"பத்ம சேஷாத்ரி பால பவன்" பள்ளி விவகாரம் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது. மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கையில் ஆரம்பித்த இந்தப் பிரச்சினை இப்பொழுது வேறுவேறு தளங்களில் முண்டியடித்துக் கிளப்பப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குற்றவாளியான ஆசிரியர் கொடுத்துள்ள தகவல்கள், அந்தப் பள்ளியைப் பற்றிய சித்திரத்தின் செயற்கைத் தன்மையான முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டது. முறைப்படி காவல்துறையும், கல்வி அதிகாரிகளும் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
ஆனால், இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச் சினையாக உருமாற்றி வருபவர்கள் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று பொதுவாகக் கூறப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்!
'எங்களப்பன் குதிருக்குள் இல்லை!' என்று சொன்னவன் போல, பார்ப்பன ஊடகமான 'தினமலரும்', பார்ப்பன அடாவடிப் பேச்சுக்குப் பெயர் போன அரசியல் புரோக்கர் சு.சாமி, மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் (அஇஅதிமுக) போன்றவர்கள் தான் - இதனை ஓர் இனவாதப் பிரச்சினையாக உருமாற்றி உறுமுகிறார்கள்.
தி.மு.க. என்றால், அது ஒரு திராவிட இயக்கம், அரசியல் கட்சி, பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் வழி வந்தது என்றெல்லாம் மனதிற் கொண்டு ஒரு கற்பனைக் கதா யுதத்தைக் கையில் தூக்கிக் கொண்டு, அந்தத் திரைமறைவில் தப்பிக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவே உணர முடிகிறது.
சமூக, வலைதளங்களில் 'கிரிஜா அம்மையார் தலைமைச் செயலாளராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? குறைந்த பட்சம் தி.மு.க. ஆட்சிக்கு வராமல், எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இது நடந்திருக்குமா?" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பரப்புவோர் யார்?
சு.சாமியோ இதன் பின்னணியில் தி.க. இருக்கிறது ("தினமலர்" 28.5.2021 பக்கம் 11) என்றெல்லாம் கூறுவது எதன் அடிப்படையில்? இதில் ஏதாவது துளியளவேனும் உண்மை உண்டா?
"முதல்வருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விவகாரம் இது" என்று 'தினமலர்' முதலமைச்சரின் குடும்பத்தை இழுத்தெல்லாம் எட்டு பத்தி தலைப்பிட்டு (28.5.2021). 'சாங்கோ பாங்கமாக' எழுதுவதன் உள்நோக்கம் என்ன?
இப்படியெல்லாம் ஒரு பிம்பத்தை உருவாக்கினால், கரோனா ஒழிப்பில் மிகத் தீவிரமான பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. 'இந்த நேரத்தில் ஏன் இந்தப் பிரச்சினை?' என்று நினைத்து ஒதுங்கிக் கொள்ளச் செய்து விடலாம் என்கிற அவர்களுக்கே உரித்தான தந்திர உபாயம் தான் இது.
சம்பந்தப்பட்ட பள்ளியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குக் காரணம் தி.க.வோ, தி.மு.க.வோ அல்லவே! பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஓர் அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதனை முறைப்படி செய்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இதில் இனப் பிரச்சினையைக் கொண்டு வந்து திணிப்பவர்களே பார்ப்பனர்கள்தான்! தி.மு.க. அரசு இருப்பதால் வேறு மாதிரியாக இந்தப் பிரச்சினையைப் பார்க்கும் என்ற கற்பிதத்தின் அடிப்படையில் - பள்ளியின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும், காரணமும் இருக்கும் பட்சத்தில் - அதற்கு உள்நோக்கம் கற்பிப்பதற்கான 'தோதுமாதுகளை'த் தொடக்கத்திலேயே தந்திரமாக உருவாக்குகிறார்கள் என்பதை விவரம் தெரிந்தவர்கள் துல்லியமாகவே உணருவார்கள்.
பள்ளியின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆட் சியையே கவிழ்த்து விடுவேன் என்கிறார் அரசியல் புரோக் கரான சு.சாமி - இது என்ன மரப்பாச்சி விளையாட்டா?
இது போன்ற 'விபூதி வீரமுத்து சாமிகளை' எல்லாம் பார்த்து வந்த இயக்கம் தான் திராவிட இயக்கம்! பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது - நினைவிருக்கட்டும்!
இந்தப் பள்ளியின் பூர்வோத்திரம் என்ன? இவர்கள் கைக்கு எப்படி வந்தது என்பதற்குள் கூடப் போக வேண்டாம்!
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை அதன் நட வடிக்கைகள் சார்புக் கண்ணோட்டத்தில் இருக்காது என்பது மட்டும் உறுதி - உறுதியினும் உறுதி!
அதே நேரத்தில் இந்தப் பிரச்சினையை வேறு ஒரு தடத்துக்கு இழுத்துச் சென்று திசை மாற்றும் உபாயத்தினால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தால் தமிழக அரசு அதற்குப் பலியாகாது என்பதும் உறுதியே!
No comments:
Post a Comment