மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், செந்தில்குமார் எம்.பி., கி.தனவேல் அய்.ஏ.எஸ். சங்கநாதம்!
* கலி. பூங்குன்றன்
சென்னை செப்.25 தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், கி. தனவேல் அய்.ஏ.எஸ்., செந்தில்குமார் எம்.பி. ஆகிய பெரு மக்கள் சங்கநாதம் செய்தனர்.
"பெரியார் என்றால் ஜாதி ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு - சமூகநீதி!"
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
இன்று உலகம் முழுவதும் குறிப் பாக இளைஞர்கள் மத்தியில் டிரண்டிங் பெரியார்தான்.
94 ஆண்டுகள் வாழ்ந்தார் - மறைந்து 47 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்துத்துவா சக்திகள்; வர்ணா சிரம வாதிகள் அஞ்சுகின்றனர்.
பெரியார் என் றால் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு - பகுத்தறிவு - சுய மரியாதை என்று பொருள்.
மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி - பெரியார் கூறும் சமூகநீதி அனைவருக்கும் வாய்ப்பு!
பெரியாரும், அம்பேத்கரும் மனு நீதியைக் கொளுத்தி சமூகநீதியின் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
'நீட்' என்பது சமூக அநீதிக்கானது. யாருக்கு ரூபாய் 3 லட்சம், ரூ.5 லட்சம் செலவு செய்து பயிற்சி நிலையங் களில் சேர முடிகிறதோ, அவர்களுக்கு மட்டுமே 'நீட்'டில் அதிக மதிப்பெண் பெற முடியும் எனும் நிலையில் பஞ்சமர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இந்த வாய்ப்பு உண்டா?அதனால்தான் நடப்பது மனுநீதி என்கிறோம்.
'நீட்' எழுதி அதிக மதிப்பெண் பெற்று வசதியுள்ள வர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம். நீட்டில் மதிப்பெண் பெறாத பணக்காரர் வீட்டுப்பிள்ளைகள் எவ்வளவுக் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் பலகோடி ரூபாய் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். எங்கே போனது - தகுதி - திறமை - மெரிட்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ஜஸ்டிஸ் என்று வரும் போது முதலிடம் சமூகநீதிக்குத் தான் (Justice - Social, Political and Economic).
அரசியல் (Political) என்று வரும் போது ஒருவ ருக்கு ஒரு வாக்கு என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமூகநீதியில், பொருளாதாரத்தில் அந்த உரிமை கிடைத்திருக்கிறதா? சமூக பொருளாதார விடுதலை கிடைத்து விட்டதா?
அமைச்சரவையில் 58 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 32 பேர் உயர் ஜாதிக்காரர்கள்! எங்கே இருக்கிறது சமூகநீதி? 89 செயலாளர்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு ஓரிடமும் இல்லை. 34 உச்சநீதிமன்ற நீதிபதி களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் மட்டும் தாழ்த்தப்பட்டவர் இதுதான் நிலைஎன்று சொல்லும் போது நடப்பது மனுநீதிதானே!
இந்திய அரசமைப்புச் சட்டம் முதலில் செயல்பட்ட காலத்தில் வேலைக்குத் தான் இடஒதுக்கீடு அதுவும் தாழ்த்தப்பட்டோருக்கு இருந்ததே தவிர கல்வியில் இல்லை.
தமிழ்நாட்டில் பெரியார்தான் முதல் குரல்கொடுத்தார். காமராசரும், அண்ணாவும் அணி வகுத்துக் குரல் கொடுக்க முதல் சட்டத் திருத்தம் வந்தது.
முதல் சட்டத் திருத்தம் வந்தபோதுகூடபொருளாதார அளவுகோலை சிலர் வலியுறுத்தினர். வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொருளாதார அளவுகோல் என்பதற்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்து, பொருளாதார அளவுகோல் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம் கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோலைத் திணிக்கிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு செய்து அவசர கெதியில் செயல்படுத்துகிறது - மத்திய பிஜேபி அரசு.
அன்று ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார். அதுப் பெரியார் தலைமையில் ஒழிக்கப்பட்டது. இப்பொழுது அதே குலக்கல்வி தேசியக் கல்வி என்ற பெயரால் திணிக்கப்படுகிறது.
தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் மாநில அரசு அலுவலகங்களில் சேர முடியும். இந்தியாவின் எந்தப் பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் செய்துவிட்டதே.
தனியார்த்துறை ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் அங்கு இடஒதுக்கீடு கிடையாது. (ஆனால் தனியார்த் துறைகளிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவோர் அரசு துறைக்கு வருகின்றனர். அதில் இடஒதுக்கீடு கிடையாது).
தனியார்த் துறையில் இடஒதுக்கீடு தேவை என்பது காலத்தின் கட்டாயம். அதற்குப் பெரியார் பிறந்த தமிழ்நாடு தான் குரல் கொடுக்க வேண்டும்.
ஜாதி ஒழிப்புக்காகப் பெரியார் செய்த பிரச்சாரமும், நடத்திய போராட்டங்களும் அனேகம்! ஜாதியை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியை 1957 நவம்பர் 26ஆம் தேதி கொளுத்தினர். ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் மூன்று ஆண்டுகள வரை சிறைத் தண்டனை அனுபவித்தனர்.
பெரியார் - வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் வாக்கு அரசியலில் ஈடுபட்டவர்கள், ஆட்சியில் அமர்ந்தவர்கள் பெரியார் என்ன சொல்லுகிறார். குறிப்பிட்ட பிரச்சினையில் பெரியார் கருத்து என்ன என்பதைக் கவனமாகக் கவனித்துச் செயல்படுத்தினர் - செயல்பட்டனர்.
1929இல் செங்கற்பட்டில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை தேவை தீர்மானம் நிறைவேற்றினர் - கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்! மக்கள் பிரச்சினை என்று வரும்போது - மாறுபட்டவர்களையும் அரவணைத்தவர் பெரியார். குன்றக்குடி அடிகளார் - மறைமலைஅடிகள் போன்றோர் உதாரணம் - அதனால் தான் அவர் பெரியார் என்றார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி. பரந்தாமன் அவர்கள்.
சூழ்ச்சிதான் ஆரியர்களின் ஆயுதம்!
- கி. தனவேல் அய்.ஏ.எஸ். கருத்துரை
தமிழ்நாடு அரசு, மத்திய அரசு களில் செயலாள ராக சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கி.தனவேல் அய்.ஏ.எஸ். அவர்கள் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கடந்த 17ஆம் தேதி திராவிடர் கழகத் தால் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த காணொலியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் சிறப்பு இயக்கங்களையும், அவர் தொண்டர்கள் 'சூத்திரர்களும்' 'பஞ்சமர்களும்' பெற்ற பயன் - பலன்கள் குறித்து விளக்கினார். தந்தைபெரியார் அவர்களின் கருத்துக்கு மாறுபட்டவர்கள்கூடத் தந்தை பெரியார் கருத்துக்களை ஒட்டிக் கூறியதுண்டு, காஞ்சிபுரம் அக்னிஹேத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.கே. அய்யங்கார், ஏன் பாரதியார்கூட தந்தை பெரியார் கருத்துகளுக்கு உடன்பட்டதை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார்.
"ரிசா, குபா, க்ரமு என்னும் நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேத காலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாக சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந் தோரின் முடிவுகள் இவை.
வேதம் பிராமணர்கள் கைக்குப் போனதும், அறமும், தர்மமும், கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்த தால்... வேத மதம், பிராமண மதம் ஆயிற்று. ஆரியமதம், வேத மதமாகி... வேத மதம் பிராமண மதமாகி கால வெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க...
அப்போதே இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தன. இவைகளில் எது இந்துமதம்?
"சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ, அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை, இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் நன் றாகவே வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் வேலைக்காரர்களாக, எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக் குழைத்தனர்" என்ற அக்னி ஹோத்ரமல ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார்கள்.
பூஜை வேளையில் பெரியவாள் நீஷபாஷையான தமிழில் பேச மாட்டார் என்கிறார்கள். பூசெய் என்ற நமது மரபு எப்படி பூஜையாயிற்று? தமிழிலும் அர்ச்சனை என்பதில் இந்த "லும்" எங்கிருந்து வந்தது?
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவரான தோழர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலை எழுதியுள்ளார். 20ஆம் நூற்றாண்டின் பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் - பிராமண இனத்தினரான பாரதியாரே "சூத்திர னுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்று சாத்திரம் சொல்லிடுமாயின், சாத்திரம் அன்று சதி எனக் கண்டோம்!" என்று பாடவில்லையா?
இது பெரியாரின் கருத்துத்தானே!
2500 ஆண்டுகளுக்கு முன் கவுதமப் புத்தர் சமயத்தில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார். ஆனால் அந்த மார்க்கம் சீனா, ஜப்பான் நாடுகளுக்கு விரட்டப்பட்டு விட்டது சனாதன மதம் வேரூன்றியது.
"கல்வியை சூத்திரர்களுக்கு மறுப்பது - அதனைத் தங்களுக்கு மட்டுமே ஆக்கிக் கொண்டது. இடையில் கொஞ்சம் மாற்றம் வந்தது. பக்தி மார்க்கம் வேத மதத்திற்கு மாற்றுக் கருத்துக்களை வைத்தது.
சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தனர்.
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ
என்று பாடியதுண்டு.
கோயிலாவது ஏதடா குலங்களாவது ஏதடா? என்று கேள்வி கேட்டதும் உண்டு.
வடலூர் இராமலிங்க அடிகளாரும் ஆறாம் திரு முறையில் வேதங்களையும் மூடப் பழக்க வழக்கங்களை யும் சாடினார்.
பார்ப்பனர்கள் எதையும் நேரிடையாக செய்ய மாட்டார்கள். எதிலும் தந்திரமும், சூழ்ச்சியும் இருக்கும்.
இப்பொழுது வெளி வந்துள்ள புதிய கல்வி என்னும் தேசிய கல்வியும் அதுதான். ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி வாய்ப்பை மறுக்கும் மறைமுகத் திட்டம்தான் இது.
'நீட்' என்று சொல்வதெல்லாம்கூட திறமைக்கானது அல்ல. 'நீட்' தேர்வு என்பது வெறும் ஒப்புக்காக நடத்தப்படுவதே.
கலை, அறிவியல் (ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்) கல்லூரியில் சேர்வதற்குக்கூட நுழைவுத்தேர்வு என்பது எல்லாம் எதைக் காட்டுகிறது?
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம்தான் இப்பொழுதும் மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது.
கல்வி என்பது மாநிலத்திற்கானது. பொதுப் பட்டியல் என்று சொல்லுவதும் சரியல்ல. ஒத்திசைவுப் பட்டியல் என்பதே சரியானது. மாநில அரசு ஒத்துக் கொண்டால் தான். செயல்படுத்த முடியும் - செயல்படுத்தவும் வேண்டும்.
அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு புறக்கணிப்பும் ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது. நம்மை வைத்தே நம் கண்களைக் குத்தும் வேலை நடக்கிறது.
மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டால் ருசியாவுக்கு ஏற்பட்ட கெதி இந்தியாவுக்கும் ஏற்படும்.
ருசியாவில் என்ன நடந்தது? ருசிய மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது - அதன் விளைவு - 15 நாடுகளாக சிதறுண்டு போனதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா கூட அய்க்கிய நாடுகள்தான். 50 மாநிலங்கள் தனித்தன்மையுடன் ஆட்சி நடத்துகின்றன. இந்தியாவின் பன்முகத் தன்மையைக் குலைத்தால் தேச ஒற்றுமைக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளில் அவர் ஊட்டிய உணர்வுகளைப் பகிர்ந்து விடை பெறுகிறேன் என்றார் தனவேல் அய்.ஏ.எஸ். அவர்கள்.
"பெரியார் மிகமிகத் தேவைப்படுகிறார்"
தருமபுரி செந்தில்குமார் எம்.பி.
