நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கைவிடப்படுவது ஜனநாயகத்திற்கு முரணானதே?
ஹமீத் அன்சாரி
(நாட்டு மக்களின் மன உணர்வுகளை அரசு உணர்வதற்கு உதவி செய்யும் கேள்வி நேரம் கைவிடப்படுவது ஜனநாயகக் கோட் பாட்டுக்கு முற்றும் எதி ரானது)
வாக்காளர்களால் கால முறைப்படி தேர்ந்தெடுக் கப்படும் ஒரு சட்டமன்றத்தின் மூலம் பொறுப்பேற்று மக்களுக்கு நிர்வாகம் பதில் கூறக் கடமைப்பட்டுள்ள ஒரு நாடாளுமன்ற வடிவிலான அரசை நமது ஜனநாயகம் நிர்ணயித்துள்ள ஓர் அரசமைப்பு சட்டம் இந்திய மக்களாகிய நாம் நமக்காக அளித்துக் கொண் டதாகும். இவ்வாறு பொறுப்பேற்று பதில் கூறுவது என்பது ஜனநாயக அரசின் இதயமாக இருப்பதாகும். சட்டம் இயற்றுதல், தேச நிதி ஆதாரங்களைக் கட்டுப் படுத்துவது, வரி விதிப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பொது மக்களுக்கு ஆர்வமும் கவலையும் தரும் விவகாரங்களைப் பற்றி விவாதிப்பது உள்ளிட்ட சட்டமன்றத்தின் செயல்பாடுகள் அவற்றுக்கான நடைமுறைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படு கின்றன. இத்தகைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும், அன்றாடமோ அல்லது காலமுறைப்படியோ சட்ட மன்றங்கள் கூடும் நாட்களில் மேற்கொள்ளப்படுகின் றன. கேள்வி கேட்பது, ஒத்தி வைப்புத் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், அரைமணி நேர விவாதம், நம்பிக்கைத் தீர்மானம் மற்றும் அவை உரிமைகள் பற்றிய கேள்விகள் என்ற அனைத்தும் இச்செயல் பாடுகளில் அடங்கும்.
பொறுப்பேற்று பதில் கூறக் கடமைப்பட்டுள்ள கருவிகள்
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம அளவில் வாய்ப்பு அளிக்கப்படும், தொடர்ந்து செயல்படுத்தப்படும் ஈடு இணையற்ற தன்மையினால், பொறுப்பேற்று அரசு பதில் கூறவேண்டிய கடமைப் பட்டுள்ள இத்தகைய கருவிகளில் அன்றாட கேள்வி நேரம் ஒரு மிகமிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அரசின் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுச் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சமும் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் விவாதிக்கப்படு வதால், கேள்வி நேரம் என்பது ஒரு சிறப்பான முக் கியத்துவத்தைப் பெற்றிருப்பதாகும். பொதுமக்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும், ஆளுங்கட்சி தனது தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியதொரு கண் ணோட்டத்தைப் பொதுமக்களுக்கு அளிப்பதற்கும் அப்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு அது உதவி செய்கிறது. இத்தகைய கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்கு தடுமாறும் அமைச்சர்களை மிகமிக அரிதாகவே மறந்துவிடுகின்றனர்.
இரு அவைகளின் செயல்பாட்டு நடைமுறை விதிகள் செயல்பாட்டு விவரங்களை நிர்ணயிக்கின் றன. நோட்டீஸ் அளிக்கும் காலம், அனுமதிக்கப்படுவ தற்கான நிபந்தனைகள், வாக்களித்தல் மற்றும் எண் ணற்ற இதர நடைமுறை அல்லது கட்டுப்பாட்டு விதிகள் இவற்றில் அடங்கும். அரசின் ஒரு குறிப்பிட்ட அமைச்சரிடம் கேள்விகள் கேட்டு, நட்சத்திரக் குறி இடப்படாத கேள்விக்கு வாய்மொழியிலான பதி லையோ அல்லது குறியிடப்பட்ட கேள்விக்கு எழுத்து வடிவிலான பதிலையோ அமைச்சரிடமிருந்து கேட்டுப் பெறலாம். இவ்வாறு அளிக்கப்படும் பதில்க ளின் உண்மைத் தன்மை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அமைச்சரால் அளிக்கப்படும் பதில்களில் உள்ள தவறுகளை சரி செய்வதற்கு அவ ருக்கு விதிகள் அனுமதி அளிக்கின்றன. அன்றாட அவை நடவடிக்கைகள் துவங்கப்படுவதற்கு முன்பு கேள்விகளுக்கான பதில்கள் நோட்டீஸ் அலுவலகத் தில் இருந்தோ அல்லது கணினி இணையதளங்களில் இருந்தோ உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட விவரங்களைக்
கேட்டுப் பெறுதல்
கேள்விகள் பொதுவாகவே குறிப்பாகவும், சுட்டிக் காட்டுவனவாகவும், ஒரு பிரச்சினையுடன் மட்டுமே தொடர்புடையது என்ற அளவில் வரையறை செய்யப்பட்டவைகளுமாகும். அரசிடமிருந்து குறிப்பிட்ட தகவல்களைக் கேட்டுப் பெறுவதே இவற்றின் நோக்கம். கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களே ஆழ்ந்த அகண்ட விவாதங்களுக்கும், விசாரணைகளுக்கும், நிர்வாக ஊழல்களுக்கும் கூட வழி வகுத்த பல நிகழ்ச்சிகளை நமது நாடாளுமன்ற வரலாறு பதிவு செய்துள்ளது. அப்படி இல்லா விட்டாலும், இவ்வாறு வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் கொண்டுள்ள அல்லது கவலை கொண்டுள்ள விவகாரங்கள் பற்றிய விவா தங்களை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானது. இதில் அரசுக்கு உள்ள அனுகூலம், அந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை அதிகார பூர்வமாக விளக்க முடி கிறது என்பதுதான். அதே நியாயப்படி, முழுமையற்ற அரைகுறையான அல்லது மனநிறைவளிக்காத பதில் கள் மேலே குறிப்பிட்ட இதர வடிவங்களிலான பொறுப் பேற்று பதில் கூறுவதற்கு அரசைத் தூண்டுவனவாக அமையும்.
இந்தக் காரணத்துக்காகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆர்வம் கொண்டுள்ள பொது மக்களும் நாடாளுமன்றக் கேள்வி பதில் பகுதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்த நிலை யில் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது என்று நாடாளுமன்ற செய்தி இதழ் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு, உறுப்பினர்களும் மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கோவிட்-19 நோய்த் தொற்றே இதற் கான காரணமாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் காரணமாகக் கூறப்பட்டுள்ளது மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருக்கிறது.
கோவிட்-19 தொற்று நோய் பரவலின் விளைவாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் தீவிரத்தை உலகெங்கும் உள்ள நாடுகளின் ஒவ்வொரு குடிமகனும் அனுபவித் துக் கொண்டு வருகின்றனர். புதிய பாடங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. உயிர் பிழைத்திருப்ப தற்கான புதிய நிபந்தனைகளையும் வழிகளையும் நாம் நிறைவேற்றி பின்பற்றி வருகிறோம். முழுமை யான அல்லது பகுதி ஊரடங்கில் வாழ்வதற்கு நாம் கற்றுக் கொண்டோம். எந்தவிதமான செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்த நாம் இப்போது முக்கியமான செயல்பாடுகளை மறுபடியும் பகுதி பகுதியாக செய்யத் தொடங்கி இருக்கிறோம். சமூக இடைவெளி பேணுதல், முக கவசம் அணிதல் போன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்முள் ஆழப் பதிந்து விட்டன. அருகில் அல்லது தூரத்தில் இருக் கும் நாடுகள், அவர்களின் தனிப்பட்ட தடுப்பு நட வடிக்கைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ற புதிய அளவுகோலின் அடிப்படையில் சில நாடுகளின் சட்டமன்றங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளன. தாமதமாகவேனும் நமது சட்டமன்றங்களில் சில அவையைக் கூட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து இப்போது நாடாளு மன்றமும் கூட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை வரவேற்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில், அறிவிக்கப்பட்ட நாடாளு மன்ற செயல்திட்டத்தில் இருந்து கேள்வி நேரம் நீக்கப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், அதிர்ச்சி யையும் அளிப்பதாக இருக்கிறது.அரசைக் கேள்வி கேட்பதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ள உரிமையை இது மறுக்கிறது அல்லது குறைக்கிறது என்றே பார்க்கப்படுகிறது. நட்சத்திரக் குறியிடப்படாத கேள் விகள் பெறப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் மற்றும் அவற்றில் இருந்து பிறக்கும், வாய்மொழியாக பதில் தெரிவிக்கப்படும் துணைக் கேள்விகள் பொருத்த மட்டுமே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என் றும் பின்னர் அளிக்கப்பட்ட அரசின் விளக்கங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற வாய்ப்புகளைத் தேடிப் பார்ப்பது
நட்சத்திரக் குறியிட்ட கேள்வியின் நோக்கமே, அளிக்கப்படும் பதிலில், கேள்விக்கு உள்ளான அர சின் முடிவில் ஏற்பட்ட நடைமுறைத் தவறு அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்பாட்டை மறைப்பதற் கான சொற்கள், விவரங்களை அரசு பயன்படுத்து வதை வெளிக் கொண்டு வருவதே ஆகும். வாய் மொழியான துணைக் கேள்விகள் இவற்றை வெளிக் கொண்டு வருவதற்காக கேட்கப்படுபவையாகும். அன்றாட வாழ்க்கையில் அறிமுகம் இல்லாத ஒரு வார்த்தை விளையாட்டு இது. நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடாளுமன்ற மற்றும் பொதுமக்களின் அதிகப்படியான உணர்ச்சி வெளிப்படுத்தப்பட இயலும். நட்சத்திரக் குறியிட்ட கேள்வியின் முழு வடிவத்தை இல்லாவிட்டாலும், அதன் சாரத்தையாவது இது தக்க வைத்துக் கொள் ளும். நட்சத்திரக் குறியிட்ட கேள்வியை அனுமதிப் பதற்கான ஒரு வழி, அதற்கான பதிலை முன்னி லைகளின் ஒரு தொகுப்பில் பொருத்தி, கேட்க அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை கொண்ட தொடர் கேள்விகளை எழுத்து வடிவத்தில் அடுத்த நாள் காலையில்அவையில் சமர்பிப்பதற்கு அவை உறுப் பினரை அனுமதிப்பதாகும்.
இத்தகைய மாற்று வழிகள் தேடிக் காணப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர் களுடன் விவாதிக்கப்பட்டனவா? அவரவர் அவை களில் நடைமுறை பற்றிய விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. பொது மக்களின் நலன்கள் சார்ந்த விவகாரங்களில் ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்வதற் காக ஒரு தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்ள இயலும்; அவ்வாறு சில நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டுமுள்ளது. இறுதியாக, எதிர்க்கட்சி களின் கவலை தேவையற்றவை, போலியானவை என்று ஆளுங் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அசாதாரணமான நேரங்களில் அசாதாரணமான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது நியாயமானதே என்று கூறி, விவரிப்பதால் என்ன பொதுநல நோக்கு நிறைவேறி விடப்போகிறது?
நன்கு செயல்படும் ஒரு ஜனநாயகத்துக்கான சோதனை சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல் களை எதர்கொள்ளும் ஆற்றலும், ஜனநாயக அமைப்புகளின் தவறுகளை சரி செய்து கொள்ளும் அதன் ஆற்றலுமே ஆகும். தவிர்க்கும் அரசியல் என்று அழைக்கப்படுவதை சார்ந்து இருப்பது அல்லது கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு எந்த விதத்திலும் உதவாது. தங்களது செயல்களுக்குப் பொறுப்பு ஏற்று பதில் அளிக்க வேண்டிய நிர்வாக அமைப்பின் கடமை கடந்த கால நினைவாக மாறிவிடுவதற்கு அனுமதிக்க இயலாது.
நன்றி: 'தி இந்து', 04.09.2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment