தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் போனதற்கு காரணம் தந்தை பெரியாருடைய கொள்கைகள்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 28, 2020

தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் போனதற்கு காரணம் தந்தை பெரியாருடைய கொள்கைகள்தான்

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உரை

சென்னை, டிச. 28-  தமிழ்நாட்டில் பா... காலூன்ற முடியா மல் போனதற்கு காரணம் தந்தை பெரியாருடைய கொள்கை கள்தான் என்றார்   சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்  அவர்கள்.

தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான  கடந்த 24.12.2020 காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் கருத்துரையாற் றினார். அவரது கருத்துரை வருமாறு:

ஆசிரியர் அய்யா அவர்களே, தோழர் பாண்டியன் அவர்களே,

தோழர் பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். தோழர் பாண்டியன் அவர்களும், ஆசிரியர் அவர்களுக்கும் ஒரே வயதுதான். இருவரில் யார் மூத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.

தோழர் பாண்டியனுக்கு அய்ந்து நிமிடம் கொடுத்தார்கள் உரையாற்றுவதற்கு. ஆனால், அவர் கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டார். ஏன் அய்ந்து நிமிடம் கொடுத்தார்கள் என்றால், அவருடைய உடல்நிலைக் கருதித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தோழர் பாண்டியன் அவர்கள், தள்ளுவண்டியில் அமர்ந்து அவர் வருவது இதுதான் முதல் முறை. அது எனக் குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

நான் மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றியபொழுது, என் னுடன் பணியாற்றியவர் இங்கே இருக்கும் கருணாநிதி. அவரை இங்கே பார்த்தவுடன் கேட்டேன், அவர் நான் இங்கேதான் இருக்கிறேன் என்றார்.

பெரியாருடைய கொள்கைகளைப்

பின்பற்றியதால்...

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பி.ஜே.பி.,க்குப் போகமாட் டோம். ஏனென்றால், பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றியதால் பி.ஜே.பி.,க்குப் போகமாட்டோம். இன்றைக்கு மேற்குவங்கத்தில்கூட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பி.ஜே.பி. ,யில் சேருகிறார்கள்.

பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய காலகட்டத்தில்தான் கூடுதலாகப் பேசப்படுகிறார். அவர் வாழ்ந்த காலத்தைவிட, இன்று அதிகமாகப் பேசப்படுகிறார்.

தோழர் பாண்டியன், தந்தை பெரியாரைத் தெரிந்துகொள் வதற்கு 40 ஆண்டுகாலம் ஆயிற்று. எனக்கும் அதேபோலத் தான்.

நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு இலங் கைத் தமிழர் பிரச்சினையில் வெளியேறி,  முழுநேரம் வழக் குரைஞரானேன். தோழர் பாண்டியன் முழுநேர ஊழியரானார். அதுவரை நான் பெரியாரை அறிந்திருக்கவில்லை.

எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியவர்

ஒரு பேராசிரியர்

எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியவர் ஒரு பேராசிரியர், அவர் ஒரு அம்பேத்கர்வாதி - அவர் ஒரு மார்க்சியவாதியும்கூட.

பேராசிரியர் இளங்கோவன் அவர்கள்தான். தலித்முரசு இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கின்றவர். புனித பாண்டி யனுக்கு ஆசிரியர் அவர்.

என்னை நான், மார்க்சியவாதியாகவும், பெரியாரியவாதியா கவும், அம்பேத்கர்வாதியாகவும்தான் பார்த்துக் கொள்கிறேன்.

தோழர் பாண்டியன் அவர்கள் பேசும்பொழுது பெரியாரு டைய கருத்து தமிழ்நாடு முழுவதும் போகவில்லை என்றார். ஆனால், முன்பை விட பெரியார், இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் போயிருக்கிறார் என்பதுதான் என்னுடைய கருத்து. இன்றைக்கு உள்ள சிறுவர்களுக்கு எல்லாம் பெரியாரைப்பற்றி தெரியும். என்னுடைய மகனுக்குத் தெரியும். நான் பெரியாரைப்பற்றி அவனுக்குச் சொல்லித் தரவில்லை; அவன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனால், அவனுக்குத் தெரியும்.

பெரியாரிய கருத்துகளால் உந்தப்படுகின்ற பிள்ளைகள்தான்

இன்றைக்கு அமித்ஷா வந்தால், ‘‘கோபேக் அமித்ஷா'' என்று பதிவிடுகிறவர்கள் யார்? ‘‘கோபேக் மோடி'' என்று பதிவிடுகிறவர்கள் யார்? இளைஞர்கள்தான் - பெரியாரிய கருத்துகளால் உந்தப்படுகின்ற பிள்ளைகள்தான் என்று நான் கருதுகிறேன்.

எனவே, பெரியார் இன்றும் வாழ்கிறார் - அவருடைய கருத்து வாழ்கிறது.

ஒரு கருத்தை நான் சொல்கிறேன், நாங்கள் ஆட்சி செய்த திரிபுராவில் எங்கள் கண்களுக்கு முன்பாகவே லெனின் சிலையை உடைத்தெறிந்தார்கள். ஒன்றும் செய்ய முடிய வில்லை எங்களால்.

இங்கே பெரியார் சிலை திருட்டுத்தனமாகத்தான் சேதப் படுத்தப்படுகிறது.

அங்கே செய்வதுபோல், நேரிடையாக உடைத்தெறிய முடியவில்லை. அதுதான் இன்றைக்கு நாம் பேசப்போகின்ற செய்தியாக இருக்கவேண்டும் - இன்றைய பெரியாருடைய நினைவு நாளில்!

இன்னொரு பெரிய அரசியல் செய்தி ஒன்றைச் சொல்லுகிறேன். இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்தில் மட்டும், வேறு எங்கேயும் இல்லை, அதை நிச்சயமாகச் சொல்ல முடியும். தமிழகத்தில் மட்டும், 1967 ஆம் ஆண்டிலிருந்து எந்தத் தேசிய கட்சியும் இல்லாமல் போனது.

எனவே, இங்கே காங்கிரசும் காலூன்ற முடியவில்லை; பி.ஜே.பி.யும் காலூன்ற முடியவில்லை; அவர்களும் எப்படி எப்படியோ காலூன்றலாம் என்று முயற்சிக்கிறார்கள், ஆனால், அது முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன வென்றால், பெரியாருடைய கொள்கைகள்தான்.

மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா அம்மையார்கூட கேட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதலில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்!

தா,பா, அவர்கள்  கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளி யிட்டதைப்பற்றி சொன்னார்கள். இன்று நூற்றுக்கணக்கான பதிப்புகள் வந்துவிட்டன. ஆனால், முதலில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.

பகத்சிங்னுடைய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? நூலை தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.

அதேபோன்று, அம்பேத்கருடைய Annihilation of Caste நூலை தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.

ஆசிரியர் அய்யா அவர்களிடம் கேட்டால், இதுபோன்ற பல நூல்களை தமிழில் முதலில் வெளியிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பெரியார் எழுதிய "மார்க்சும் - லெனினும்" நூலை படித்தேன். அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் பெரியார்.

அங்கே 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த காரல்மார்க்ஸ், அய்ரோப்பிய சமூகத்தைத் தன்னுடைய களமாகக் கொண் டார். மார்க்சுக்கு முன்பே அங்கே முடியாட்சி ஒழிக்கப்பட்டு, நவீன இயந்திரப் புரட்சியின் காரணமாக, தொழில்முனைவோர் என்கின்ற முதலாளிகள் என்கின்ற செல்வந்தர்கள் ஆட்சி அமைக்கிறார்கள். இவர்கள், 16 ஆம் நூற்றாண்டில் சார்லசு மன்னனை தூக்கில் போடுகிறார்கள். ஆனால், தூக்கில் போட்டதற்கு சரித்திரத்தில் என்ன சொல்லுவார்கள், காமன்ஸ் என்பார்கள். சாதாரண மக்கள், தொழிலாளர்கள் தூக்கில் போட்டார்கள் என்பார்கள்.

அதற்குப் பிறகு 1877இல் லூயி மன்னன் வெட்டி எறியப் பட்டான்.

இந்தப் பின்னணியில் மார்க்சு, அய்ரோப்பாவில், முடி யாட்சி போய், வர்க்கப் புரட்சியைப்பற்றியும், பெண் விடு தலையையும்பற்றி பேசுகிறார். ஆனால், மார்க்சுக்கு அய் ரோப்பாவில் இல்லாத ஒன்று ஜாதி. அதுதான் அடிப்படை.

ஜாதியின் ஆதிக்கத்தை புரிந்துகொள்ளாமல், சமத்து வத்தை எப்படி கொண்டு வருவார்கள்?

அய்ரோப்பாவில் முதலாளிகள் ஆண்டார்கள்; இங்கே சனாதனமும், வருணாசிரமும் ஆளுகிறது. பார்ப்பனர் தலை மைதானே இங்கே இருக்கிறது. சமத்துவம் எங்கே இருக்கிறது? இதனைப் புரிந்துகொள்ளாமல், ஜாதியின் ஆதிக்கத்தை இங்கே புரிந்துகொள்ளாமல், சமத்துவத்தை எப்படி கொண்டு வருவார்கள் என்பதுதான் அடிப்படையான கேள்வி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக உள்ள தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு இங்கேபெரியார் விருது' வழங்கினார்கள்.

ஒரு மார்க்சிய விருதினை ஆசிரியர் அவர்களுக்கு வழங்க முடியுமா? கம்யூனிஸ்ட் கட்சியால்!

அவருடைய கட்சியில், மார்க்சினுடைய 200 ஆவது பிறந்த நாளிலோ அல்லது வேறொரு நாளிலோ ஒரு மார்க்சிய விருதினை அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வழங்க முடியுமா கம்யூனிஸ்ட் கட்சியால் என்றால், எனக்குத் தெரியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி இன்றுகூட அதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அவர் கட்சியில் இருந்துகொண்டு பேசுகிறார்; இதனால் அவருக்கு பல சிரமங்கள் உண்டு. இங்கே நிறைய விஷயங் களைச் சொன்னார், எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

முதுமை வந்துவிட்டால், இனிமேல் சொல்லவேண்டும் என்று சொல்கிறாரா? என்று தெரியவில்லை. நான் பேசலாம், எனக்கு எந்த சிரமமும் இல்லை.

சமூகநீதி என்பது ஜாதி ஒழிப்பை உள்ளடக்கியது. சமூக நீதியை, சமநீதியை ஜாதி ஒழிப்பு இல்லாமல் உங்களால் செய்ய முடியாது. அதனுடைய விளைவு இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிறது.

மார்க்ஸ் காலத்திலேயே, அங்கே முடியாட்சி இருந்த கொடுமையின் காரணமாகத்தான், ஜெர்மனியிலிருந்து அவர் விரட்டப்பட்டார். பெல்ஜியத்திலிருந்து அவர் விரட்டப் பட்டார். பிறகு அவர் லண்டனில் வந்து வசித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் வசிக்க முடியாது; தமிழ்நாட்டில் வசிக்கலாம்!

அதேபோன்று, இன்று இந்தியாவை எடுத்துக் கொண்டால், உங்களால், உத்தரப்பிரதேசத்தில் வசிக்க முடியாது; தமிழ்நாட்டில் வசிக்கலாம். இதுதான் வித்தியாசம்.

தமிழ்நாட்டில் மட்டும் ஜாதிக் கொடுமை இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கிடையே இருக்கக்கூடிய சண்டையில்லை. சூத்திரர்களுக்கும் - பஞ்சமர்களுக்கும் இணக்கமான வாழ்வு வந்ததாக சொல்ல முடியாது. கிராமங்களில் இன்னும் சேரி தனியாகத்தான் இருக்கிறது. ஆணவக் கொலை இன்றைய காலகட்டத்திலும் நடக்கிறது.

வடக்கே எடுத்துக்கொண்டால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தடைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் வெளிவந்த செய்தி ஒன்றில், வழக்கு ஒன்றில், லதா சிங் என்பவர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். குப்தா என்ற பிசினஸ் கம்யூனிட்டியை  திருமணம் செய்துகொள்வதற்காக, அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறார்கள். இறுதியில் உச்சநீதிமன்றம் சென்றவு டன்தான் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

2019 இல் நடந்த சம்பவம் ஒன்று, அய்தராபாத்தில் அவந்தி ரெட்டி என்கிற ஒரு பெண், ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த இவர், ஹேமந்த் குமார் என்ற வைசிய சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததினால், ஹேமந்த் குமார் கொலை செய்யப்படுகிறார்.

பெரியாருடைய நுண்ணாடியில் ஆணவக் கொலை; மனுவின் கண்ணாடியில் கவுரவக் கொலை

தமிழ்நாட்டிலும் அதுபோன்று நடைபெறுகிறது - இங்கே சூத்திரர்களும் - தாழ்த்தப்பட்டவர்களும் திருமணம் செய்து கொண்டால், கொலை நடைபெறுகிறது. ஆனால், அதைக்கூட நாம் ஆணவக் கொலை  என்கிறோம்; அவர்கள் அதை கவுரவக் கொலை என்கிறார்கள்.

பெரியாருடைய நுண்ணாடியில் அது ஆணவக் கொலை; மனுவின் கண்ணாடியில் அது கவுரவக் கொலை.

இன்னும்கூட, கும்முடிப்பூண்டிக்கு அருகில் ஒரு தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊர் தலைவரால் கொடியேற்ற முடியவில்லை. அதேபோல, மாயூரத்தில் கொடியேற்ற முடியவில்லை.

வாணியம்பாடியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்த உடலை எடுத்துச்செல்வதற்குப் பாதை மறுக்கப்பட்டதால், பாலாற்றில் இறங்கிச் செல்லும் நிலைமை.

கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய என்னுடைய சகோதரர் நீதிபதி கிருபாகரன் அமர்வு சொல்லியிருக்கிறது, மேலூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரின் உடலை எடுத்துச் செல்ல பாதை இல்லாதது, எங்களுக் குத் தலைகுனிவாக இருக்கிறது என்று.

இதுபோன்ற நிலையை, உத்தரப்பிரதேசத்திலும், பீகாரி லும் காண முடியாது.

இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னார்கள், என்னுடைய முகநூலில் பதிவிட்ட செய்தியைப் பற்றி.

மத்திய அமைச்சரவையில் இருக்கின்ற

58 அமைச்சர்களில் 38 பேர் பார்ப்பனர்

இப்பொழுது இருக்கக்கூடிய மோடி அமைச்சரவை மட்டுமல்ல; இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அமைச்சரவையிலும்கூட, மத்திய அமைச்சரவையில் இருக்கின்ற 58 அமைச்சர்களில் 38 பேர் பார்ப்பனர்களும், மேல்ஜாதிக்காரர் களும்தான்.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், மூன்று நீதிகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என்று.

அரசியல் நீதியில் ஒரு பெரிய மைல் கல்லை

நாம் அடைந்துவிட்டோம்!

அம்பேத்கர் அவருடைய இறுதி உரையில், நாம் அரசியல் நீதியில் ஒரு பெரிய மைல் கல்லை அடைந்துவிட்டோம். என்னவென்றால், அனைவருக்கும் ஒரே வாக்கு என்பதை 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் வந்த அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

அதாவது, அனைவருக்கும் ஒரு வாக்கு. அனைத்து ஜாதியினருக்கும் ஒரு வாக்கு. அனைத்து மதத்தினருக்கும் ஒரு வாக்கு. ஆண்கள் - பெண்கள் அனைவருக்கும் ஒரு வாக்கு. ஏழை - பணக்காரனுக்கு ஒரு வாக்கு.

எனவே  அரசியல் தளத்தில் சமத்துவத்தை அடைந்துவிட் டோம். ஆனால், சமூக தளத்தில் ஜாதீய ஏற்றத்தாழ்வு இருக் கிறது; அதேபோன்று பொருளாதார தளத்தில் இருக்கிறது என்று அம்பேத்கர் சொன்னார்.

ஆனால், அதுகூட உண்மை இல்லை என்று நான் என்னுடைய முகநூலில் எழுதியிருக்கிறேன்.

ஏனென்றால், ஒருவருக்கு ஒரு வாக்கு என்று இருந்தாலும், 38 பேர் - பார்ப்பனர் - உயர்ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சதவிகிதம் 5 முதல் 10 சதவிகிதம்தான் இருக் கிறார்கள்; ஆனால், 70 சதவிகிதம் பதவியில் இருக்கிறார்கள்.

ஆசிரியர் அய்யாவிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

உயர்நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்துவார்கள்; ‘‘சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உயர்நீதிமன்றத்தில் வாய்ப்பு கொடு'' என்று.

இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில், 30 நீதிபதிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர்கூட பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. ஒரே ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைக்கூட அண் மையில்தான் நியமித்தார்கள். அதற்குமுன் .பி.சி. சமூகத் தைச் சேர்ந்த பானுமதி அம்மையார் நீதிபதியாக இருந்தார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு இஸ்லாமியர், ஒரு கிறித்துவர் நீதிபதியாக இல்லை.

ஏனென்றால், ஓட்டு போடுகின்ற இடத்திலேயே அவன் மெஜாரிட்டியாக அமர்ந்து கொள்கிறான். இந்நிலை இருந்தால், என்னாகும்?

நீதித்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு

இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும்தான்!

தமிழ்நாட்டில் மட்டும்தான், நீதித்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது.

மேற்குவங்கத்தில், திரிபுராவில், மற்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஏனென்றால், ஜாதி இருப்பை ஒத்துக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில்கூட, மத்திய அரசு நிறுவனங்களான அய்.அய்.டி., போன்றவற்றில் இட ஒதுக்கீடு இல்லை. 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களின் கண்ட்ரோலில் இருக்கின்ற இடத்தில், சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றை செய்ய முடிந்தது.

ஆனால், அய்.அய்.டி.யில் இந்நிலை உண்டா?

மீனா கந்தசாமி சொல்கிறார்; வசந்தா கந்தசாமியின் மகள் அவர். எப்படி இட ஒதுக்கீட்டை முறியடிக்கிறார்கள் என்று.

அய்.அய்.டி.யில், மத்திய அரசு அலுவலகங்களில், வங்கியில், .என்.ஜி.சி.யில், இட ஒதுக்கீடு இருக்காது.

இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 பேரில், 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நிச்சயமாக இதில் பெரியாருக்குப் பங்கு உண்டு.

மத்திய பிரதேசத்தில், இரண்டு பெஞ்ச். இந்தூரில் இருந்த ஒரே அம்மையார் இறந்துவிட்டார், கரோனா தொற்றினால். குஜராத்தில் ஒருவர் இருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ளது போன்ற நிலை, மகாராட்டிராவில் கிடையாது, டில்லியில் கிடையாது.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியில் வந்தது. அதேபோன்று பெண்களுக் குச் சொத்துரிமை வருவதற்கு அடிப்படை என்ன? இவற்றுக் கெல்லாம் பெரியார்தான் பின்னணி.

சுயமரியாதை திருமண சட்டத்தில்

திருத்தம் தேவை!

தமிழ்நாட்டில்தான் சுயமரியாதை திருமண சட்டம் இருக்கிறது. நான்கூட சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் கீழ்தான் என்னுடைய திருமணத்தைப் பதிவு செய்தேன்.

ஒரு இந்துவும் - இஸ்லாமியரும், ஒரு இந்துவும் - கிறித்து வரும் திருமணம் செய்துகொண்டாலும், சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லுபடியாகவேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும். அது நமக்கு முதல் வெற்றியாக இருக்கும்.

பெரியாருடன் பயணித்தவர்கள், அநேகமாக மிகப்பெரிய ஆளுமைகள். குன்றக்குடி அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார், ஆன்மிகத்தில் மிகப்பெரிய அளவிற்கு நம்பிக்கை உள்ளவர். என்னுடைய சீனியர் செந்தில்நாதன் அவர்கள் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்,

திரு.வி..வும், பெரியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் உள்ள பெரியார் வீட்டில், திரு.வி.. தங்கியிருந்தார். காலையில் எழுந்தவுடன் திரு.வி.. அவர்கள் நெற்றியில் பட்டை போடுவார். அவர் சைவர்.

திரு.வி.. அவர்கள் குளித்து முடித்துவிட்டு வந்ததும், பெரியார் அவர்கள், திருநீறை எடுத்துக்கொண்டு போய், ‘‘இந்தாங்க, கல்யாண சுந்தரம்'' என்கிறார்.

உடனே கல்யாண சுந்தரம், பெரியாரைப் பார்த்து, "நீங்க தான் சாமியே கும்பிடமாட்டீர்களே, எதற்கு?'' என்கிறார்.

பெரியார், ‘‘எனக்கில்லை, உங்களுக்கு'' என்கிறார்.

இதுதான் நம்முடைய அரசியல். நம்முடைய அரசியல் ஆன்மிகத்தை எதிர்ப்பதல்ல.

ஆன்மிக அரசியல் என்பது,

சனாதனத்தின் அரசியல்!

பெரியார் சொல்கிறார், எனக்கும், கடவுளுக்கும் என்ன சர்ச்சை இருக்கிறது என்கிறார். எனக்கும் கடவுளுக்கும் சர்ச்சை இல்லை. எனக்கும், ஜாதிக்கும்தான் சர்ச்சை.

ஜாதிக்கு ஆதரவாக கடவுள் நிற்கிறார், எனவே, கடவுளு டன் சர்ச்சை. வேதத்துடன் சர்ச்சை, புராணத்துடன் சர்ச்சை.

எனவே, ஆன்மிகத்தின் மீது நமக்கு எதிர்ப்பில்லை. ஆன்மிக அரசியல் என்பது, சனாதனத்தின் அரசியல்; வருணாசிரம அரசியல்.

நம்முடைய அரசியல், சமூகநீதி அரசியல். பெரியாருடைய மறைவு நாளில் சொல்லுவோம், நமது அரசியல், சமூகநீதி அரசியல் என்று.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்  கருத்துரையாற்றினார்.

No comments:

Post a Comment