தந்தை பெரியாரின் தேவை முடிந்து விட்டதா? - இல்லை இல்லைவே யில்லை - முன்பு எப்போதையும் விட இப்பொழுது அதிகம் தேவைப் படுகிறார்.
தந்தை பெரியாரைப் பற்றியும், அவர் தந்த கொள்கைகள் பற்றியும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால்தான் நினைவூட்டிக் கொண்டே இருந்தால் தான் நாம் பெற்ற ஏற்றம் நிலைக்கும் - காப்பாற்றவும் படும்.
தமிழகம் தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்குமுமே!
நீதியின் பக்கம் நாம் - அநீதியின் பக்கம் அவர்கள் - இன எதிரிகள், நமது பாதை அன்பு - அவர்களின் பாதை வன்முறை!
திராவிடம் என்பது- ஆதிக்கம் எங்கே இருக்கிறதோ, அதைத் தேடிச் சென்று எதிர்ப்பது ; ஆண் எஜமானன், பெண் அடிமை என்றால் அங்கே குரல் கொடுப்போம். ஒருவன் உயர் ஜாதி, இன்னொருவன் தாழ் ஜாதி என்றால் அங்கே எதிர் குரல் கொடுப்போம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தந்தை பெரியார் கண்ட அனுபவங்களே கொள் கைகளை உருவாக்கின. திண்ணைப் பள்ளியில் கண்ட ஜாதிப் பார்வை அவரை ஜாதி ஒழிப்பு வீரராக்கியது.
கல்லிடைக்குறிச்சி அய்யருடன் ஏற்பட்ட விவாதமும், நடப்பும் விதிப்பலனையும் கர்மப் பலனையும் எதிர்க்கச் செய்தது.
ஈரோட்டில் பிளேக் நோய் ஏற்பட்டு ஊரேஅடங்கி ஒடுங்கிக் கிடந்தபோது, வாலிப நண்பர்களுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுவது முதல் மரணம் அடைந்தால் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வது வரை வாலிப வயதிலேயே தொண்டறம் மேற்கொண் டவர் பெரியார் - மனிதநேயம் என்பது அவருடன் பிறந்த ஒன்று.
தன் தந்தையாருக்காக வியாபாரத்தில் போட்ட கையெழுத்துப்பற்றி வழக்கு நடந்த நேரத்திலும், வழக்குரைஞர்கள் அந்தக் கையொப்பத்தை நான் போடவில்லை என்று சொல்லச் சொன்னபோதும் அதனை மறுத்து என் தந்தையாருக்காக நான் கையொப்பம் போட்டது உண்மை உண்மை என்று நீதிமன்றத்தில் சொன்னது - 24 வயது முதற்கொண்டே அவரிடம் குடிகொண்டு இருந்த நேர்மைக்கான எடுத்துக்காட்டு. துறவிபோல காசிக்குச் சென்று சுற்றிப்பார்த்து, அங்கு மதத்தின் பெயரால் தலை விரித்தாடிய ஒழுக்கக் கேடுகள், பார்ப்பன ஜாதி உணர்வின் போக்குகள் அவரைச் சிந்திக்க வைத்தது.
பார்ப்பனர் அல்லாதார் கட்டிய சத்திரங்களில்கூட பார்ப்பனர்களுக்கு மட்டுமே உணவு என்ற நிலை புதிய உணர்வுக்கு வித்திட்டது.
தந்தை பெரியாரை ஆண்கள் புரிந்து கொண்டதை விட பெண்கள்தான் முந்திக் கொண்டனர். அதனால்தான் 1938இல் மாநாடு கூட்டி "பெரியார்" என்ற பட்டத்தை வழங்கினர்.
"இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லா மையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது." என்பதுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்!
இன்றைக்கு இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னர் ஜாதி அடையாளம் இல்லாதது தமிழ்நாட்டில் மட்டும்தான் 1965 தருமபுரியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் என் தாத்தா வடிவேல் கவுண்டர் நின்று வெற்றி பெற்றார். தந்தை பெரியார் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அந்த ஜாதி அடையாளம் அவரோடு முடிந்தது. அது தொடரவில்லை இந்த நிலை தந்தை பெரியார் பிறந்த - பிரச்சாரம் செய்த தமிழ்நாட்டில் மட்டுமேதான் உண்டு.
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில்கூட இந்த நிலையைப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் ஜாதி கட்சி நடத்தும் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின் னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வது கிடையாது. இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.
கல்வியை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் - அடித்தளம் இட்டது திராவிட இயக்கமே. நீதிக்கட்சி காலத்திலிருந்து அதன் தொடக்கம் ஆரம்பம். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து காமராசரை முதல் அமைச்சர் ஆக்கியதில் தந்தை பெரியாருக்கு முக்கிய இடம் உண்டு. ராஜாஜியின் குலக்கல்வியை ஒழித்து அவர் மூடிய பள்ளிகளையும் புதிய பள்ளிகளையும் தந்தை பெரியார் ஆதரவோடு திறந்தார் காமராசர்.
தொடர்ந்து அண்ணா, கலைஞர் ஆட்சியில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது.
1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினர்! கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 1989ஆம் ஆண்டில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்தது.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தவரும் முதல் அமைச்சர் கலைஞர்தான். உச்சநீதிமன்றமும் அது செல்லும் என்று அண்மையில் தீர்ப்பளித்தது.
என்னைப் பொறுத்தவரை பொது மேடையில் பேசிட எனக்கு வாயப்புக் கிடைத்தது - திராவிடர் கழக மேடையில் தான் - அதுவும் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்ட மேடைதான். ஊமை செயராமன் அவர்களுக்கு மிகவும் நன்றி. நான் ஒரு கடவுள் மறுப்பாளன்.
நாடாளுமன்றத்தில் முதலில் நுழைந்தபோதே கருப்புச் சட்டை அணிந்துதான் சென்றேன்.
'பெரியார் வாழ்க, வெல்க திராவிடம்!' என்று முழங்கினேன். தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைவரும் அவ்வாறே முழக்கமிட்டனர்.
திராவிட மாநிலமான தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள் எல்லா மாநிலங்களும் முன்னேறும் என்றும் கூறினேன்.
சமூகநீதி என்றாலும் சரி, 'நீட்' என்றாலும் சரி முதல் குரலைக் கொடுப்பவர் நமது ஆசிரியர்தான்!
வெறும் படிப்பு மட்டும் போதாது - பகுத்தறிவும் வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்குக் காரணமே தந்தை பெரியார் ஊட்டிய அந்தப் பகுத்தறிவுச் சிந்தனையே - அதுதான் நமது அஸ்திவாரம்.
நமது சித்தாந்த எதிரிகள் தந்தை பெரியார் சிலையைக் கண்டே நடுங்குகிறார்கள் - ஆத்திரப்படுகிறார்கள். தந்தை பெரியார் சித்தாந்தத்துக்கு எதிர்வினையாற்றிட யாரும் கிடையாது. அவர்களுக்குத் தெரியாது - பெரியார் என்பவர் பெரும் சக்தி - மக்களின் உணர்வில் கலந்துள்ள தனி சக்தி சுயமரியாதை பகுத்தறிவுச் சக்தி என்று.
அவர் உடலால் மறைந்திருக்கலாம் - அவர் ஊட்டிய கொள்கையை எடுத்துச் செல்ல, எடுத்துச் சொல்ல நமது தலைவர் ஆசிரியர் இருக்கிறார் - திமுக தலைவர் தளபதி இருக்கிறார். கருப்புச் சட்டைப் பட்டாளம் இருக்கிறது. இந்த சக்திகள் இருக்கும் வரை தமிழ மண்ணில் நமது சித்தாந்த எதிரிகளின் நகம்கூட பதிய முடியாது.
தலைவர் கலைஞருடன் நமது ஆசிரியர் அவர்கள் இணைந்து முடிவுகளை எடுத்ததுபோல தளபதி அவர்களும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
தந்தை பெரியார் கொள்கை தமிழ்நாட்டையும் கடந்து வட மாநிலங்களிலும் தேவைப்படுகிறது. அந்த நிலையை உருவாக்குவோம் என்று தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment