கலாச்சார ஆய்வு நடத்துவதன் நோக்கம் என்ன?
12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரத்தைக் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில் பெரும்பாலோர் பார்ப்பனர் ஆவர், அகிலஉலகப் பிராமணர் சங்கத் தலைவரும் அதில் ஒருவராம்! பெரும்பாலும் சமஸ்கிருதப் பண்டிதர்கள்.
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று பல வெளிநாட்டு நிபுணர்கள்கூட ஆய்வு செய்து உறுதிப்படுத்திய நிலையில், அதை ஆரிய நாகரிகம் என்று காட்டிட, வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது - அன்றைய மனிதவளத்துறை அமைச்சர் (கல்வி அமைச்சர்) முரளி மனோகர் ஜோஷி முயற்சிக்கவில்லையா? திராவிடர்களின் காளையை குதிரையாக கிராபிக்மூலம் காட்டவில்லையா?
இந்த நிலையில் இப்படியொரு ஆய்வுக்கு அவசியம் என்ன - அதன் நோக்கமும்தான் என்ன?
பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் இத்திசையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டது உண்டா?
அய்.சி.எச்.ஆர் (ICHR - Indian Council of Historical research) எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக மோடி பதவியேற்றவுடன் சுதர்சன் ராவ் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் நியமிக்கப்பட்டார். இவரைப் பற்றி அதுவரை எந்த வரலாற்றுப் பேராசிரியரும் கேள்விப்பட்டதே இல்லை. அவர் எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டதும் இல்லை என்று பேராசிரியர் ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். இந்த சுதர்சன் ராவ் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், 'மேற்கத்திய ஆய்வாளர்கள் வரலாற்றாய்வில் சான்றாதாரங்களை முதன்மையாக வைத்தே முடிவுக்கு வருகிறார்கள்.
இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும் கலாச்சாரமும் கொண்ட பகுதியில் வாய்வழிக் கதைகளைவும், தகவல்களையும் சான்றுகளாக கொள்வது தவிர்க்க இயலாதது, சனாதன வருணாசிரம தருமங்கள் இந்திய சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டியது, அவரவர் கடமையை அவரவர் செய்வதே வருணாசிரம தருமமாகும், இது மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவில் இருந்து வருகிறது? என்று இந்துத்துவத்தையும் சாதியவாதத்தையும் உயர்த்திப் பிடிக்கிற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்தான் இன் றைக்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (அய்.சி.எச்.ஆர்) தலைவராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.
2015-ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சமஸ்கிருதத் துறை பேராசிரியர்களைக் கொண்ட சமஸ்கிருதத் தின் வழி வேத அறிவியல் என்ற அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வில் வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் (வைமானிக சாஸ்திரம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குவாண்டம் இயற்பியல், அணு இயற்பியல் நம்மிடையே இருந்தது.
அதை அறிந்து கொள்ள நாம் அனைவரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிவியல் அனைத்தும் இசுலாமிய படையெடுப்பினாலும், காலனி ஆட்சியாளர்களாலும் அழிக்கப்பட்டது என்று சொன்னார்கள். அறிவியலுக்கு முரணான தவறான கோட்பாடுகளை (றிsமீuபீஷீ ஷிநீவீமீஸீநீமீ) உண்மையான அறிவியல் என்று நம்மிடையே பரப்புவதற்கான நச்சு விதையைத் தூவி விட்டுச் சென்றார்கள்
1) ஸ்டெம் செல் கண்டுபிடித்தது அமெரிக்கர்கள் அல்ல. மகாபாரதத்தில் காந்தாரிக்குக் குழந்தை பிறக்காமல் இருந்த போது, வசிஷ்டர் நூறு கவுரவர்களை ஸ்டெம் செல் முறை கொண்டு தான் உருவாக்கினார்.
2) தொலைக்காட்சி - யோக வித்யா யோகக் கலை, விதய திருஷ்டி, ஞானக் கண் போன்ற முறைகள் நம்மிடையே இருந்தது. அதில்தான் பாரதப் போரை அஸ்தினாபுரம் அரண்மனையில் அமர்ந்து சஞ்ஜையா என்ற ஒருவன் மூலம் கண் தெரியாத திருதிராட்டிரன் அறிந்து கொண்டார். ஆகவே, தொலைக்காட்சி என்பது நம்மிடையே முன்னரே இருந்தது.
3) அனஸ்வரத் என்ற பெயரில் இயந்திர மோட்டார்கள் நம்மிடையே இருந்தது.
4) புஷ்பக விமானம் என்று முன்னரே நாம் விமானங்களை இயக்கியிருக்கிறோம்.
5) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விநாயகருக்கு நாம் முன்னரே செய்திருக்கிறோம் (இதை பிரதமர் நரேந்திர மோடி அவர்களே 25.10.2014 அன்று மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனை ஆராய்ச்சி மய்யத்தை திறந்து வைத்து, நாட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்) - இவையெல்லாம் குஜராத்தின் பாடத் திட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் - பிஜேபி அரசுக்கு முக்கியமாக மத்திய அரசுக்கு இது வெகுவாகவே பொருந்துமே!
No comments:
Post a Comment