படித்து மனதில் பதிய வைக்க
ஈரோடு தந்த பேரேடு!
வடித்துத் தெருவில் நிறுவி வைக்க
வாளோடு வந்த வாழ்வேடு!
குறுத்துப்போல இலகுச் சொல்லில்
கருத்து நூறு புதைத்தவர்!
எதிர்ப்புக் கருத்து எது வந்தாலும்
சிரித்து ஏற்று மதித்தவர்!
ஆண்டான் அடிமை கூட்டுக்குள்ளே
ஈட்டிச் சொற்கள் எறிந்தவர்!
ஆண்டவன் என்ற கல்லைச் சொல்லை
குறுக்கு நெடுக்காய் பிளந்தவர்!
வகுத்துத் தொகுத்த ஆரிய மடமை
வலிமைகொண்டு எதிர்த்தவர்!
பகுத்துப் பார்த்துப் புகுத்திக்கொள்ள
புதியபாதை வகுத்தவர்!
இனத்தை மறுத்து இதயம் பகிர்ந்தால்
இனங்கள் ஒழியும் என்றவர்!
குணத்தை ஏற்றுக் குலவிக்கொள்ள
குறிப்பால் வழிகள் சொன்னவர்!
வெள்ளைச் சேலை வண்ணம்கொள்ள
விதையை விதைத்துச் சென்றவர்!
விரும்பிய வாழ்வில் வெந்நீர் ஊற்றும்
பழமை வாதம் கொன்றவர்!
அடுப்படிச் சிறையில் கிடந்த பெண்ணை
படி படி என்று வேண்டினார்!
கெடுபிடி எல்லாம் உடைத்துத் தள்ளி
கொடிபிடி என்று தூண்டினார்!
மூடர்கூட்டம் சேர்ந்து செலுத்தும்
முறையே வாக்கு என்றார்!
ஆளும் எவனும் அயோக்கியனென்றால்
அவனையும் துரத்து என்றார்!
இன்றும் இளையோர் ஏற்கும்வண்ணம்
எத்தனை கருத்தைக் கொண்டார்!
என்றன் கருத்தில் பிழையென்றாலும்
ஒதுக்கெனச் சொல்லித் தந்தார்!
கலகம் கழகம் இரண்டுக்குமே
அடையாளமென்றே ஆனார்!
காலம் ஆயிரம் கடந்தபின்னும்
கல்வெட்டுப்போல் வாழ்வார்!
- அம்பிகா குமரன்
No comments:
Post a Comment