வாயைக் கொடுப்பானேன்?
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடரும்; சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்: - பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மேனாள் இணையமைச்சர்.
''வாயைக் கொடுப்பானேன் - வாங்கிக் கட்டிக் கொள்வானேன்'' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. பா.ஜ.க. தேசிய கட்சி என்பது எல்லாம் தந்தை பெரியார் பிறந்த - திராவிட இயக்கம் செழித்த தமிழ்நாட்டில் எடுபடவே எடுபடாது.
ராமராஜ்ஜியம்!
தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை இந்தியர்களில் பலர் மனிதர்களாகவே கருதுவதில்லை: - ராகுல் காந்தி எம்.பி.,
''அரசன் எவ்வழி அவ்வழி குடிமக்கள்!'' ராமராஜ்ஜியம் என்றால், சம்பூகன் வதம்தானே - இந்து ராஜ்ஜியம் என்றால் - இந்துக்கள் மட்டும்தானே. மற்றவர்கள் குடிமக்கள் உரிமையும் இன்றி வாழ முன்வரவேண்டும் என்பதானே கோல்வால்கர் சித்தாந்தம்.
பணக்கார நோய்?
கரோனா - பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் சி.டி. ஸ்கேன் எடுப்பது நல்லது: - மருத்துவர்கள் வலியுறுத்தல்.
கரோனா தொற்று என்பது பணக்காரர்களுக்கு வரும் வியாதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது ஏன் என்று இப்பொழுது புரிகிறதா?
பரிசோதனையில் சரியாக நெகட்டிவ் என்று வந்தாலும் சி.டி. ஸ்கேன் எடுக்கவேண்டும் என்றால், அந்தப் பரிசோதனையைப்பற்றிப் பரிசோதனை செய்ய வேண்டியதுதான்!
கடவுள்களிலும் ஜாதியா?
புரட்டாசி சனிக்கிழமை இந்த வார வெள்ளியோடு முடிவு அடைவதால், வரும் ஞாயிறன்று காசிமேட்டில் மீன்கள் வாங்க அதிகம் கூட்டம் வரும் - கடந்த ஞாயிறு அன்றே கூட்டம் அலைமோதியது.
நல்ல தமாஷ்! புரட்டாசி சனி முடிவதற்கு முன்பே எப்படி மீன் கடைகளில் கூட்டம் கூடியதாம்?
கடவுளை ஏமாற்றுகிறார்களா அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?
ஓ, கடவுள்களிலும் ஜாதி உண்டே! மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலையானுக்கும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும் கிலோ கணக்கில் தங்கப் பூணூல் அணிவித்தாரே - மறந்தே போச்சு!
பொருளாதார வேகம் 130 கி.மீ.
130 கி.மீ. வேகத்தில் செல்லும் இரயில்களில் உள்ள பெட்டிகள் அனைத்தும் ஏ.சி. மயமாக்கப்படும்: - இரயில்வே அமைச்சர்.
ஆமாம், பொருளாதாரத்தின் வேகம் 130 கி.மீ. வேகத்தில் செல்லுகிறது. இதில் ஏழைகள் குறுக்கே வந்தால் அடிபட வேண்டியதுதான்.
ஜனாதிபதி என்றால் தனிக் கரோனாவோ!
அமரிக்க ஜனாதிபதி டிரம்பால் கரோனா பரவும் அபாயம் இல்லை: - வெள்ளை மாளிகை அறிக்கை.
ஜனாதிபதியா கொக்கா? பிறரைத் தொற்றாத 'ஸ்பெஷல் கரோனா' டிரம்பைத் தொற்றி 'சிறப்பு விருது' பெறுகிறதோ!
No comments:
Post a Comment