மணியம்மையாரை நெகிழ வைத்த நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 10, 2021

மணியம்மையாரை நெகிழ வைத்த நிகழ்ச்சி

பெரியாரோடு நான் 30 ஆண்டு, 3 மாதம், 13 நாள்கள் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11 ஆம் நாள் வந்தடைந்த அன்று முதல் இன்றுவரை ஒரு நாளும் அவரை விட்டுப்பிரியாது மகிழ்ந்த நான், ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடு நடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே, என்றும் இல்லாத அளவுக்கு வெகு சிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி, அவரது திருஉருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே - நானும் அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு, அது முடிந் ததும், அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாத தனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதயவலி முதன்முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பு, என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும், அன்று வந்திருந்த நமதியக்கத் தோழர்கள் பட்டபாட்டையும் பின்னர், உடல்நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும், அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து, அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்.

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன். எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்கமுடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான் வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கின்றது. இயற்கையை வெல்வது கடினம் தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே, வீண்பழிக்கும் பொல்லாப்புக்கும் (பலபேரின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி) எந்த ஏற்பாடுகள் செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன், என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார்.

அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன் னேன், இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப்பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப்பற்றி வண்டி வண்டியாய்ச் சொல்வீர், கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்கவேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன் கடினமாகச் சொன்னேன். உடனே, தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலேயே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும்;

அன்னை மணியம்மையார் விடுதலை 04.01.1974

No comments:

Post a Comment