பெரியார் அண்ணா, கலைஞர் இன்னும் இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

பெரியார் அண்ணா, கலைஞர் இன்னும் இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறார்கள்


வழக்கம் போல தர்ப்பைப்புல்லால் தலையங்கம் தீட்டியிருக்கிறார் ஆரிய மணி ஆசிரியரான வைத்தியநாதன். ஏதா வது ஒருசெய்தி கிடைத்தால் போதும் அதன்மூலமாக சுற்றி வளைத்து தி.மு.க. வையும் கலைஞரையும் அவதூறு செய் வது வைத்தியின் வாடிக்கை.அது அவர் களின் ரத்தமாதிரி என்பதால் சுத்திகரிப்பு என்பது சாத்தியமில்லாதது.


ஆனால் இதனை விஜயபாரதம்' இதழில் எழுதினால் கவலை கொள்ளத் தேவையில்லை. துடைத்துப்போடலாம். ஆனால் விடுதலைப்போராட்ட பின்புலம் கொண்டதினமணியை தனது அவாள் அரிப்பை சொறிந்து கொள்ளும் உஞ்சக் கட்டித் திண்ணையாகமாற்ற முனையும் போதுதான் பதில்சொல்ல வேண்டியது நேர்கிறது.


"இந்து சமய அறநிலையக் கட்டுப்பாட் டுக்கு உட்பட்ட நிலங்கள் அரசால்பிற பயன்பாட்டுக்கு மாற்றப்படக்கூடாது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மரியாதைக்குரிய அரங்க. மகாதேவன் உத்தரவுபோட்டுள்ளார். இது வரவேற்கத் தக்கதீர்ப்புதான். கொள்கை அளவில் அர சுகள் அதனை ஏற்றக் கூடியஉத்தரவுதான்.
இதனை வரவேற்று தலையங்கம் தீட்ட வந்த வைத்திக்கு,திடீரென்று கலை ஞர் நினைவுக்கு வந்துவிடுகிறார். உடனே, தி.மு.க. அரசையும் கலைஞரையும் நோக்கி தனது அழுக்குச் சிந்தனையை அப்பிவிடப் பார்க்கிறார். அவருக்கு முதலில் இந்துசமய அற நிலையத் துறையின் வரலாறே தெரிய வில்லை. 1923இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி யாளர்களால் இந்துசமய அற நிலையத் துறைபோர்டு' அமைக்கப்பட் டது என்கிறார். அதுவே தவறு. அன் றைக்கு சென்னைமாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சி ஆட்சியால் தான்இந்து சமய அறநிலையத்துறை அமைக்கப்பட்டது.


நீதிக்கட்சியினரில் பெரும்பாலானோர் ஆத்திகர்கள்தான். அன்றைய தினம் மதுரையில் இருந்து இயங்கிய பெரும் பாலும் பார்ப்பன வழக்குரைஞர்கள் உறுப் பினர்களாக இருந்த சங்கம்தான் இந்த ஆலோசனையை நீதிக்கட்சிக்கு வழங்கி யது. கோவில்சொத்துக்கள் கொள்ளை போகிறது. அதனை அரசுதான் காப்பாற்ற வேண்டும்என்று அவர்கள் சொன்னதின் படி இந்தத் துறை உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை மிகச்சரியாக அமல்படுத்தியவர்சுதந்திர இந்தியாவின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி. அவர் பழுத்த பக்தர்.அவர் ரமணமகரிஷி யின் சீடர்.அவர் இந்தச் சட்டத்தை அமல் படுத்த முனைந்தபோது எதிர்த்தவர்கள் வைதீகர்கள். அதனைச் செயல்படுத்தி னார். இத்தகைய வரலாறுகளைக் கொண்ட இந்து சமய அறநிலையச் சட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அதற்கான நோக்கம் சிதையாமல் செயல்படுத்திக்காட்டியது.


இதனை உண்மையான ஆன்மீகத் தலைவர்களான தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டி இருக்கிறார்கள். வைத்திகள் போன்ற வைதீகப் போலிகள் ஆசிர்வாதம் தி.மு.க.வுக்குத் தேவையில்லை!
இறை நம்பிக்கை இல்லாத தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோவில்கள் நலிவடைந்தன என்றும் வருமானம் குறைந்தது என்றும் வைத்திபுகார் வாசிக் கிறார். 1967முதல் அறநிலை யத் துறை செயல்பாடுகளை அவர் முழுமையாக கரைத்துக் குடித்து விட்டாரா?


1970ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச் சரும், தனி வரவு செலவுத் திட்டமும் இருந்தது இல்லை. இதனை உருவாக்கி யவர் முதல்வர் கலைஞர்! சட்டப் பேர வையில் அறநிலையத் துறைக்கு என தனி விவாதம் செய்த சூழ்நிலையையும் உரு வாக்கியவர் முதல்வர் கலைஞர்! ஓடாத திருவாரூர் கோயில் தேரை ஓட்டியது முதல் கும்பகோணம் மகாமகம் திருவிழா வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தது வரை எதிலும் குறைவைக்கவில்லை நாத்திகரானகலைஞர்!


எழுநூறு ஆண்டுகளுக்குப்பிறகு நெல்லையப்பர் கோவில் கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்தார் முதல்வர் கலைஞர். பழனிக்கோவில்மலைப் பகுதியை விரிவு படுத்தும் திருப்பணி வேலைகளை தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர். சிறியதும் பெரியதுமான அய்ந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளை அந்த ஒன்பது ஆண்டு காலத்தில் ( 1967-75) செய்து காட்டியது திராவிட முன்னேற் றக்கழக ஆட்சி! நாத்திகர் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோவில்கள் சிதைந்தன என்று சொல்லும் வைத்தி, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எத்தனை அற நிலையங் கள் இருக்கிறது என்பதை பட்டியல் போடுகிறார். அதனை மீட்டுக் கொடுத்தது யார்? அதே நாத்திக கலைஞர்தான்!


1967ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 9,600 அற நிலையங்கள் மட்டுமே இருந்தன. துறைக்கு கட்டுப்படாமல் பல்லாயிரக் கணக்கான கோவில்களும் அவற்றுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலமும் தனியார் வசம் இருந்தன. அதனை மீட்க முதல்வர் கலைஞர் அவர் கள், தனி அலுவலர் ஒருவரை நியமித் தார்கள். அவர் நடத்திய ஆய்வில்தான் தமிழகத்தில் 41 ஆயிரத்து 306 அறநிலை யங்களும், அவைகளுக்குச் சொந்தமாக 2 இலட்சத்து 1,343 ஏக்கர் நிலமும் தனியா ரிடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவைகளில் சுமார் 25 ஆயிரம் அறநிலை யங்களும், 65 ஆயிரம் ஏக்கர் நிலமும் அந்தக் காலக் கட்டத்தில் (1967 -75) மீட்கப்பட்டது.


வைத்தி சொல்லும் கணக்கு 36 ஆயி ரம் அறநிலையங்கள். அதில் 10 ஆயிரம் நீங்கலாக 25 ஆயிரம் அறநிலை யங்களை மீட்ட ஆட்சி திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி!


"வருமானத்தை கணிசமாக நாத்திகர் ஆட்சி குறைத்து நலிவடைய வைத்தது" என்கிறார் வைத்தி. இதுவும் பொய்.
1967க்கு முன்னால் தமிழ்நாட்டுக் கோவில்களின் ஆண்டு வருமானம் மொத்தம் ரூ.3 கோடி அளவுக்குத் தான் இருந்தது. 1975-76நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.12 கோடி ஆனது. 91-96 ஜெயலலிதா ஆட்சியில் கோவில்களின் மொத்த வருமானம் 365 கோடிரூபாய். கலைஞரின் 96-2001 ஆட்சி யில் கோவில்களின் மொத்த வருமானம் 648 கோடி ரூபாய்.


கலைஞர் நாத்திகராக இருக்கலாம். ஆனால்ஆட்சி அமைப்பை அனைவருக் கும் பொதுவாக நடத்தியதில் அவருக்கு நிகர் அவர்தான். என்ன செய்யலாம் இந்து அற நிலையத்துறைக்கு என்று யோசித்தபோது, நாத்திகர்களை அழைத்து முதல்வர் கலைஞர் ஆலோ சிக்கவில்லை. உண்மையான ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். 10.9.1989 அன்று அற நிலையங்களை பராமரிக்க ஒருகுழுவை அமைத்தார் முதல்வர்கலைஞர்.
அதில் தவத்திரு குன்றக்குடி அடி களார், முன்னாள் நீதி யரசர் கிருஷ்ணசாமி (ரெட் டியார்), திருவரங்கம் திருமலை (அய்யங்கார்), காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஆஸ்தான புலவர் செந்தில்நாதன், இராதா தியாக ராஜன் ஆகிய அய்வர்தான் இருந் தார்கள். நாத்திகர்கள் யாரும் இல்லை. ஒருவேளை அவாள் இல்லாதவர் அனை வரும் நாத்திகர்கள்' என்றால் நம்மிடம் அதற்கு பதில்இல்லை! 1989ஆம் ஆண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழு அமைத்தது போலவே 1996 ஆம் ஆண்டு ஆட்சியிலும் ஒரு குழு அமைத்தார் முதல்வர் கலைஞர்.
இதில் குன்றக்குடி ஆதினகர்த்தர், திருப்பனந்தாள் மடாதிபதி, திருவாவடு துறை ஆதின கர்த்தர், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், கருமுத்து கண் ணன் ஆகியோர் உறுப்பினர் களாக இருந்தார்கள். இவர்கள் ஆலோசணைகள் அனைத்தையும் செயல்படுத்தினார் முதல்வர் கலைஞர்! பெரும் பக்தர் ஜெயலலிதாவின் (1991-96) ஆட்சியில் 828 கோவில் களுக்குத் தான் குடமுழுக்கு விழாக்கள் நடந்தன. நாத்திகர் கலைஞரின் ஆட்சியில் (1996-2001) அய்ந்தாண்டுகளில் 2,459 கோவில் களுக்கு திருப்பணி நடைபெற்று குட முழுக்கு விழாக் கள் நடந்தன.


2006 - 2011 காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 539 கோவில் களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தியவர் முதல்வர் கலைஞர். மிகவும் சிதலமடைந்து இருந்த பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட 48 கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். தேவாரத் திரு முறைகளிலும் திவ்யப்பிரபந்தங்களிலும் பாடப்பட்டு நீண்டகாலமாக திருப்பணி மேற்கொள் ளப்படாத 30 கோவில்களை புனர மைத்தார்.  நிதி வசதிமிக்க கோவில்களின் உபரி நிதியிலிருந்து நிதி வசதியற்ற கோவில்களின் திருப்பணிக்கு நிதி உதவி கள் செய்ய வைத்தார். கிராமப்புற பூசாரிகள் நலவாரியம் அமைத்தார் முதல்வர் கலைஞர்.அறங் காவலர் குழுவில் ஒரு மகளிர்,ஒரு ஆதி திராவிடர் இடம்பெற வைத்தார். 114 கோவில்களில் நூலகம் அமைத்தார். ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முக்கிய பிர முகர்களுக்கு பரிவட்டம் கட்டுவதை நிறுத்தினார். ஒருகால வழிபாடு மட்டுமே நடக்கும் அளவுக்கு நிதிவசதியற்ற கிராமப் புறகோவில்களில் பணிபுரியும் பூசாரிக ளுக்கு இலவசமாக மிதிவண்டி கொடுத் தார். தமிழில் வழிபாடு நடத்த உத்தர விட்டார். தமிழில் மிகச் சிறப்பாக வழிபாடு செய்பவர்க்கு ஊக்கத்தொகை வழங் கினார். அனைத்துச் ஜாதியினரும் அர்ச் சகர் ஆகச் சட்டம் போட்டார். மொத்தத் தில் உண்மையான ஆத்திகரைவிட அதிகமாக நேர்மையாக, உண்மையாக கோவில்களை பராமரித்தார். இவை எதையும் தெரிந்து கொள்ள முயற்சிக் காமல் எடுத்ததெற்கெல்லாம் கலைஞ ரைக்குறைசொல்வது என்ன மாதிரி யான மேனியா?


காஞ்சிபுரம் கோவில் கர்ப்பக்கிரகத்தை காமக் களி யாட்ட விடுதியாக மாற்றிய தேவநாதன்களால் ஆலயங்கள் அறம் பிறழத் தொடங்கியதை வைத்தியநாதன் களால் எழுதமுடியாமல் போனது ஏன்? சிதம்பரம் கோவிலில் சாமிநடை மேடையில் செல்போன் பேசிக் கொண்டு பக்தர்களுக்கு அர்ச்சனை செய்ய மறுத்த அர்ச்சகர்களால் ஆலயங்கள் அறம் பிறழத் தொடங்கியதை வைத்தியநாதன் களின் பேனா எழுத முடியாமல் தடுப்பது எது? காலில் கொப்புளம் வர, வேகாத வெயிலில் பல மைல்தூரம் நடந்து செல் லும் முருக பக்தர்களை அவமானப் படுத்தும் வகையில் கையில் வேலுடன் ஆனால் காலில் செருப்புடன் யாத்திரை என்ற பெயரால் நடத்தப்படும் அரசியல் கோமாளித் தனத்தின் முகத்திரையைக் கிழிக்க முடியாமல் தடுப்பதுஎது?
இந்தக் கட்டுரையை தினமணி'யில் வெளியிடத் தயாரா, சொரணை இருக்கு மானால்? ஜாதி ஒன்றே இந்த அவதூறுகளின் பின்னணியாக இருக்குமானால் பெரியா ரும் அண்ணாவும் கலைஞரும் இன்னும் இன்னும்நமக்கு அதிகமாகவே  தேவைப் படுகிறார்கள் என்பதையே தினமணியின் தலையங்கம்  காட்டுகிறது.  தினமணிகள்  எழுதட்டும்,  அதுவே  திராவிடஇயக்கத்தை கூர் தீட்டும்!


- ப.திருமாவேலன், நன்றி: முரசொலி', 8.11.2020


No comments:

Post a Comment