய காலகட்டத்தில், கலைஞர் இப்பொழுதும் தேவை - எப்பொழுதும் தேவை. கலைஞர் என்பது ஒரு தனி உருவமல்ல - கலைஞர் என்பது வரித்துக் கொண்ட ஒரு தத்துவம். தொடர்ச்சியான ஓர் ஆற்றலின் செயல் வடிவம். ஒரு கொள்கை லட்சியத்தினுடைய மிகப்பெரிய ஒளி.


இன்றைக்கு மதச்சார்பின்மைக்குத் தோன்றியிருக்கின்ற மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்டு, அந்த அரசமைப்புச் சட்டத்தை மீறுகின்ற செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.


சமூகநீதியைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்னமும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் அது இருக்கிறது. மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்காமல் இருக்கிறார்கள்.


போராட்டக் களத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டி இருக்கிறது


நாம் சலுகை கேட்கவில்லை. அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லியிருக்கிறதோ, ஏற்கெனவே மத்திய அரசினுடைய ஆணைகள் எதைக் குறிப்பிடுகிறதோ, எவை உச்சநீதிமன்றம் போன்றவை மூலம் உறுதி செய்யப்பட்டதோ, அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள்; அவர்களுடைய உரிமைகளைப் பறிக்காதீர்கள் என்று கேட்கின்ற நேரத்தில், போராட்டக் களத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டி இருக்கிறது.


அவர்களைத் திசை திருப்புகின்ற நோக்கத்தில்தான், ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதைத்தான் கழகத் துணைத் தலைவர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.


உலகத்தில் ஜாதி எந்த மதத்தில் இருக்கிறது? வருணாசிரம தர்மத்தை எந்த மதம் போற்றுகிறது?


எனவேதான், ஜாதி ஒழிப்பிற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சட்டம் கொண்டு வந்தது மட்டுமல்ல, அதனை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடிய அளவிற்கு செய்ததோடு மட்டுமல்ல, அதற்கு ஒரு குழு போட்டு, அதனை செயல்படுத்தக் கூடிய அளவிற்குச் செய்து, வெற்றிகரமாக்கினார்கள்.


ஜாதி ஒழிப்பைச் செயல்படுத்த, பெரியார் சமத்துவ புரங்கள் என்று நடைமுறைப்படுத்தினார்கள். நாடே சமத்துவபுரமாக வேண்டும் என்ற காலகட்டத்தில், மீண்டும் சம்பூகனை வதம் செய்த இராமனை ஞாபகப்படுத்தக்கூடிய, உயர்த்தக்கூடிய காலகட்டம் வந்திருக்கிறது.


கலைஞருடைய குரல் என்பது -


பெரியாரின் எதிரொலி


இதிலே பிரச்சினை, கடவுள் பிரச்சினையல்ல; இது சமூகநீதிப் பிரச்சினை. எங்கேயெல்லாம் மனித நேயம் நெரிக்கப்படுகிறதோ, ஒழிக்கப்படுகிறதோ அங்கேயெல்லாம் குரல் தேவைப்படுகிறது என்று சொல்லும்பொழுது, அங்கே கலைஞருடைய குரல் என்பது இருக்கிறதே, அது பெரியாரின் எதிரொலி. குருகுலத்திலே அவர்கள் கற்றது. யாரையும் புண்படுத்துவதல்ல - மக்களைப் பண்படுத்துவது என்பதற்காகத்தான். எனவேதான், இந்த நேரத்தில், கலைஞர் மீண்டும் தேவை.


இந்த இரண்டாண்டு காலத்தில் கலைஞர் இல்லை என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் வாழ்கிறார் - அறிஞர் அண்ணா வாழ்கிறார் - காமராசர் வாழ்கிறார் - கலைஞர் வாழ்கிறார்.


எந்தக் கொம்பனும் சமூகநீதி என்பதைத் துடைத்தெறிந்துவிட முடியாது!


சமூகநீதி என்பதை இந்த நாட்டில் யாரும் துடைத்தெறிந்துவிட முடியாது. எந்தக் கொம்பனும் மதச் சாயத்தைப் பூசிவிட்டோ, காவி சாயத்தைப் பூசிவிட்டோ  தடுக்கலாம் என்று நினைக்க முடியாது. அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், அது முடியாது.


அதற்கு என்ன காரணம் என்பதற்கு இரண்டே இரண்டு செய்திகளைச் சொல்கிறேன்.


நம்முடைய கலைஞர் அவர்கள், கட்டுப்பாடான ஓர் இயக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.


தந்தை பெரியார் அவர்கள், ‘‘தி.மு.க. என்பது கெட்டி யான பூட்டு - அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிடக் கூடாது'' என்று சொன்னார்.


பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு பெரிய போர்ப் படை தி.மு.க.


தி.மு.க. என்பதை ஏதோ ஓர் அரசியல் கட்சியாகப் பெரியார் பார்க்கவில்லை. ஒரு தத்துவப் பாதுகாப்பாக - பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு பெரிய போர்ப் படையாக - எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய படையாக - அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை உருவாக்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.


