கடந்த 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் முக்கியமானது மத்திய அரசின் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்பதாகும்.
இந்தியாவில் உள்ள தேசிய மொழி 22இல் இந்தியும் ஒன்று. மக்கள் வழக்கில் அறவே இல்லாத சமஸ்கிருதமும் கூட இதில் இடம் பெற்றுள்ளது.
ஆட்சி மொழி இந்தி என்பது கூட அரசியல் சட்ட நிர்ணய சபையில் மேற்கொண்ட வாக்கெடுப்பில் ஆதரவும் - எதிர்ப்பும் சமநிலையில் இருந்த நிலையில் அவைத் தலைவரின் வாக்கால் (Casting vote) தப்பியது என்பது தான் உண்மை.
காங்கிரசை விட்டு காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து 1925 நவம்பரில் வெளியேறிய தந்தை பெரியார் 1926ஆம் ஆண்டிலேயே இந்திக்கு எதிரான - கருத்தினை கொண்டு இருந்தார். “குடி அரசு” இதழ் (7.3.1926) “தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்“ எனும் தலைப்பில் எச்சரித்தார்.
1937ஆம் ஆண்டில் சென்னை மாநில தலைமை அமைச்ச ராக இருந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியை பள்ளிக்கூடங்களில் திணித்தார். (21.4.1938 வெளியான அரசாணை)
தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடுடே இந்தி எதிர்ப்பில் கனன்று எரிமலையாக வெடித்தது (4.6.1938).
அன்று தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போர் இன்று வரை ஓயவில்லை.
இந்தி என்பது சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததே! 1937இல் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்த ஆச்சாரியார் சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் பேசம்போது - சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவே முதற்கட்டமாக இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று கூறத்தவறவில்லை.
எந்த மொழி மீதும் நமக்குத் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. எந்த மொழியையும் யாரும் படிக்கலாம் - அதனைத் தடுக்கப் போவதும் இல்லை.
திணிப்பு என்று வருகிறபோதுதான் எதிர்ப்பு என்னும் நெருப்பு களை கட்டுகிறது. அதுவும் இந்தி - சமஸ்கிருத திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பல்ல. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.
1938 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதே தந்தை பெரியாரால் அது தெளிவு படுத்தப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்று அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் அதற்கான எதிர்ப்புத் தீக்கணை வெடித்துக் கிளம்பும் மண் தமிழ்நாடே! அதனால்தான் இந்தி - ஆங்கிலம் இரண்டுமே ஆட்சி மொழி என்ற நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.
இப்பொழுது மத்தியில் இருக்கும் பா.ஜ.க.வின் கொள்கை என்பது - அதன் சித்தாந்தப்படி சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு என்பதாகும்.
இவ்வளவுக்கும் சமஸ்கிருதம் பேசும் மக்கள் இந்தியாவில் 0.01 விழுக்காடுதான். 25,000க்கும் குறைவுதான்.
அதுவும் கூட வைதிகம், கல்யாணம், கருமாதி, கோயில் அர்ச்சனை என்ற வட்டத்துக்குள் தான் மூச்சு வாங்கிக் கிடக்கிறதே தவிர, அன்றாட வாழ்க்கையில் எங்கும் பேசப்படுவதில்லை. சங்கராச்சாரியார்கள் கூட அந்த பூஜை வேளையில் தான் முணுமுணுப்பார்கள்.
ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை உடைய பி.ஜே.பி. அரசால் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டும் 643 கோடி ரூபாய் கொட்டி அழப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை - 2020 என்பதில் மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழியாக ஜெர்மன் இருந்தது. அது நீக்கப்பட்டு அந்த இடத்தை இந்த இரு மொழிகளும் பிடித்துக் கொண்டுவிட்டன.
இதிலும் தமிழ்நாடுதான் உணர்வு புடைத்து முன் வரிசையில் நின்று எதிர்ப்பையும் கண்டனத்¬¬யும் வெளிப்படுத்தியவண்ணமே உள்ளது.
இது மிகப்பெரிய திராவிட இயக்கத்தின் சாதனையாகும்.
தமிழ் செம்மொழி தகுதியை பெற்றதன் அடிப்படையில் தான், சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி தகுதி வந்ததென்பது பல பேர்களுக்கும் தெரிவதில்லை. நியாயமாக மக்கள் வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு செம்மொழி தகுதி என்பது தகுதி குறைவே ஆகும்.
செத்த மொழியை சிங்காரிக்க 643 கோடி ரூபாயை கொட்டி அழும் மத்திய அரசு தமிழை எல்லா வகையிலும் புறக்கணித்து வருகிறது.
செம்மொழிக்கான மத்திய நிறுவனத்தை சிதைத்து விட்டு அதனை பாரதிய பாஷா விஜா வித்யாலயா என்னும் பல்கலைக் கழகத்தில் இணைத்து செம்மொழியை ஒரு துறையாக குறுக்கும் குறுகிய புத்தியில் இருக்கிறது. மத்திய பி.ஜே.பி. அரசு.
இந்திக்கு சமஸ்கிருதத்திற்கு இடமில்லை என்றால். உங்கள் தமிழுக்கு மட்டும் உயர்ந்த இடத்தை எப்படி வழங்க முடியும் என்ற வன்மத்தோடு ஆர்.எஸ்.எஸ். கொள்கையுடைய மத்திய பா.ஜ.க. அரசு நடந்துக்கொண்டு வருவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாததல்ல. காரணம் இது தந்தை பெரியார் சிந்தனையை உள் வாங்கிய பூமி.
திராவிடர் கழகத் தலைமை செயற் குழுக் கூட்டம் அந்த வகையில் எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment