* கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'இந்துத்துவா' எனும் தொடரில் தனது மூன்றாம் நாள் சொற்பொழிவை நேற்று (8.9.2020) மாலை 6.30 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று போற்றப்படும் எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் 'ஞான கங்கை' (Bunch of Thoughts) எனும் நூலை எழுதினார்.
அதில் மூன்று எதிரிகளைப் பட்டியலிடுகிறார்.
(1) இஸ்லாமியர்
(2) கிறித்தவர்கள்
(3) கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பகுத்தறிவுவாதிகள்
இப்படி எல்லாம் பேசுவது - எழுதுவது - இந்தக் கால கட்டத்துக்குப்பொருத்தமற்றது. மக்களிடத்தில் இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தால் எதிர் விளைவு ஏற்படும்! என்று ... உணர்ந்த நிலையில், இப்பொழுது 'ஞான கங்கை'யை ஒதுக்கி வைத்து விட்டனர். மறுபதிப்பு செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டனர்.
உண்மையில் இந்து மதம் என்ற பெயரே கிடையாது; வேத மதம்என்றுதான் பெயர். வேதம்தான் இந்து மதத்துக்கு அடிப் படை.; வேதம் என்றால் அறிவு என்று அர்த்தமாம். ஆனால் அந்த வேதத்தை சூத்திரர்கள் படிக்கக் கூடாதாம் - படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். படித்து வைத்திருந்தால் சூத்திரன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள்.
இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று ஆக்கப்பட்டதால் தானே சமஸ்கிருதம் செத்த மொழியானது.
கடவுளைக்கூட எதிர்க்கலாம் - மறுக்கலாம் - ஆனால் வேதத்தை மட்டும் மறுக்கவே கூடாது. இந்து மதத்தைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பு நாத்திகம் அல்ல - வேத மறுப்பே நாத்திகம் ஆகும்.
வேதம், தரும சாஸ்திரம் இவ்விரண்டையும் யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின்றான் என்கிறது மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 2 சுலோகம் 11)
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் இதைத் தான் கூறுகிறார்.
"நாஸ்திகர் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.
அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.
வைதிக வாழ்க்கையை ஆட்சேபிப்பது தான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல" (தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 407-408).
சங்கராச்சாரியார் தனக்குச் சாட்சியாக திருஞான சம்பந்தரை இழுப்பதைக் கவனிக்க வேண்டும்.
கடவுளிடம் திருஞான சம்பந்தன் என்ன வேண்டுகிறான்?
வேத வேள்வியை
நிந்தனை செய்துழல்
ஆதமில்லியமனோடு தேரரை
வாதில் வென்றொழிக்கத்
திருவுள்ளமே என்று பாடுகிறார்.
வேதங்களை மறுக்கக் கூடிய பவுத்த, சமணர்களை வாதத்தில் வெல்ல அருள் பாலிக்குமாறு வேண்டுகிறான் திருஞானசம்பந்தன்.
பவுத்தர்கள் வேத மறுப்பாளர்கள் ஆதலால் அவர்களை நாத்திகர்கள் என்று வால்மீகி இராமாயணமும் கூறுகிறது.
'யதா ஹி சவ்ர:
ஸயத தயாஹி புத்த
ததாகதம் நாஸ்திக மத்வித்தி
இதன் பொருள்: திருடனும், புத்தனும் ஒன்றாவான் - அவன் நாத்திகன் என்கிறது இந்து மத இதிகாசமான வால்மீகி இராமாயணம்.
வேதத்தை மறுக்கிறார்கள் என்ற கோபத்தினால்தான் திருஞானசம்பந்தன் மதுரை வாழ் சிவனிடம் வேண்டுதல் வைக்கிறான்.
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்!
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத்தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணார் கற்பழிக்கத் திருவுள்ளமே
என்று பாடுகிறார்.