இன்றைக்கு  அவரால் அடையாளம் காட்டப்பட்டு, அவரால் பயிற்றுவிக்கப்பட்டு, இன்றைக்கு நான்காவது தலைமுறையாக வந்திருக்கின்ற நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து, அருமையாக அதனைச் செய்துகாட்டி, எல்லோரையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைக்க வேண் டிய முற்போக்குச் சக்திகளையெல்லாம் அருமையாக தமிழ்நாட்டில் ஒருங்கிணைத்து, வெறும் அரசியல் பார்வையல்ல எங்களுக்கு - சமூகப் பார்வை - சமூகப் புரட்சி பார்வை - மனிதநேயப் பார்வை - சுயமரியாதைப் பார்வை என்பதை உருவாக்கியதினுடைய விளைவு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கின்றோம். அதே வெற்றியை, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காட்டுவதன்மூலமாகத்தான், மறு படியும் இந்த மண் சமூகநீதி மண் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் கலைஞர் அவர்களுடைய நினைவு நாளில், நாம் சூளுரையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.


சட்டக் களத்தில் ஒன்றாக நின்றோம்!


இன்றைக்கு வந்திருக்கின்ற தலைவர்கள் அத்துணை பேருக்கும் நம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றவுடன் சட்டப் போராட்டத்தை நடத்து கின்ற நேரத்தில், சட்டக் களத்தில் ஒன்றாக நின்றோம்.


தேர்தல் களத்தில் மட்டுமல்ல, சமூகக் களத்தில் மட்டுமல்ல, சட்டக் களத்திலும் ஒன்றாக நின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்கிக் காட்டிய அத்துணைத் தலைவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த ஒற்றுமை உணர்ச்சியை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். வெறும் மதச் சாயத்தைக் காட்டி நம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கவேண்டும்; மத போதை எப்போதும் வந்தது கிடையாது.


தமிழ்நாட்டில் மதவெறி கிடையவே கிடையாது!


கோட்சே என்ற உயர்ஜாதிக்காரன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று, பிறகு விலகிய அவர், காந்தியார் அவர்களைச் சுட்டுக் கொன்றபொழுது நாடெங்கும் மிகப்பெரிய கலவரங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் வந்ததா? இந்து சாயா? முஸ்லிம் சாயா? என்று வடக்கில் உண்டு. தமிழ்நாட்டில் உண்டா? என்றால், கிடையாது. மதவெறி உண்டா? கிடையவே கிடையாது.


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடெங்கும் கலவரம் நடைபெற்றபொழுது, தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற பத்திரிகைகள் எழுதின, இது திராவிட மண் என்று. ஆகவேதான் அமைதி. நம்முடைய காவல்துறையினர் கல வரங்கள் நடைபெற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.


எனவேதான், இந்த இயக்கம் அடித்தளமானது - இந்த இயக்கம் வெறும் அரசியல் கட்சியல்ல - இது பலமான ஒரு சமூகநீதி இயக்கம். சமூகப் புரட்சிக்கான வித்தூன்றிய இயக்கம்.


‘‘உள்ளத்தால் ஒருவரே - உருவத்தால் பலர்'' என்று சொல்லக்கூடிய உணர்வோடு இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, ஒருங்கிணைப்போம்.


வருகின்ற தேர்தலாக இருந்தாலும், அந்த வாய்ப்பாக ஆட்சி என்பது ஆட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக - சமூகநீதிக்காக - சுயமரியாதைக்காக - அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காக என்பதைப் புரிந்துகொண்டு போராட வேண்டும், கலைஞர் அவர் களுடைய உணர்வுகள் - மாநிலத்தினுடைய உரிமை களைக் காப்பதற்கும், மக்களுடைய உரிமைகளைக் காப்பதற்கும், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும் இன்றைக்கும் - என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - அண்ணா தேவைப்படுகிறார் - கலைஞர் தேவைப்படுகிறார் - காமராசர் தேவைப்படுகிறார் - அம்பேத்கர் தேவைப்படுகிறார் - அத்துணை பேரையும் ஒருங்கிணைத்த ஓர் அமைப்புதான் - இங்கே இருக்கக்கூடிய உணர்வு - அதற்கு முன்னால், எந்தக் கொம்பனும், எந்த விஷமங்களைச் சொன்னாலும், சில்லறைத்தனங்களைச் செய்தாலும், அது எடுபடாது, எடுபடாது என்று கூறி, கலைஞர் அவர்களுடைய நினைவு நாளில் சூளுரை ஏற்போம்!


தளபதி ஸ்டாலின் தலைமையில் சுயமரியாதை ஆட்சி அமைய பாடுபடுவோம்!


ஒரு சுயமரியாதை ஆட்சியை இந்த நாட்டில் உருவாக் குவோம் -  அதுவும் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே அமையக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்குவோம்.


ஆட்சி என்பது  வெறும் ஆட்சிக்காக அல்ல - மீண்டும் சொல்கிறேன், மீட்சிக்காக - ஓர் இனத்தின் எழுச்சிக்காக என்று கூறி, அதன்மூலமாக கலைஞருடைய நினைவு நாளில், அதையே ஒரு சூளுரையாக ஏற்போம் என்று கூறி, வந்திருக்கின்ற தலைவர்கள் அவர்களுக்குப் பல்வேறு பணிகள் இருந்தாலும், நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்று, அவர்களுடைய கருத்துகளைத் தாராளமாக எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டு என்னுரையை நிறைவு செய்கிறேன்.


வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! வாழ்க அண்ணா! வாழ்க அம்பேத்கர்! வாழ்க காமராசர்! வாழ்க சமூகநீதி!


வணக்கம் நன்றி!


-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment