தந்தை பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் (1973 டிசம்பர் 24) ஓடி விட்டன என்றாலும் அவர்களின் தொலைநோக்கும் சித்தாந்தங் களும் நீக்கமற நிறைந்து விட்டன.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியதுபோல அய்யாவின் மண்டைச் சுரப்பை உலகம் தொழுது கொண்டு இருக்கிறது.
படித்தது நான்காம் வகுப்பே என்றாலும் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களும் முனைவர் பட்டத்துக்காக தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கருப் பொருளாகக் கொண்டுள்ளன.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar Inter National) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் பல நாடுகளிலும் அவரின் சிந்தனை மணத்தைக் கொண்டு செல்லுகின்றது.
பெரியார்தம் உயர் எண்ணங்கள் உலக மக்களுக்கானவை என்று உணரப்படும் நிலையை அறிய முடிகிறது.
தந்தை பெரியார் தம் சமூக நீதி என்பது கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என்கிற வட்டத்துக்குள் பயணிப்பதன்று. சமூக அமைப்பில் எந்த வடிவத்தில் அநீதிகள் தலைப்பட்டாலும், ஏற்றத் தாழ்வுகள் நடமாடினாலும், உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அதற்கு எதிரான புரட்சியின் தத்துவம்தான் தந்தை பெரியார் அவர்களுடையது.
1930ஆம் ஆண்டு மே திங்கள் நடந்த ஈரோட்டுச் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் குறிப்பிடுகிறார்.
"இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் கண்டித்துக் கொண்டு, மூடப் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டிக் கொண்டு, மூட மக்களைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்கும் என்றோ அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும் என்றோ யாரும் கருதி விடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினிக் கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு, சாயுமான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கின்ற வரையிலும்... சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும்.
சமதர்ம இயக்கம் உலக மக்கள் எல்லோரையும் பொருத்த இயக்கம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், அரிசனன் என்கிற வருணங்களை ஒழித்து, எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம் ஏழை என்றும், பணக்காரன் என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், கூலி என்றும் ஜமீன்தார் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்பு களையும், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்!" என்று இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன் முழங்கினார் என்றால், அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒளிரும் வெளிச்சம் அல்ல! ஏற்றத் தாழ்வை தேடித் தேடிச் சென்று ஆணி வேர் வரை அழித்து முடித்தே திரும்பும் தீவிரத் தகைமை கொண்டதாகும்.
இந்தியாவை எடுத்துக் கொள்ளலாமே, மதவாதம் பேசும் கூட்டம் ஆட்சிக் கட்டிலில், சமூக நீதியைச் சவக்குழியில் தள்ளும் ஆதிக்க ஜாதி அமைப்பு அரசாங்கத்தில்; 'லவ்ஜிகாத்' பேசுகிறவர் களும் இருக்கிறார்கள். மனுதர்மத்தைப் போற்றுவேரையும் பார்க்க முடிகிறது. மற்ற மதக்காரர்களைப் பார்த்து - 'நீ குடியுரிமையின்றியும் வாழத் தயாராக வேண்டும்' என்று பாசிசம் பேசும் பார்ப்பனீய கட்சியையும் பார்க்க முடிகிறது.
எங்கள் மொழி தான் உங்கள் மொழி என்ற பெயரில் தங்கள் கலாச்சாரத்தை மொழி வழி திணிக்கும் தீயவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பெண் சிசுக் கொலை, பாலியல் வன்கொடுமை நாளும், நாளும்!
சட்டத்தில் சோசலிசத்தை வைத்துக் கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு ஒருபுறம்; விவசாயம் பாவ தொழில் என்ற மனப்பான்மை கொண்ட இந்துத்துவ ஆட்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடுங்கும் குளிரிலும் இந்திய நாட்டுத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்த வேண்டிய அவலம் மற்றொருபுறம்.
இவற்றை எல்லாம் தொலைநோக்கோடு உள்ளடக்கி தான் இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு தந்தை பெரியார் எச்சரித்தார். அந்தக் கொள்கையைக் கொண்ட இயக்கம் - திராவிடர் கழகம் அதே பணிகளைத் தன் தோளின்மேல் சுமந்து கொண்டு நாளும் நடையும் ஓட்டமுமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. 88 ஆண்டுகளை எட்டிய தலைவர் அதே எண்ணத்துடன் இயங்கிக் கொண்டுள்ளார்.
இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் அழுத்தமாகத் தேவைப்படுகிற 'திராவிடத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் அந்தத் தத்துவம்; அனைவருக்கும் அனைத்தும் கூடாது என்பதுதான் ஹிந்து ஆன்மிக தத்துவம்.
"திராவிடம் வெல்லும் - வெல்லும்!"
மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!! இளைஞர் மத்தியில் சிந்தனைப் பூகம்பம் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!
தந்தைபெரியார் நினைவு நாள் சூளுரை இஃதே இஃதே!!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
வெல்க திராவிடம்!!
No comments:
Post a Comment