சமண, பவுத்தர்கள் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக என்று திருஞானசம்பந்தன் என்ற பொடியன் (16 வயதிலேயே மாண்டு விடுகிறான்) பாடுகின்றான் சங்கராச் சாரியார் இந்தத் திருஞானசம்பந்தனைத்தான் தன் கருத்துக்குச் சாட்சியம் தேடுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
கோல்வால்கராக இருந்தாலும் சரி, அரவிந்த் கோஷாக இருந்தாலும் சரி, விவேகானந்தராக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ். குருநாதர்கள், அவரின் வழிவந்தவர்களாக இருந் தாலும் சரி, அவர்கள் அத்தனைப்பேரும் கட்டிக் காப்பது வேதங்களையே!
காரணம் அந்த வேதங்கள் தான் பிறப்பின் அடிப்படை யிலேயே பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்று தூக்கிப் பிடிக் கிறது. கடவுள் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான், தோள்களி லிருந்து க்ஷத்திரியன் பிறந்தான், தொடைகளிலிருந்து வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்கிறது.
(யஜுர்வேதம் அத்தியாயம் 31 - சுலோகம் 11)
அதர்வண வேதமும் இதே கருத்தைத்தான் ஒப்பிக்கிறது (அத்தியாயம் 19 சுலோகம் 6).
சுருதியாகிய வேதம் இப்படி கூறுகிறது என்றால் ஸ்மிருதி யாகிய மனுதர்மமும் இதையே தான் குறிப்பிடுகிறது.
(அத்தியாயம் -1 சுலோகம் 87)
ரிக்வேதம் என்ன சொல்லுகிறது?
தேவாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் ததேவதா
தன்மந்த்ரம் பிரமணாதீனம்
பிராமணா மம தேவதா
(ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆம் சுலோகம்)
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் தான் நமது கடவுள், அவனை வணங்க வேண்டும் என்கிறது ரிக் வேதம்.
வைதீகமாக இருந்தாலும் லவுகீகமாக இருந்தாலும் - மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் என்கிறது மனுதர்மம். (அத்தியாயம் 9 - சுலோகம் 317).
"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொல்படிதான் நடந்திருக்கிறது. இராமர் ஆட்சியும் வசிஷ்டர் சொல்படிதான் நடந்திருக்கிறது. மதுரையில் நாயக்கர்கள் ஆண்டபோதும் அந்தணர்தான் குருவாக இருந்தனர். ஆண்டவன்கூட அப்புறம்தான் - அந்தணன்தான் முதலில்" - இப்படிப் பேசியவர் மறைந்த சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி.
- 'அருந்தொண்டாற்றும் அந்தணர்' நூல் வெளியீட்டு விழாவில் 9.10.2002)
இந்த வேதங்கள் அபவ்ரு ஷேயம் - அதாவது புருஷனாகிய மனிதனால் உண்டாக்கப்பட்டவையல்ல, பிர்மாவால் உண்டாக் கப்பட்டது என்று ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. பிரஜாபதியால் உண்டாக்கப்பட்டது என்று இன்னொரு இடத்திலும் ரிஷிகளால் உண்டாக்கப்பட்டது என்று மற்றோரு இடத்திலும் வருகிறது. ஒரு யாகம் செய்யப்பட்டதாகவும், அந்த யாகத்திலிருந்து வேதம் பிறந்தது என்று இன்னொரு கதை!
இவற்றில் எது உண்மை?
இந்த நான்கு வேதங்களையும் சோமுகாசூரன் என்ற அசுரன் திருடிக் கொண்டு போய் கடலில் ஒளிந்து கொண்டான். மகா விஷ்ணு மச்சவதாரம் (மீன் உருவம்) எடுத்துக் கடலுக்குள் குதித்து அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டுக் கொண்டு வந்தானாம். இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தான பகுத்தறிவு வினாவை எழுப்பினார்.
வேதம் என்பது எழுதாக் கிளவி என்கிறார்கள். வெறும் ஒலி வடிவத்தில்தான் இருந்தது என்று சொல்லும்போது ஒலி வடிவத்தில் உள்ளதை எப்படி ஓர் அசுரன் திருட முடியும்என்ற கேள்வியைக் கேட்டார். என்ன பதில் சொல்ல முடியும்?
ஜெர்மன் நாட்டுக்காரன் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிறகுதான் வேதங்கள் புத்தக வடிவத்தில் வந்தன.
இந்த வேதங்கள் எதைப் பற்றிப் பேசுகின்றன? அதன் தோத்திரங்களில் காணப்படும் வசவுகள் எதிர்ப்புகள் எல்லாம்.
அசுரர்கள் என்றும், இராட்சகர்கள் என்றும், கருப்பர்கள் என்றும், சொல்லப்படுவது எல்லாம், வசைப் பாடுவது எல்லாம் யாரை?
இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதி இருப்பது எல்லாம் யாரை என்றால்திராவிடர்களைத்தான்.
ரிக் வேதம் பூராவும் இந்திரன் பெருங்குடிகாரன் சோமரசத்தில் மூழ்கிக் கிடந்தவன் என்று கூறப்பட்டுள்ளது. அவனிடம் கோரிக்கை வைக்கும் ஆரியர்கள் அவனுக்கு ஊற்றி ஊற்றிக் கொடுத்தார்கள் என்று பரவலாகக் கூறப்பட்டுள்ளது.
"அத்வர்யுக்களே! இந்திரனுக்காக அந்தசோமரசத்தைக் கொண்டு வாருங்கள். மூக்குக் குவளையில் அதை ஊற்றுங்கள். இந்திரனுக்கு அதைக் குடிக்கக் கொடுங்கள், அவன் அதை விரும்புவான்" என்கிறது ரிக் வேதம்.
எப்படி எப்படி எல்லாம் கோரிக்கைகள், இந்திரனிடம்?
"ஓ இந்திரனே! உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை களான பிராண வாயு, ஜலம், அன்னம் முதலியவைகள் ஆரியர் களாகிய எங்களுக்கு அமிர்தமாகவும், எங்களை யார் பகைக் கிறார்களோ அந்தஅனாரியர்களுக்கு விஷமாகவும் ஆகட்டும்! (யஜூர் 6,22)
எதிரிகளுக்கு ஜுரத்தைக் கொடு, இடியைப் போடு, மின்னலைப் போடு, எரி, சாம்பலாக்கு, நசுக்கு (தனியே காண்க).
ஆரியர்களால், திராவிடர்களைக் குறி வைத்து எதிர்த்துப் பாடப் பட்டவைதான் - வேதங்களில் நிறைந்து கிடக்கின்றன.
எதிரிக்கு ஜுரத்தைக் கொடு என்பது எல்லாம் எத்தகைய மனிதாபிமானமற்ற செயல்!
வேத காலத்தில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு இருந்த அந்தப் புத்தி இந்தக் காலத்திலும் சங்கரமடங்களில் இருக்கிறது.
நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று மூத்த சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் தொகுதி 3 பக்கம் 148). கூறவில்லையா?
இந்து மதமும், வேதங்களும், மனிதநேயத்துக்கும் சமத்துவத் துக்கும் எதிரானவை. இவற்றிற்கு எதிரானதுதான் நமது திராவிடத் தத்துவம் - நமது குறளின் தத்துவம்.
எதிரிக்கு ஜுரத்தைக் கொடு - நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்பது ஆரிய தத்துவம்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (குறள் 315)
என்ற குறள் தத்துவம்தான் நமது திராவிடத் தத்துவம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நமது திராவிடத் தத்துவம் - பிறவியிலேயே பேதம் விதைப்பது பார்ப்பது ஆரிய தத்துவம்.
சகிப்புத் தன்மை வாய்ந்தது இந்துமதம் என்று அமெரிக்காவில் போய் வேண்டுமானால் பிரசங்கம் செய்யலாம். தமக்கு எதிரானவர்களின் வீட்டுப் பெண்களைக் கற்பழிக்கக் கடவுளிடம் மனு போடுவதுதான் சகிப்புத் தன்மையா?
நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்பதுதான் சகிப்புத் தன்மையா?
மாற்று மதத்தினரான பவுத்தர்களையும் சமணர்களையும் எப்படியெல்லாம் திட்டமிட்டுக் கொன்று குவித்துள்ளார்கள்! அவர்களின் பள்ளிகளை சின்னங்களை எல்லாம் எப்படி யெல்லாம் அழித்து முடித்துள்ளனர்.
அனேக யாகங்களைச் செய்தவன் என்று போற்றப்படக் கூடிய புஷ்யமித்ரன் எனனும் அரசன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை (புத்தப் பிக்குகளின் அழகிய வனங்களில் நடுவே இருப்பதால் ஆரமம் என்று பெயர்) அழித்து ஆனந்தப்பட்டான். புத்த பிக்குகளைக் கொன்று குவித்தான்.
சுதன்வா என்னும் பெயருடைய அரசன் - சேது முதல் இமயமலை வரையில் உள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால் அக்கணமே அவனைக் கொன்று விடும்படி கட்டளையிட்டதாக 'சங்க விஜயம்' எனும் நூல் கூறுகிறது.
எண்ணாயிரம் சமணர்களை மதுரையில் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்று ஒழிக்கவில்லையா?
இப்பொழுது மட்டும் என்ன? இந்தியாவில் நடக்கும் மதவாத அரசியலில் என்னென்னவெல்லாம் நடக்கிறது?
செத்த பசு மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட தோழர்கள் அடித்துக் கொலை செய்யப்படவில்லையா?
குஜராத்தில் நடந்த குரூரக் கொலைகள் கொஞ்சமா நஞ்சமா?
இந்து ராஜ்ஜியம் என்பதும், ராமராஜ்ஜியம் என்பதும் மனித உரிமைக்கும், சமத்துவத்துக்கும் முற்றிலும் எதிரானதே!
இது போல ஏராளமான வரலாற்றுத் தகவல்களை வாரி வழங்கினார் கழகத் தலைவர்.
கழகத் தலைவரின் இந்தக் காணொலிகள் மாலை நேர வகுப்புகளாக அமைந்திருந்தன.
கரோனா காலத்தில் ஊரடங்கினாலும் கழகத்தில் பிரச்சாரப் பணிகள் இந்த வகையில் அறிவியல் துணையோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் கருத்து விருந்துகள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
'இந்து'வுக்குச் சான்றில்லை; திராவிடம் எங்கும் உண்டு!
இந்து என்ற சொல்லுக்கான சான்று வேதங்களிலோ, மனுஸ் மிருதியிலோ, கீதையிலோ எங்கும் இல்லை. ஆனால், அதற்கு எதிரான திராவிடம் என்ற அடையாளத்திற்கு மனுஸ்மிருதி, பாகவதத்திலிருந்து இந்தியாவின் தேசிய கீதம் வரை சான்றுள்ளது. நேற்றைய உரையின் முடிவில் கேள்வி - பதில் பகுதியில் தமிழர் தலைவர்.
சமஸ்கிருதம்பற்றி தந்தை பெரியார்
“சமஸ்கிருதம்” என்ற சொல்லின் பொருள், சுத்தப் படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப்பட்டது என்பதாகும்.
மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்து ஸ்தானியில் “சான்ஸ் கிரிட்" என்று உச்சரிக்கப்படு கிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்ட தன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.
வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.
சமஸ்த = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது - என்பதே இதன் பொருள். “என்சைக்ளோபீடியா பிரிட் டானிக்கா” என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.
“சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண் டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்” இவர் விளக்கி யுள்ளார்.
டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழியி லிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார்.
சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச்சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், “சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டியானா வட்டாரங்களில் தோன் றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டாரத்திலோ தோன்றியதல்ல” என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென்பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்க ளென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவுபடுகிறது.
இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற்றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெ டுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படை யெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேதகால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத்திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.
இணையத்தில் பரப்புங்கள்
பயிற்சி வகுப்பைப் போல நடைபெற்ற 'இந்துத்துவா' பற்றிய தொடர் ஆய்வுச் சொற்பொழிவில் ஸூம் (Zoom) காணொலி வாயிலாகப் பங்கேற்றவர்கள் தவிர, இந் நிகழ்வின் நேரலையை ஒளிபரப்பிய பெரியார் வலைக் காட்சியின் யு டியூப், ஃபேஸ் புக் பக்கங்கள் வாயிலாக மூன்று நாள்களிலும் 11,500-க்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் பங்கேற்றுப் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர்கள் இதனை இன்னும் பரப்பும் வகையில், facebook.com/periyartv, youtube.com/periyartv ஆகிய முகவரிகளில் காணொலிகளைக் கண்டு பரப்பிப் பயன்பெறலாம்.
மனிதனைக் கொன்றுகூட
ஆரியர்கள் நடத்திய யாகங்கள்
யஜுர் வேதம் தரும் தகவல்கள்:
- ஸௌத்ராமணி - கள், சாராயம் முதலிய குடிக்கும் யாகம். 2. சுராக்ரஹ மந்த்ரம் - கள், சாராயம் மயக்க வகைகளை அருந்துதற்குரிய மந்திரம். 3. அய்ந்த்ர பசு - இந்திரனுக்காக ஆட்டைக் கொல்லும் யாகம். 4. கோஸவம் - பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம். 5. அத்யுர்யாம - ஒருவகை யாக (கொலை)த்தின் பெயர். 6. வாயவீய ஸ்வேதபசு - வாயுதேவதைக்காக வெள்ளைப் பசு யாகம். 7. காம்யபசு - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்குரிய பசு யாகம். 8. வத்ஸோபகரணம் - கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம். 9. பௌர்ணமாஸேஷ்டி - பௌர்ணமாஸியன்று நடத்தும் யாகம். 10. நக்ஷத்ரேஷ்டி - நக்ஷத்திர தேவதைகளுக்குரிய யாகம். 11. புருஷயஜ்ஞ - மனிதனைக் கொன்று நடத்தும் யாகம். 12. வைஷ்ணவ பசு - விஷ்ணு தேவனுக்காக ஆட்டைக் கொன்று நடத்தும் யாகம். 13. அய்ந்த்ராக்ந பசு - இந்திரன் அக்கினி தேவர்களுக்காக ஆட்டைக் கொலை செய்யும் யாகம். 14. ஸாவித்ர - சூரிய தேவனுக்காக ஆட்டைக் கொல்லும் யாகம். 15. அஸ்வமேதம் - “அஸ்வ மேதம்” என்னும் குதிரையைக் கொல்லும் யாகம். 16. ரோஹிதாதி பஸ்வாலம் பனம் - சிவந்த நிறமுள்ள ஆடு முதலிய உயிர்களை வதைத்து நடத்தும் யாகம். 17. அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம். 18. சாதுர்மாஸ பசு - “சாதுர் மாஸம்” மழைக் காலத்தில் மாட்டைக் கொன்று நடத்தும் யாகம். 19. ஏகாதசீன பசுவிதானம் - பதினொன்று பசுக்களைக் கொல்லும் யாகம். 20. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்தல். 21. உபாகரண மந்த்ரம் - யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்ய மந்திரம். 22. கவ்ய பசுவிதானம் - பசு மாட்டைக் கொன்ற நடத்தும் யாகம். 23. ஸத்ரம் - “ஸத்ரம்” பல நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் யாகம். 24. ரிஷபாலம்பன விதானம் - எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி. 25. அஸ்வாலம்பன மந்த்ரம் - குதிரையைக் கொல்லும் மந்திரம். 26. அஸ்வ ஸம்ஜ்ஞ பனம் - குதிரையைக் கொல்லும் விதி. 27. அஸ்வ, மனுஷ்ய அஜ கோ பசுப்ர சமஸா - குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொல்ல விதி. 28. ஆதித்ய தேவ தாகபசு - ‘சூரிய தேவதைக்கு பசுயாகம்'. 29. ஸோம பசு - “சோம” தேவதைக்குரிய யாகம். 30. ப்ருஹஸ்பதி ஸவ: ‘பிருகஸ்பதி' தேவதைக்குரிய யாகம்.
No comments:
Post a Comment