சிறப்புக் கேள்வி
கவிஞர் கண்மதியன்
மேனாள் ஆசிரியர்,
சென்னைத் துறைமுகம் இதழ்
கேள்வி: இன்றைய சூழலில் இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்?
பதில்: நன்றி கவிஞர் கண்மதியன் அவர்களே!
மானமும் அறிவும் மக்களுக்கு ஏற்படுத்துவதாக இலக்கியப் படைப்புகள் அமையவேண்டும். அரைத்த மாவையே அரைக்காமல், புதுமை - புதிய சிந்தனையாக்கம் மிளிர வேண்டும் - அவற்றில்!
கேள்வி: தந்தை பெரியார் கோவிலை மூடுங்கள் என்றார். கேட்கவில்லை. கரோனா வந்து மூடிவிட்டது. கற்சிலைகளைக்கும் முகமூடி; கோயில் கதவுகளுக்கும் பூட்டு. இப்போது கோவிலைத் திறந்தும் மக்கள் போகவில்லை, அஞ்சுகிறார்கள். சங்கிகள் என்ன செய்வார்கள்?
பதில்: “கடவுளை மற மனிதனை நினை' என்ற அய்யாவுடைய அறிவுமொழி அகிலத்தையே ஆள்கிறது!’என்பது இதன்மூலம் விளங்குகிறது.
கேள்வி: மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது சங்கிகளுக்கு சரியான சவுக்கடி அல்லவா? - சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: ஆம். உண்மைதான். ஆனால் அதற்கும் வெட்கமில்லாமல் உரிமை கொண்டாடுவார்கள்.
கேள்வி: தற்போதைய பொருளாதாரச் சூழலில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது தலைநகரம் அவசியம்தானா? - எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில்: பிரச்சினையைத் திசைதிருப்ப ‘சங்கீத ஆலாபனம்' அவ்வளவே - அதை நம்பி கருத்து தெரிவிக்கும் நம் தலைவர்கள் பற்றி நினைத்தால், சிரிப்புதான் வருகுதய்யா!
கேள்வி: 50 - 55 வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுநலன் கருதி பணி ஓய்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? - மல்லிகா, மாங்காடு.
பதில்: இது ஓர் ஆபத்தான - அரசியல் சட்ட அடிப்படை உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணிவெடி. இதைக் காரணம் காட்டி, பொய்யான குற்றச்சாற்று, மதிப்பீடுகளில், தங்களுக்கு வேண்டாத எவரையும், 'சுதந்திரமானவர்களையும்' அச்சுறுத்தப் பயன்படுத்தும் ஆபத்தான அணுகுமுறை. இதை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும். வெளியில் கட்சிகள் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அண்மையில் அய்.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் அவரகள் ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கேள்வி: நிகழாண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்து உள்ளனர். பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க மாற்றம் கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா? - மன்னை சித்து, மன்னார்குடி. 1
பதில்: அதை 'பல வடிகட்டல்கள்' - நுழைவுத் தேர்வுகள் மூலம் தடுப்பதுதானே நவீன குலக்கல்வித் திட்டமான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை. நம் குழந்தைகள், இதைத் தடை ஓட்டப்பந்தயம் போல தாண்டினால்தானே உண்மையான மறுமலர்ச்சி ஏற்படும்?
கேள்வி: பொய்க்கும் அய்தீகம் என்பதற்கும் என்ன வேறுபாடு?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
பதில்:பொய்-வெளிப்படையான சொல்;
அய்தீகம் - மறைமுகத் திணிப்பான பொய் - வழு எல்லாம்.
கேள்வி: நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற கேடுகளை ஒழித்திட. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது நிரந்தரத் தீர்வாக இருக்குமா?
- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: நிச்சயமாக - அதற்கு உரிய காலம் கனியவும் வேண்டும். மாநில உரிமைகளை மறந்த மாநிலங்களில் உண்மையான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்! - ஏற்படுத்தவும் வேண்டுமே!
கேள்வி: பிரதமர் மோடி பேசுகிற காணொலிகளுக்கு விருப்பக் குறிகளை விட, வெறுப்புக்குறிகளை (Dislikes) அதிகம் சொடுக்கி, தங்கள் எதிர்ப்பை இளைஞர்கள் பதிவு செய்து வருகிறார்களே... கவனித்தீர்களா?
- சி.முத்துவேல், நாங்குநேரி
பதில்: உண்மையை எவ்வளவு காலம் திரைபோட்டு 'ஒப்பனை'கள் மூலம் மறைக்க முடியும்? திரை விலகுகிற காலம் இது!
கேள்வி: உங்களுக்குப் பிடித்த, தொலைக்காட்சியில் விரும்பிப் பார்க்கும் விளையாட்டு எது? - முகிலா, குரோம்பேட்டை
பதில்: அதிகமாக தொலைக்காட்சியில் நேரம் செலவழிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது - அதிலும் 'விளையாட்டா?' புரியவேயில்லை.
அந்தப் 'போதை'க்கு நான் எப்போதும் அடிமை ஆனதில்லை.
கேள்வி: ஏகலைவன்களும், சம்பூகன்களுமே இப்போது விபீஷணர்களாகி வருகிறார்களே? - செல்வம், பஹ்ரைன்
பதில்: ஆரிய மாயைகளின் சூழ்ச்சித் தந்திரங்களில் இதுவும் ஒரு வியூகமே என்பது புரியட்டும்!
No comments:
Post a Comment