உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், செர்மானிய விமானங்கள் லண்டன் மாநகர் மீது குண்டுமழை பொழிந்த போது வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசி னார்: ‘நான் உங்களிடம் தெளிவாகச் சொல்கிறேன், நம்மை எவராலும் தோற்கடிக்க முடியாது; எத்தகைய, இடர்ப்பாடாயினும் லண்டன் அதனை முறியடித்து வெற்றி பெறும்' ('But I am sure of one thing that London will never be conquered; London could take it').
ஊர் அடங்கி உலகம் முடங்கிக் கிடக்கிறது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி நிலை யங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. செய்தித் தாள்கள் இல்லை; போக்குவரத்து இல்லை; எல்லாம் ஒரு தொற்று நோயால் நிலை குலைந்து போய்விட்டன. மக்கள் வாழ்க்கையை அந்த நோய் முடக்கிப் போட்டுவிட்டது. எதுவுமே இயங்கா நிலையை அடைந்து விட்ட நேரத்தில், திராவிடர் கழகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘விடுதலை‘ ஏடு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது. திராவிடர் கழகத்தின் தலைவரும், துணைத் தலைவரும், முன்னணியினரும் நாள்தோறும் மக் களிடம் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘பெரியார் பிறந்த நாள் மலர்‘ வழக்கம் போலப் பல வண்ணங்களில் பளபளப்பாக நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த் துப் பலர் மூக்கின் மேல் விரலை வைத்து ‘இது வெல்லாம் இக்கட்டான இந்த நேரத்தில் எப்படி உங்களால் சாத்தியமாகிறது‘ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் அளிக்கும் பதில் இதுதான்:
"மற்றவர்களால் முடியாதது எங்களால் மட்டுமே முடியும்; எங்களால் முடியாதது வேறு எவராலும் முடியாது".
சர்ச்சில் குறிப்பிட்டதைப் போல, ‘நாம் எதனை யும் எதிர் கொண்டு கடந்து செல்வோம்'. ‘Dk could take it!'
பார்ப்பனர் கொண்டுவரும் கல்வித் திட்டம் எதுவாக இருந்தாலும் அது நம் இனத்திற்கு எதிரா னது என்பதை 1954ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
"எங்கள் இனத்துக்கு, திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடி குண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம்... திராவிட மக்கள் இன் னும் இந்தக் கொடுமைகளையும், அக்கிரமத்தையும் நிச்சயமாகச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப்பதும் தவறான காரியம்; தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்றே சொல்லுவேன்."
தந்தை பெரியாரின் இக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். மலரின் மணி முடியாக இது அமைந்துள்ளது. பார்ப்பனர் கொண்டுவரும் கல்வித் திட்டம் எதுவாயினும் அது நம் இனத்திற்கு எதிரான தாகவே இருக்கும் என்பதை 1954ஆம் ஆண்டி லேயே தந்தை பெரியார் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு கூறியுள்ளார்! "இந்தக் கல்வித் திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இன்று நாங்கள் எதிர்க்கவில்லை; இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட்ட மாகக் கருதியே நாங்கள் எதிர்க்கிறோம்!" இன்றும் அதுதானே உண்மை!
இன்று நமது நாட்டில் நாணயம், ஒழுக்கம், யோக்கியத் தன்மை - இவை இல்லாமற் போன மைக்கு என்ன காரணம்? "நமது நாட்டில் உள்ள சூழ்நிலை, சுற்றுச் சார்பு, நமது சமுதாயம், நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவை பற்றிய புராணங்கள், இதிகாசங்கள், மகான்கள், மகாத்மாக்கள் இன்று இருந்து வரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலியவைகள்தாம்" என்கிறார் பெரியார். ஆகவே எனக்கு மேற்பட்ட தொண்டன் யாரு மில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தியாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள அறிக்கை யில் தமிழகத்தின் வரலாற்றையே வடித்துத் தந்து உள்ளார். எடுத்த எடுப்பிலேயே புரட்சிக் கவிஞரின் கவிதை மின்னுகிறது. ஆயிரம் ஆண்டுகளில் கிடைத்தற்கரிய, எளிதில் காணக் கிடைக்காத அறி வும் அழகும் தான் தந்தை பெரியார் என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.
‘ஆரியக் கொடுமையை அடியோடு புரட்டிப் போட வந்த ‘சுனாமி' போல, ஒரு கருத்துப் புரட்சியை - வைதீகக் கோட்டையில் பூகம்பத்தை ஏற்படுத்தியது ‘குடிஅரசு' என்று குடி அரசின் சாதனையைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். அக்காலத்தில் ‘குடிஅரசு' என்று தமிழ்ப் பெயர் தாங்கி, ஒரு மாபெரும் கருத்துப் புரட்சியை உண்டாக்கிய இதழ் வேறு எதுவும் இல்லை!
பெண்கள் மாநாடு கூட்டிப் ‘பெரியார்' என்று பட்டமளித்தது முதற்கொண்டு, செய்யாறு - வாழ் குடைத் திருமணத்தில் அய்ந்தரை மணி நேரமும், மயிலாடுதுறைப் பொதுக் கூட்டத்தில் நான்கரை மணி நேரமும், பெரியார் பேசியது, சேரன்மாதேவிக் குருகுலப் போராட்டம் தொடங்கிப் பெரியார் நடத்திய போராட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட முதல் திருத்தம், கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருந்ததியர்க்கான உள்ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைச் சட்டம் என்று தமிழகத்தின் தற்கால வரலாற்றையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.
அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி நாடு முழுவதும் இயக்கம் நடத்துவது, ‘தேசியக் கல்வித் திட்டம்' என்ற பெயரில் கொண்டு வரப்படும் “குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தல், சமஸ்கிருதத் திணிப்பை முறியடித்தல், கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்" என்று நம் முன்னே உள்ள களப்பணிகளை ஆசிரியர் அடுக்குகிறார். மக்கள் பல்கலைக் கழக மாம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘திராவிடப் பொழில்' எனும் ஆய்விதழ் வெளிவரும் என்ற அறிவிப்பு, ஆராய்ச்சியாளர்க ளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும்.
- தொடரும்
No comments:
Post a Comment