எந்த லட்சியத்திற்காக தோழர் பாண்டியன் வாழ்நாளெல்லாம் உழைத்தாரோ- அந்த லட்சியத்தை நாம் அடைவதற்குக் கட்டுப்பாடு காத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

எந்த லட்சியத்திற்காக தோழர் பாண்டியன் வாழ்நாளெல்லாம் உழைத்தாரோ- அந்த லட்சியத்தை நாம் அடைவதற்குக் கட்டுப்பாடு காத்து

 பொதுவுடைமை சமுதாயத்தை - பொதுவுரிமை சமுதாயத்தை உருவாக்குவோம்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, பிப்.27   தோழர் பாண்டியன் அவர்கள் எந்தப் பணியை நோக்கி - தன்னுடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் வாழ்நாளெல்லாம் உழைத்தார்களோ - அந்த லட்சியத்தை நாம் அடை வதற்கு கட்டுப்பாடாக இருந்து, புதிய மாற்றமுள்ள ஒரு சமுதாயத்தை - ஒரு சிறந்த சமுதாயத்தை - ஒரு பொதுவுடைமை சமுதாயத்தை - பொதுவுரிமை சமுதாயத்தை உருவாக்குவோம். இதுதான் பாண் டியன் அவர்களுக்கு நாம் எழுப்பப் போகின்ற நினைவுச் சின்னம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று (26.2.2021) பொதுவுடைமை கட்சியின் சுயமரியாதை வீரர் மறைந்த தா.பாண்டியன் அவர் களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

தோழர் பாண்டியன் வரலாறாகிவிட்டார்!

88 ஆம் அகவையில்கூட முதுமை என்பதைப் பற்றிகவலைப்படாமல்,தன்னைத்தாக்கிய நோய்களைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமுதாயத்தினுடைய நோய்கள் என்ன? நாட் டில் ஏற்பட்டிருக்கின்ற நோய்கள் என்ன? என்பதைப் பற்றியே எப்பொழுதும் கவலைப்பட்டு, தன்னுடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் உழைத்து, ‘‘பொதுவுடைமை கொள்கைதனை திசையெட்டும் சேர்ப்போம்; துரிதமோடு அதை எங்கள் உயிரெனக் காப்போம்'' என்று சூளுரைத்து, அதற்காக தன்னு டைய வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் பாண்டியன், இன்றைக்கு நம்மிடையே வரலாறாகி விட்டார்.

எளிதில்ஏற்றுக்கொள்ளமுடியாதஒன்று என்றாலும், இயற்கையின் விதியை பகுத்தறி வாளர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பாண்டி யனுடைய ஆற்றல், திறமை, ஆளுமை, நாட்டின் பொதுச்சொத்தாக ஆகியதே தவிர, அவர் ஒரு போதும் தன்னுடைய குடும்பத்திற்கோ, தன்னு டைய பிள்ளைகளுக்கோ அதை ஒரு தனிச் சொத்தாக ஆக்கியதில்லை. பொதுவுடைமை இயக்கத்திற்கு அதனை சொத்தாக ஆக்கினார்; சுயமரியாதை வீரர்களுக்கு அதனை சொத்தாக ஆக்கினார்.

கடைசி மூச்சடங்குகிற வரையில்

போர் வாளாக - தளபதியாக இருந்தார்!

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், எப்படி தோழர் ஜீவா அவர்கள், பெரியார் அவர்களுக்கு மிகப்பெரிய துணையாக இருந்தார்களோ, அது போல, திராவிட இயக்கத்திற்கு, முற்பாக்குச் சிந்தனை யாளர்களுக்கு, சமதர்மவாதிகளுக்கு, மதச்சார்பின் மையை வலியுறுத்தி மிகப்பெரிய  அளவிற்கு இன் றைக்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய போர் வாளாக, தளபதியாக களத்தில் கடைசி மூச்சடங்குகின்ற வரையில் இருந்தார்.

மதுரையில் அவருடைய சிங்கக் கர்ஜனை - என்றைக்கும் சங்கநாதமாக நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

பொதுவுடைமை சமுதாயத்தை - பொதுவுரிமை சமுதாயத்தை உருவாக்குவோம்

இன்றைய காலகட்டத்தில், பாண்டியன்கள் மறைவதில்லை; பாண்டியன்களுடைய செய்திகள் நம்மை வழிநடத்தும். பாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நாளில், அவருக்காக இரங்கல் - ஆறுதல் கூறுகின்ற இந்த நாளில், அவர் எந்தப் பணியை நோக்கி - தன்னுடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் வாழ்நாளெல்லாம் உழைத் தார்களோ - அந்த லட்சியத்தை நாம் அடைவதற்கு கட்டுப்பாடாக இருந்து, புதிய மாற்றமுள்ள ஒரு சமுதாயத்தை - ஒரு சிறந்த சமுதாயத்தை - ஒரு பொதுவுடைமை சமுதாயத்தை - பொதுவுரிமை சமுதாயத்தை உருவாக்குவோம்.

இதுதான் பாண்டியன் அவர்களுக்கு நாம் எழுப்பப் போகின்ற நினைவுச் சின்னமாக என்றைக்கும் இருக்கும்.

அந்த வகையில், அவரை இழந்து தவிக்கின்ற வர்கள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினர் மட்டுமல்ல - அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்ல - திராவிட இயக்கத்தினர் மட்டுமல்ல -  நாணயமுள்ள பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, ஆறுதல் கூறுகிறோம். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகி றோம். ஆறுதலைத் தேடுகிறோம்.

பாண்டியன் கொள்கையாக வாழ்கிறார்

அதேபோல, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அருமைத் தோழர் முத்தரசன் அவர்களுக்கும், அகில இந்திய அளவில் இருக்கின்ற இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் நம்முடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாண்டியன் மறையவில்லை -

பாண்டியன் கொள்கையாக வாழ்கிறார் -

நம்மை வழிநடத்துவார் என்று தெளிவாகச் சொல்லி,

பாண்டியன் விட்ட பணிகள், நம்முடைய கடமை களாக என்றைக்கும் களத்தில் நிற்கும் என்று கூறி,

பாண்டியன் வாழ்க!

பாண்டியன் விழைந்த ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவதற்கு நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக! நன்றி, வணக்கம்

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment