'பிள்ளையார் பால்' குடித்த, மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம் ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 22, 2020

'பிள்ளையார் பால்' குடித்த, மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம் ஆண்டு விழா

'பிள்ளையார் பால்' குடித்த, மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம் ஆண்டு விழாவில்


போராளி நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம்பற்றி


தமிழர் தலைவர் எழுச்சிமிகு கருத்துரை



மராட்டிய மாநிலத்தில் மக்கள் இயக்கமாக செயல் பட்டு வரும் பகுத்தறிவாளர் அமைப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் நிறுவிய 'மகாரஷ்டிரா அந்தசிரத்த நிர்மூலன் சமிதி (Maharashtra Andhashraddha Nirmoolan Samiti-'Mans') ஆகும். கடந்த ஆகஸ்டு 21ஆம் நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்கு மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் பலவிதமான மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் பூர்வமான கருத்து விளக்கத் தினை களப்பணி மூலம் அந்த அமைப்பு ஆற்றி வருகிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஒரு மாத கால பிரச்சார இயக்கத்தின் நிறைவாக செப்டம்பர் 21ஆம் நாளன்று 'பிள்ளையார் பால் குடித்த' மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம்ஆண்டு விழா நிகழ்ச்சியாக இணைய வழி நிகழ்ச்சியினை நடத்தினர். காணொலி கருத்தரங்கின் (Webinar) நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று எழுச்சி மிகுந்த கருத்துரையினை வழங்கினார்.


மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலி கருத்தரங்க நிகழ்விற்கு மகாராஷ்டிர அந்தசிரத்த நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் தலைமை தாங்கினார். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்பேராசிரியர் நரேந்திர நாயக் (மங்களூர், கர்நாடகா), கேரள அமைப்பின் Kerala Sasthra Sahitya Parishad (KSSP) பொறுப்பாளர் வேதியியல் பேராசிரியர் முனைவர் சங்கீதா சென்னம்பள்ளி (கள்ளிக்கோட்டை, கேளரா) மற்றும் மேற்குவங்க அமைப்பின் All India Peoples Science Network (AIPSN)   தலைவர் பேராசிரியர் முனைவர் சப்யாசாச்சிசட்டர்ஜி (கொல்கத்தா) ஆகியோர் மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றி கருத்து களை வழங்கினர். நிறைவாக தமிழர் தலைவர் நிறை வுரை ஆற்றினார்.


தமிழர் தலைவர் கருத்துரை


மூடநம்பிக்கை ஒழிப்புக் காணொலிக் கருத் தரங்கில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:


சமூகத்தில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பணியில் தன் உயிரையே தியாகம் செய்த போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நிறுவிய மகாராஷ்டிரா அந்தசிரத்த நிர்மூலன் சமிதி கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வரும் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்திற்குப் பாராட்டுகள்.


தமிழ்நாட்டில் எங்களது திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்தி வரும் பெரும்பான்மை பிரச்சாரக் கூட்டங்களின் தொடக்கத்தில் 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியினை நடத்துவதை ஒரு வழக்க மாகக் கடைப்பிடித்து வருகிறோம்.  மக்கள் நடை முறையில் கடைப்பிடித்து வரும் சில பழக்க வழக் கங்கள், பொருள் புரியாமல் அச்சம் காரணமாக நடை முறைப்படுத்தி வரும் சில வாடிக்கைகளை விளக்கி, அதன் பின்னணி 'மந்திரமல்ல, தந்திரமே' என எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் அறிவியல் சார்ந்த கருத்துகளை யும் எடுத்துக் கூறி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


25 ஆண்டுகளுக்கு முன்பு ''பிள்ளையார் பால் குடிக்கிறார்' என சிலை பால் குடிப்பதை - மூட நம்பிக்கையை நாடு முழுவதும் பரப்பினர். அந்த மூடநம்பிக்கைக்கும், அதனை நாடு முழுவதற்கும் பரப்பிய திட்டத்திற்கும் ஒரு பின்னணி உண்டு. அந்த சமயம் உத்தரப்பிரசேத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன் சிராம், மாநில முதல்வர் மாயாவதி ஆகியோரது முன்னெடுப்பில் லக்னோவில் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் போற்றி 'பெரியார் மேளா' எனும் பெருந் திரள் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்தும், நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராள மான பகுத்தறிவாளர்கள், பெரியார் மேளாவில் பங்கேற்றனர். நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத் திய "பெரியார் மேளாவை' அதன் பாதிப்பை திசை திருப்பும் நிகழ் வாகவே மதவாதிகளால் திட்ட மிடப்பட்டு 'பிள்ளையார் பால் குடிக்கிறார்' எனும் மூடநம்பிக்கை நாடு முழுவதும் பரப்பப் பட்டது. 'சிலை எப்படி பால் குடிக்கும்?' களிமண்ணால் செய் யப்பட்ட பிள்ளையார் சிலை சிறி தளவு பாலை ஈர்த்துக் கொள்வதை 'பிள்ளையார் பால் குடிக்க வில்லை' என விளக்கம் அளித்து அந்த மூடநம்பிக்கை தொடர்ந்து நடை பெறாது தடுத்து நிறுத்தப்பட்டது. அப்படிப்பட்ட 'பிள்ளையார் பால் குடிப்பு' மூட நம்பிக்கை ஒழிப் பினை ஓர் அடையாளமாகக் கொண்டு 'விநாயகர் (பிள்ளையார்) ஊர்வலம் நடத்திய மராட்டிய மாநிலத்தில் தற்சமயம் பகுத்தறி வாளர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் நடத்தி வருவது பெருமை யினையும் மகிழ்ச்சியினையும் அளிக்கிறது.


"பிள்ளையார் பால் குடிப்பு' நிகழ்ச்சியோடு மூட நம்பிக்கை பரவல் நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டில் பிள்ளையாரை வைத்து ஒரு மாபெரும் மூட நம்பிக்கை நிகழ்ச்சியை நிரந்தர மாக்கிட முயற்சித்த செயலினை பெரியார் இயக்கத் தவர்கள் முளையிலேயே கிள்ளி எறிந்த நிகழ்வும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னையில் தியாகராய நகர் என ஒரு மய்யப் பகுதி இருக்கிறது. அந்தப் பகுதியில்தான் தந்தை பெரியார் தனது இறுதிப்பேருரையினை வழங்கினார். தந்தைபெரியார் வாழ்நாளிலேயே அந்தப் பகுதியில் 'திடீர் பிள்ளையார்'  சுயம்புவாக எழுந்துவிட்டார் என கதைகட்டி அந்தசிலையை வணங்கி, உண்டியல் வைத்து பணம் வசூலித்து ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என மதவாதிகள் திட்ட மிட்டு நடந்தனர்.   பிள்ளையார் சிலை திடீ ரென்று எப்படி தோன்ற முடியும்? அது குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலை யினை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என திராவிடர் கழகம் தமிழக அரசுக்கு  எழுதிக் கேட்டுக் கொண்டது. அப்பொழுது முதல்வராக இருந்தவர் பெரியாரின் ஈரோட்டுப் பகுத்தறிவு குருகுலத்தில் படித்து வளர்ந்தபெரியாரின் மாணாக்கர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான் சற்றும் தாமதிக்காமல் உடனே விசாரணைக்கு உத்தரவிட்டார். உண்மை நிலை வெளியில் வந்தது. காவல்துறையைச் சார்ந்த காவலர் ஒருவர் மதவாதிகளின் தூண்டுதலி னால் ஒரு பிள்ளையார் சிலையை பொது இடத்தில் பூமிக்குள் புதைத்து அதனுடன் ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து வெடிக்கும் குண்டையும் வைத்து விட்டார். எதிர்பார்த்தபடி குண்டு வெடித்து, புதைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை வெளியில் வந்தது. இப்படி, திட்டமிட்டு வெளிவந்த பிள்ளையார்


சிலையை 'சுயம்பு' (தானாகவே கடவுள் சக்தியினால்) வந்தது என கதைகட்டினர். உண்டியல் வசூலும் நடைபெற்றது. இந்த விவரங்கள் விசாரணையில் தெரிய வந்து, உண்டியல் பணம் கைப்பற்றப்பட்டு, இந்து அறநிலைய பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிள்ளையார் சிலையைப் புதைத்து வைத்த காவலர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படியாக பிள்ளையார் கோயில் கட்ட வேண்டும் என மூட நம்பிக்கையினை முதலாக வைத்து தொடங்கப்பட்ட செயல், பெரியார் தொண்டர்களால் பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் எடுத்த முயற்சியால், அப்பொழுது ஆட்சியில்இருந்த பகுத்தறிவு நெறி சார்ந்த முதல்வர் கலைஞர் அவர்களால் முறியடிக் கப்பட்டது. இப்படி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மதவாதிகள், மூடநம்பிக்கையினை வளர்க்கும் விதமாக எடுக்கப்படும் முயற்சிகளை பகுத்தறிவாளர் களாகிய நாம் முறியடிக்க வேண்டும்.  இப்படியெல்லாம் பகுத்தறிவாளர்களாகிய நாம் மதவாதிகளுக்கு எதிராக, மூடநம்பிக்கையாளர்களுக்கு எதிராக நடப்பதாக கருதக் கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஒவ்வொரு குடிமகனும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையைத்தான் ஆற்றி வருகிறோம். அரசமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ(எச்) கூறுகிறது


It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of enquiry and reform.


அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பது,மனித நேயம் பேணுவது,எதையும் கேள்விக்கு உட்படுத்திப் பார்க்கும் உளப்பாங்கினை வளர்ப்பது, சீர்திருத்தப் பணியினை பெருக்குவது இந்திய நாட்டு ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.


மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை தொடர்ந்து செய்துவருவதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினைத்தான் பகுதறிவாளர்களாகிய நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த பணியில் எந்தவித எதிர்ப்புகள் வந்தாலும், கடமை ஆற்றுவதிலிருந்து பின்வாங்குதல் கூடாது. அரசமைப்புச் சட்டம் நமக்குத் துணையாக இருக்கிறது. கடமையைச் செய்திடும்  உண்மையான குடிமக்கள்தான் பகுத்தறிவாளர் ஆவர்.


தந்தை பெரியார் தனது பிரச்சாரத்தின் பொழுது அடிக்கடிகூறுவார். மனிதர் ஒவ்வொருவரும் இரண்டு கற்கும் பணிகளை அவசியம் செய்திட வேண்டும். ஒன்று - புதிதாக சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றொன்று கற்று கடைப்பிடிப்பவைகளை கைவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்ததை கைவிடுவதுதான், கடைப்பிடித்து வரும் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள், இன்று அறிவியல் தொழில் நுட்பம் பல மடங்கு பெருகியுள்ளது. இதனால் மனிதரின் சராசரி வாழ்ந்திடும் காலமும் அதிகரித்தே வந்துள்ளது. 1870ஆம் ஆண்டு வரை மனிதரின் சராசரி வாழ்வு நாள் காலம் 20-30 ஆண்டுகள். பின்னர் 1930ஆம் ஆண்டு வரை 50 ஆண்டுகள் என உயர்ந்தது. அடுத்து 60 ஆண்டுகள் என ஆகி 1955 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆண்டுகள் என உயர்ந்து இன்று மனிதரின் சராசரி வாழும் காலம் 80 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.


இப்படி மனிதர் அதிக நாள் வாழ்வதற்கு அடிப்படை அறிவியல் புரிதல், கடைப்பிடிப்பு, அத்தோடு எந்த பலனையும் அளிக்காத தடங்கலை ஏற்படுத்தக் கூடிய மூடநம்பிக்கை பழக்க வழங்கங்களை அழிப்பதுதான். அறிவியல் கற்றவரும்,வாழ்வில் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது இல்லை. இந்த நிலைமைகள் மாற வேண்டும். மாற்றும் ஆக்க சக்தி பகுத்தறிவாளர்களிடம் உள்ளது; அவர்கள் ஆற்றிடும் பிரச்சாரப் பணியில்தான் உள்ளது. படித்தவர்களும் மயங்கி பாபாக்களிடம் சரண் அடையும் சூழல் நீடிக்கிறது. காலம் சென்ற கருநாடகா பகுத்தறிவாளர் அறிவியலாளர் எச்.நரசிம்மையா மோதிரம், சங்கிலியை மந்திர சக்தியால் கொண்டு வருவதாகக்கூறிய சத்ய சாயிபாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தினார். நேரடியாக வந்து வர வைக்க முடியுமா என அறைகூவல் விடுத்தார். அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க, மக்களது மூடநம்பிக்கை மனநிலையை மாற்றுகின்ற பணியினை பகுத்தறிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும். புராணங்களே வரலாறாக திரிக்கப்பட்டு வருகின்றன. பொய்யான அறிவியலானது அறிவியல் முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றி வருகிறது. ஜோதிடம் எனும் போலி அறிவியலை உயர்கல்வி நிலையங்களிலே கற்பிக்கும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலைமைகள் எல்லாம் மாற வேண் டும். மனிதரது ஆற்றல் மூடநம்பிக்கை முழுவதும் களையப்பட்டு, சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். அத்தகையை சூழலை, முன்னேற்றத்தை பகுத்தறிவாளர்கள் தன் பரப்புரை செய்துகொண்டு வர முடியும். பிரான்சு நாட்டு சிந்தனையாளர் கூறினார்;  The World has to be conquered not by arms but by ideas.   உலகம் போர் கருவிகளில் வெல்லப்படக் கூடாது. அறிவார்ந்த சிந்தனைகளால் வென்றெடுக்கப்பட வேண்டும். அதைப்போல உலகம் அறிவியல் மனப்பான்மையினை பெருக்குவதின் மூலம், எதையும் கேள்வி கேட்டு ஆய்வுசெய்திடும் முறையிலும் அணுகி மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும். இது எளிதான பணி அல்ல; ஓர் எதிர் நீச்சல் பணி; நன்றி எதிர்பார்க்காத பணி. அத்தகைய பணியினை மேலும் பலப்படுத்துவோம் பரந்துபட்டு பரப்புரை செய்வோம். வாழ்க தந்தை பெரியார் வளர்க பகுத்தறிவு நெறி பெருகும் அறிவியல் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை.


இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.


கருத்தரங்கில் பல தரப்பட்ட சமூகச் செயல்பட்டாளர்கள் கலந்து கொண்டனர்.சமிதியின் இணைச் செயலாளர் முனைவர் சுடேஷ் கோதேகாவ் அறிமுக உரையினையும், வரவேற்புரையினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சவீதா சாதே; சுசிலா முன்டே, விருண்டா சென்டே, மும்பாய் குமணராசன், நிதின்குமார் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை சுதர் நிம்பால்கர் ஒருங்கிணைத்து நடத்தினார். கருத்தரங்க காணொலியினை தாண்டி, பேஸ்புக் மற்றும் பெரியார் டிவிஇணைய இணைப்பின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் பலர் பார்வையாளர்களாக இருந்து பகுத்தறிவு கருத்தாக்கம் பெற்றனர்.


No comments:

Post a Comment