கல்விக்கட்டணப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 24, 2020

கல்விக்கட்டணப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழக முதல்வருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை, நவ. 24 “கல்விக் கட்டணப் பிரச் சினையால் தங்களுக்கு தனியார்  மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான  நடவடிக் கையை தாமதமின்றி எடுக்க வேண்டும்” என்று முதல் வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை-அண்ணா அறிவாலயத்தில், 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்பு களுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் சந்தித்து தங்களது குறைகளைக் கூறினர்.


அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உடனிருந்தார். இதனை யடுத்து, பாதிக்கப் பட்ட மாணவிகள் மற்றும் இதே போன்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்தும் குறிப்பிட்டு, அவர்கள் உடனடியாக மருத் துவக் கல்வியில் சேர உரிய தேவையான நடவடிக் கையை எடுக்குமாறு வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிர மணியன் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான பி.கே.சேகர் பாபு ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


7.5 விழுக்காடு முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  “நீட்” தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, ‘போஸ்ட் மெட்ரிக்’  கல்வி உதவித்தொகை  மற்றும் இதர கல்வி உதவித் தொகை வழங்கும்  திட்டங்கள் மூலம்  நடை முறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக” அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந் தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும்,  நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத் தியிருக்கிறது. 


கலந்தாய்வின்போதோஅல்லதுஅதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோ ருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் - இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்றாகி விட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆகவே கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங் களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ஆக்கப் பூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மாணவர்கள் விவரம்


சேலத்தை சேர்ந்த மாற்று திறனாளி எஸ்.சுபத்ரா, திருச்சுழியை சேர்ந்த அருண்பாண்டி, உசிலம்பட்டியை சேர்ந்த  எஸ்.தங்கபாண்டி, தங்கப்பேச்சி, கடலூரை சேர்ந்த இலக்கியா, தர்ஷினி ஆகியோர் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கிடைத்த ஒதுக்கீட்டை ஏற்க வில்லை.


No comments:

Post a Comment