பிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

பிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம்

ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, மே 6 மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தைக் கண்காணிக்கும் குழுவிடம் மத்திய பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் இல்லம் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், பிரதமர் மோடியின் ஈகோதான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது. ரூ.13,450 கோடியை மக்களின் தடுப்பூசித் திட்டத்துக்குச் செலவிடாமல், கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க செலவிடாமல், பெருந்தொற்றுக் காலத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிதியுதவி வழங்கச் செலவிடாமல், எதற்காக மத்திய விஸ்டா திட்டத்துக்குச் செலவிடுகிறார்கள்?

மத்திய விஸ்டா திட்டத்துக்காகச் செலவிடும் ரூ.13,450 கோடியின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு நியாய் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment