கழக மகளிர் புரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

கழக மகளிர் புரட்சி!

தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா வேறு எந்த ஆண்டையும்விட வெகு சிறப்பாக எழுச்சியின் பிழம்பாக நடைபெற்றது என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியாகும்.


தமிழ்நாட்டில் மட்டுமல்ல - வடபுலத்திலும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்தப் பேரெழுச்சிக்குக் காரணம் உண்டு.


2500 ஆண்டுகளுக்குமுன் கவுதம புத்தரால் அடிபட்ட ஆரியத்தின் சனாதனப் பாம்புக்கு இப்பொழுது கோரைப் பற்களும் கொடுமையாகத் தாக்கும் இறக்கைகளும் கூர்மையான நகங்களும் முளைத்து விட்டன.


பாபர் மசூதியை இடித்து மதக் கலவரத்தை உண்டு பண்ணி சிறுபான்மை மக்களின் குருதியைக் குடித்து, குறிப்பாக வடமாநில மக்கள் மத்தியில் மதவாத மதம் பிடிக்க வைத்து மக்களின் வாக்குகளைப் பறித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் மீண்டும் ஆரியசனாதன ஆதிக்க நிலைப்பாட்டை நங்கூரம் பாய்ச்ச மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான நடவடிக்கைகள் பற்பல.


முக்கியமாக சமூகநீதியின் ஆணி வேரை அறுக்கும் ஏற்பாடு - அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற பெயரால் சனாதனத்தை கல்வியின்மூலம் திணிப்பது, மதச் சார்பின்மையின் கழுத்தை நெரித்து ராமராஜ் ஜியத்தை உண்டாக்குவது (கரோனா கால கட்டத்தில்கூட ஒரு பிரதமர் கலந்துகொண்டு ராமன் கோயில் கட்டட அடிக்கல் நாட்டி யதைக் கவனத்தில் கொள்க!)


சமூக நீதியையும் மதச் சார்பின்மையையும் ஒழித்துக் கட்டி னாலே போதுமானது. ஆரியப் பார்ப்பன மனுதர்ம சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கு. 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சார ஆய்வு என்ற போர்வையில் முழுக்க முழுக்க பார்ப்பனர்களையே கொண்ட குழுவை நிறுவி - இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரியக் கலாச்சாரமே என்று நிறுவி, இந்தியா ஒரே நாடு - ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையை சட்ட ரீதியாக நிறுவுவதற்கான பெரும் சூழ்ச்சி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.


சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து ஒரு பக்கம் என்றால், இந்து என்ற போர்வையிலும் பார்ப்பனர் தவிர்த்த பெரும்பான்மை மக் களான தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்ற இந்து தர்மக் கோட்பாட்டின்படி கல்வி நிலை யிலும் உரிமைகளிலும் நசுக்கப்பட்டு நிட்டூரமே மிச்சமாகும்.


ஏதோ தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல- இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள இந்துப் பெரும்பான்மை மக்களுக்கும் சிறு பான்மை மக்களுக்கும் இந்த பேராபத்துச் சுனாமி சுழன்று சுழன்று வீசப் போகிறது!


இந்த இந்துத்துவா தத்துவத்திற்கு - சனாதனத்திற்கு எதிர் நடவடிக்கைத் தத்துவம் மதவாத கரோனாவை வீழ்த்துவதற்கான மாமருந்து "பெரியார்தான்" என்ற நிலை உணரப்பட்டதால் தான், அந்தத் தத்துவமே தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை வீழ்த்தி யிருக்கிறது என்பதால் - இந்தத் தத்துவம் இந்தியத் துணைக் கண்டத் திற்கே தேவை என்ற தீர்மானத்தில், இந்தியா முழுவதும் உள்ள பெரும்பான்மையினரான பஞ்சம, சூத்திர மக்களும் சிறுபான்மை யினரும் தந்தை பெரியாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் நிலை இயல்பாகவே உருவாகி விட்டது.  அதிலும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலே இந்தக் காட்டுத் தீயாகப் பற்றிக் கொண்டது நன்னம்பிக்கை தரும் போக்காகும்.


வேறு எந்தஆண்டையும் விட பெரியாரின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரும் எழுச்சியாக உற்சாக கரை புரண்டு ஓடுவதன் இரகசியம் இதுதான்.


கரோனா கால கட்டத்தில், ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிறப்பிக் கப்பட்ட ஒரு சூழ்நிலையில் கழகத் தோழர்களின் செயல்பாடுகள் அபரீதமானவை. தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 என்ற சுவர் எழுத்து எங்கெங்கும் எங்கெங்கும் நீக்கமற ஒளி பாய்ச்சுவது - பொது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவிட்டதே.


கழகத்தின் பல்வேறு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்ற முறையில் அனேகமாக நாள்தோறும் நாள்தோறும் காணொலி நிகழ்ச்சிகள்  - நிகழ்ச்சிகள்.


87 வயதிலும் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சளைக்காமல் கருத்துகளை வாரி வழங்கிக் கொண்டுள்ளார்.


சில சிறப்பு நிகழ்ச்சிகளில், கட்சிகளைக் கடந்து சமூக நீதியாளர்கள் என்ற வகையில் மேனாள் நீதிபதிகள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று கழகம் நடத்தும் காணொலி நிகழ்ச்சிகளில் - திராவிடர் கழகம் அமைத்து கொடுக்கும் களத்தில்தான் தத்தம் கருத்துக்களைத் தங்குத் தடையின்றிச் சொல்ல முடியும் என்பதால் மடை திறந்த வெள்ளமென சற்றும் தயக்கமின்றி உணர்வோடு கூடிய கருத்துக்களையும் தகவல்களையும் ஊற்றிலிருந்து நீர் பீறிடுவது போல் வழங்குவது அசாதாரணமானது.


திராவிடர் கழக மகளிர் அணி மகளிர்ப் பாசறை இணைந்து நேற்று (18.9.2020)  மாலை நடத்திய தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம் எல்லாவற்றையும் முறியடித்து உயரத் தாண்டுதலில்  சாதனையோ சாதனை என்று படைத்தது அற்புதம்! அற்புதம்!!


பெரியார் பிஞ்சுகள் முதல் மூதாட்டி மண்ணச்சநல்லூர் அரங்க நாயகி அம்மையார் வரை தந்தை பெரியார் பிறந்த நாளினையொட்டி 142 பேர் பேசியது என்று சொல்லக் கூடாது - உணர்ச்சியின் பிரவாகமாக வெளிப்படுத்தியது- கழக வரலாற்றில் புதியதோர் படைப்பும் கல்வெட்டுமாகும்.


இப்படியொரு கருத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மகளிர் அணி, மகளிர்ப் பாசறை பொறுப்பாளர் களுக்கும், துணை நின்றவர்களுக்கும் மனந்திறந்த பாராட்டு மழை!


இந்நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய கழகத் தலைவர் அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் தம் பாராட்டுக் கிரீடத்தைச் சூட்டினார்.


கழகத் தலைவரின் நிறைவுரை எளிமையாகவும் ஆய்வு மணம் வீசும் தன்மையிலும் ஜொலித்தது. ஒலி, ஒளியை உமிழ்ந்தது


பெரியார் பிஞ்சுகளுக்கு வாழ்த்துக்கள், பெரியவர் களுக்குப் பாராட்டுக்கள்!!


இடியும், மின்னலுமாக மேலும் நம் பணி சிறக்கட்டும் - பாய்ந்து வரும் சனாதனத்தின் அஸ்திரங்களை நொறுக்கட்டும்! நொறுக் கட்டும்!!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


No comments:

Post a Comment