ஒரு மாதத்துக்கு முன் (செப்டம்பர் 25, 26) அய்ரோப்பிய பெரியாரிய - அம்பேத்கரிய தோழர்கள் கூட்டமைப்பின் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மனுதர்மம் பற்றி தெரிவித்த கருத்துகளை மய்யப்படுத்தி பாரதீய ஜனதா கட்சி - சங்பரிவார்கள் - பார்ப்பனர்கள் ஒன்று கூடி 'விட்டேனா பார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை!' என்று எகிறிக் குதிக்கிறார்கள்.
பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தில் வருணாசிரமத்தின் மூல ஊற்றான ஹிந்து மதம் - அதன் ஆரிய வேர்களான சுருதிகள் - ஸ்மிருதிகள் பற்றிப் பேசாமல் "வத்தல் குழம்பு வைப்பது எப்படி" என்றா செய் முறையுடன் விளக்கவுரை ஆற்றுவார்கள்?
"பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி கிடையாது" என்று எல்லோருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். இந்த விடயத்திலும் அவர்கள் இப்படியே தான் நடந்து கொண்டுள்ளனர்.
மனுதர்மத்தைப்பற்றி மூன்று நாட்கள் பரப்புரை செய்யப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். 'சபாஷ்!' - இது சரியானதோர் நடவடிக்கையே, தந்தை பெரியார் அவர்களின் வழமையான அணுகுமுறையே!
ஒரு போராட்டம் நடத்துவதாக இருந்தால்கூட அதுகுறித்து மக்கள் மத்தியில் நல்ல வண்ணம் பிரச்சாரப் பெரு மழையைப் பெய்து, மக்களைப் பக்குவப்படுத்திய பிறகே சம்பந்தப்பட்ட போராட்டத்தை நடத்துவார்கள்.
பொதுக் கூட்டங்களில் தனது சொற்பொழிவைத் தொடங்குகையில் முதற்கட்டமாக பக்கத்தில் நூல்களை அடுக்கி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நூலாக எடுத்து, அந்நூலில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறுவார்கள். அப்படி எல்லாம் பிரச்சாரம் செய்ததால்தான் தமிழ்நாட்டில் - இந்தப் பார்ப்பன ஜனதா கட்சியான பா.ஜ.க. - சங்பரிவார்களின் மதவாத சரக்குகள் எல்லாம் போனியாகவில்லை "கடை விரித்தோம் கொள்வாரில்லை, கட்டிக் கொண்டோம் - நடையைக் கட்டினோம்" என்ற ஒரு நிலை உறுதி செய்யப்பட்டு விட்டது.
காணொலியில் தோழர் திருமாவளவன் மனுதர்மம் பற்றிப் பேசியதோடு நின்று இருக்கும்; ஒரு மாதம் கழித்து, அதனைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பதை - பகுத்தறிவுக் கண்ணோட்டத்திலும், நாட்டைப் பீடித்த பெரு நோயான சனாதன வழக்குகளையும், மனுதர்ம சாஸ்திரம் போன்ற பிறப்பில் பேதம் பேசும் குப்பைகளையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை பரிதாபத்துக்குரிய பார்ப்பனர்கள் முன் யோசனை சிறிதுமின்றித் தொடங்கிக் கொடுத்துவிட்டனர்.
1) அசல் மனுதர்ம சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) ஒருகால் புள்ளி, அரைப்புள்ளி வேறுபாடு இன்றி அப்படியே ஸ்கேன் செய்து திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ளது.
404 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மலிவுப் பதிப்பாக ரூபாய் 120க்குக் கிடைக்கும்.
2) "மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்னும் சிறிய நூல் - மனுதர்ம சாஸ்திரத்தின் விஷத்தைப் பிழிந்தெடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் கையடக்க நூல் ரூபாய் 12க்குக் கிடைக்கும். தந்தை பெரியார் காலமுதல் எண்ணற்ற பதிப்புகள் வெளியாகி இலட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.
3) "பொசுங்கட்டும் மனுதர்மம்" என்னும் 16 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல். ரூபாய் பத்து மட்டுமே.
மனுதர்மம் மட்டுமல்ல; பெண்களை இழிவுபடுத்தும் ஹிந்து மத நூல்களின் சுலோகங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளன.
இந்நூல்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமல்ல; ஜாதி - வருணம் - பெண்ணடிமை இவற்றின் மூலத்தை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்று கருதுகிற முற்போக்குச் சக்திகள் அனைத்தும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவது காலத்தின் கட்டாயமாகும்.
மனு - தர்மம் - சாஸ்திரம் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே அது ஏதோ புனிதத் தன்மை வாய்ந்தது - உயர்ந்தது என்ற எண்ணத்தை - மயக்கத்தை உண்டாக்குவது போல் தோற்றமளிக்கும்.
.உள்ளே நுழைந்து பார்த்தால்தான் பார்ப்பனப் பயங்கரவாதத்தின் விஷ ஊற்று என்பது புலப்பட்டு விடும்.
"அசல் மனுதர்ம சாஸ்திரம்" எனும் நூலின் முன்னுரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதிய முன்னுரை அவசியம் படிக்கத் தகுந்தது.
"ஆய்வாளர் ஜெய்ஸ்வால் என்ன கூறுகிறார்?
"மதச்சார்பற்ற சட்டங்களை விரட்டி, அந்த இடத்தினை மனுதர்ம சட்டம் பிடித்துக் கொண்டது"
லோக மான்ய பாலகங்காதர திலகர் என்று உச்சியில் பூசூட்டிக் கூத்தாடுகிறார்களே பார்ப்பனர்கள் - அந்தப் பார்ப்பனர் என்ன கூறுகிறார்?
"சுய ராஜ்யம் வந்தால் மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாகும்" என்கிறார்.
1994இல் மகாராட்டிர அரசு வெளியிட்ட "சத்ரபதி சாகு - சமூக ஜனநாயகத்தின் தூண்" (Chatrapathi Sahu - The Pillar of Social Democracy) எனும் நூலில் காணப்படும் ஒரு முக்கிய தகவல்.
"நமது சட்டம் மனுஸ்மிருதி தான்" என்று கூறிய திலகர் "கற்றறிந்தவர்கள் மற்றும் பிராமணர்களின் உதவியுடன் அரசர் ஆட்சி நடத்த வேண்டும்" என்று மனுஸ்மிருதி சட்டம் இருப்பதை மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்."
இதுபோன்ற தெரிந்து கொள்ள வேண்டிய - வெளிப்படுத்தப்பட வேண்டிய - ஆரியத்தின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தப்பட வேண்டிய தகவல்களை இந்நூலின் முன்னுரையில் திராவிடர் கழகத் தலைவர் அள்ளிக் கொடுத்துள்ளார்.
இதுதான் சரியான தருணம், இந்நூல்களைப் பரப்பி 'நூல்களின்' ஆதிக்க நச்சுவேர்களை வீழ்த்துவீர்!.
No comments:
Post a Comment